இயக்குனர்களின் நண்பன் நான் - தேனி ஈஸ்வர்| Dinamalar

இயக்குனர்களின் நண்பன் நான் - தேனி ஈஸ்வர்

Added : செப் 13, 2017
இயக்குனர்களின் நண்பன் நான் - தேனி ஈஸ்வர்

தென்மேற்கு பருவக் காற்றை சுவாசித்ததால் என்னவோ, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் பாரதிராஜா, இளையராஜா, கவிஞர் வைரமுத்து என சினிமாவின் அனைத்து துறைகளிலும் தேனி மண்ணின் மைந்தர்கள் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒளிப்பதிவிற்கும் தன் பெயரில் தேனியை சேர்த்து கொண்டு ஒருவர் வந்துவிட்டார். இயக்குனர்களின் எழுத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்றவாறு திரைப்படங்களை காட்சிப்படுத்திவரும் தேனி ஈஸ்வர், 'தினமலர்' சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்...
* கேமராமேன் அனுபவம்...தேனி போன்ற இயற்கை சூழ் பகுதியில் வளர்ந்தது தான் கேமரா மீது எனக்கு ஆர்வம் வர காரணமாகியது. எழுத்தாளர் பாஸ்கர்சக்தி மூலமாக வாரஇதழ்களுக்கு புகைப்படம் எடுக்க துவங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
* சினிமாவில் ஆர்வம் ஏற்பட காரணம்...சிறுவயதில் இருந்தே சினிமா ஆர்வம் உண்டு. கதைகளை கேமரா வழியாக காட்சிகளாக்குவது சவாலான விஷயம். அதை எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி சிந்திக்க துவங்கினேன். அதுவே என்னை சினிமாவிற்கு பணியாற்றும் திறமையை கற்றுக்கொள்ளவைத்தது.

* முதல்பட வாய்ப்பு...எனது நண்பர் லெனின் பாரதி மூலம் இயக்குனர் சுசீந்திரன் நட்பு கிடைத்தது. அவரின் 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. இயற்கையான மலைப்பகுதியில் படமாக்கப்பட்டது. அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை அப்படியே படம் பிடித்தோம்.
* நீங்கள் பணியாற்றிய படம் விருதுகளை குவிக்கிறதாமே...நான் ஒளிப்பதிவு செய்த 'மேற்குதொடர்ச்சி மலை' படத்திற்கு திரைக்கு வரும் முன்னரே, 10 விருதுகள் கிடைத்துள்ளது. கேரளா மற்றும் பஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. சர்வதேச விருதுகளும் கிடைத்து வருகிறது.
* பிடித்த இயக்குனர்...தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் பாலா, சுசீந்திரன், ராம், லெனின்பாரதி போன்றவர்களிடம் பணியாற்றுவதே நல்ல அனுபவமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.
* சினிமாவில் உங்களின் குரு ...நான் யாரிடமும் உதவியாளராக இருந்து படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கற்றுக்கொள்ளவில்லை. நிறைய சினிமாக்களின் 'சூட்டிங்கை' நேரில் சென்று பார்த்தேன். இயக்குனர் கரு.பழனியப்பன் எனது நண்பர் அவரின் அறையில் தான் தங்கியிருந்து, அவரின் படங்களை அருகில் இருந்து பார்த்த அனுபவம் உண்டு. இப்படி தான் நான் ஒளிப்பதிவு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.
* மறக்கமுடியாத பாராட்டு...நான் சினிமா ஒளிப்பதிவு சங்கத்தில் உறுப்பினராக இணைய, எனக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து என் வளர்ச்சிக்கு உதவிய இயக்குனர் பாலுமகேந்திரா . அவர் எனது புகைப்படங்களை பார்த்து பாராட்டியது என் மனதில் பசுமையாக உள்ளது. அவரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பை தவறவிட்டதில் இன்றும் வருத்தம் உண்டு.
* இயக்குனர் பாலா படத்தில் பணியாற்றும் அனுபவம்...சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் முன்பே இயக்குனர் பாலா எனது நண்பர். அவரின் புதிய 'நாச்சியார்' படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவர். காட்சியை நேர்த்தியாக கொண்டு வருவதில் மிகவும் திறமையானவர்.
* உங்கள் ஒளிப்பதிவில் அடுத்து வரவிருக்கும் படங்கள்...ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் 'பேரன்பு', லெனின்பாரதியின் 'மேற்கு தொடர்ச்சிமலை' படங்கள் வெளியாக உள்ளது.தொடர்புக்கு...thenieswar@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X