கருவறைக்குள் சூரியஒளி விழும் அதிசயம் கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலின் சிறப்பம்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருவறைக்குள் சூரியஒளி விழும் அதிசயம் கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலின் சிறப்பம்சம்

Updated : செப் 10, 2017 | Added : செப் 10, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 கருவறைக்குள் சூரியஒளி விழும் அதிசயம்  கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலின் சிறப்பம்சம்

பூக்காடுகளும், அடர்ந்த சோலைகளும், மரங்களும் சூழ்ந்த, பசுமையான வனங்கள்.
இயற்கை நமக்கு வழங்கிய கொடையாகும். பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, இப்படிப்பட்ட அடர்ந்த வனங்கள், ஆற்றின் கரைகளில் இயற்கையாகவே அமைந்திருந்தன.

இந்த தாவரங்களுக்கு மத்தியில் மருத்துவ குணமுள்ள மூலிகைகளும் முளைத்து, வனங்களுக்கு இடையில் வழிந்து ஓடிவரும் நீரில் சேர்ந்து மூலிகை குணத்தை கரைத்தன. ராஜராஜநல்லுார் (கடத்துார்) அமராவதி ஆற்றங்கரையிலுள்ள வனப்பகுதியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அர்ச்சுனேசுவரர் கோவில் கற்றளியாக அமைந்தது. பக்தியும், மூலிகையும் சோழ மன்னரின் மேகநோயை குணமாக்கியது.


13ம் நுாற்றாண்டு


மூன்றாம் விக்கிரம சோழன் (1273-1305) ஆட்சியின் போது, மன்னருக்கு உறவினரான திரிபுவனசிங்கன் என்னும் சிற்றரசன் பிரமேகம் எனும் மேகநோயினால் (சர்க்கரைநோய்) பாதிக்கப்பட்டார். வைத்தியர்கள் சிசிச்சையளித்தும் நோய் சரியாகவில்லை. இதுபோல முற்றிய நோய்கள் தீருவதற்கு இறைவனை வேண்டிக்கொள்வதும், சரியான பின், நேர்த்திகடன் செய்வதும் அன்றைய காலகட்டத்தின் முக்கிய வழிபாட்டு முறையாக இருந்தது.

இந்த அடிப்படை நம்பிக்கையில், ராஜராஜ நல்லுார் அமராவதிநதி கரையிலுள்ள அர்ச்சுனேசுவரரை மன்னர் வேண்டிக்கொண்டார். அதன்பின், கோவில் பகுதியில் தங்கி, அங்கு மருத்துவ குணத்துடன் வழிந்தோடிவரும் நீரை எடுத்து, சாமிக்கு தீர்த்தமாக வழிபட்டு, அதை பிரசாதமாக பருகத்தொடங்கினார். இதோடு, இங்குள்ள மூலிகைளை பறித்து, அரைத்து மருந்தாக்கி உட்கொண்டார். இந்த சிகிச்சையை அரண்மனை வைத்தியவர்கள் சிறந்த முறையில் செய்தனர்.

சிறிது காலத்தில் மன்னர் குணமடைந்து, சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டார்.
இதற்கு நேர்த்திக்கடனாக, கி.பி., 1302ம் ஆண்டு, நிலங்களை தானமாக வழங்கியதோடு, மருந்தீசுவரர் கோவில் என அழைக்கவும் உத்தரவிட்டு கல்வெட்டில் பதிவு செய்தார்.


வரலாற்று சிறப்பு


அமராவதி ஆற்றங்கரையிலிருந்து கோவில் நுழைவுவாயில் வரை படிகள் உள்ளன. சிவனுக்கும், அம்பாளுக்கும் இரண்டு கோவில்களும், தனித்தனி நந்தியும் உள்ளன. கிழக்கு மற்றும் தெற்கு என இருவாயில் பயன்படுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டடத்தின் மேற்கூரையை பல 'இரட்டைதுாண்கள்' தாங்குகிறது.

முன்மண்டபத்திலுள்ள 'குகை' ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த குகையின் பாதை, கோவிலுக்குள் தொடங்கி, மூன்று கி.மீ., தொலைவுக்கு அப்பால் குருவன்வலசு கிராமம் கோட்டைமேடு பகுதியிலுள்ள கொங்கனேசுவரர் கோவிலை இணைப்பதாகவும், இந்த வழியை மன்னர்கள் ரகசியப்பாதையாக பயன்படுத்தியதாகவும் தகவல்கள் உள்ளன.

200 ஆண்டுகளுக்கு முன்பு குகையிலிருந்து எடுக்கப்பட்ட நடராஜர், மருதுடையார், கோமதியம்மன், சுப்பிரமணியரின் உற்சவசிலைகளுக்கு தனியாக பூஜைகள் நடத்தப்படுகின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குகையின் வாயில் மூடப்பட்டது.மருந்தீசுவரர் கோவிலின் இன்னொரு சிறப்பு, கருவறைக்குள் சூரியஒளி முழுமையாக விழுவது தான்.

ஆம். சூரியன் உதயமாகிவரும் போது, கோவிலின் கிழக்கு திசையிலுள்ள, அமராவதி ஆற்றுநீரில் சூரியஒளி படர்ந்து பிரதிபலிக்கும் வெளிச்சம், 500 அடிக்கும் அதிகதொலைவிலுள்ள கோவிலின் கருவறைக்குள்ளும், அங்குள்ள சிவலிங்கத்தின் மீதும் துல்லியமாக விழுகிறது.

தொழில்நுட்பங்கள் வளராத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய உதயத்தையும், ஒளி செல்லும் திசையையும் கணித்து, கருவறைக்குள் சூரிய வெளிச்சம் விழும் வகையில் கட்டப்பட்டுள்ள கோவில் முன்னோர்களின் கட்டடக்கலை சிறப்புக்கு சான்றாகும்.


பிரமிக்க வைக்கிறது


பொதுமக்கள் கூறுகையில், 'மடத்துக்குளம் தாலுகா, கடத்துார் அர்ச்சுனேசுவரர் கோவில் வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்தப்பகுதியிருந்த மூலிகைகளும், இறைவனின் அருளும் திரிபுவனசிங்க மன்னரின் மேகநோயை சரி செய்தது, சூரிய ஒளி கருவறையில் விழுவது, மூன்று கி.மீ., தொலைவு நீளும் சுரங்கப்பாதை ஆகியவை பிரமிக்க வைக்கிறது' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201708:48:10 IST Report Abuse
Srinivasan Kannaiya கீற்றாய் சூரிய ஒளி மூலவரின் முகத்தில் படும் படியான கோவில்கள் நெறைய இருக்கிறது... அதில் இதுவும் ஒன்று...
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
10-செப்-201707:28:03 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை