காப்பியம் காக்கும் மலேசியத்தமிழர்| Dinamalar

காப்பியம் காக்கும் மலேசியத்தமிழர்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
காப்பியம் காக்கும் மலேசியத்தமிழர்

தமிழ்க் காப்பியங்களை காலமெல்லாம் காக்கும் சீரிய முயற்சியில், அரியப்பணி ஆற்றி வருகிறார் மலேசிய தமிழர் தனேசு பாலகிருஷ்ணன். இந்த 32 வயது இளைஞரின் பூர்வீகம் தஞ்சாவூர் அருகே வடுவூர் தென்பாதி. பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் மலேசியா. என்றும் மாறாத தமிழ்ப்பற்று கொண்டவர். துாய தமிழில், பிற மொழி கலப்பில்லாமல் பேச வேண்டும் என்ற கொள்கை உடையவர். மலேசிய மேடை நிகழ்ச்சிகளில் வேட்டி, சட்டை அணிந்தே பங்கேற்கிறார். திருமணமாகாத இவர், ஒரு தமிழ்நாட்டு பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். மலேசிய தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி, இப்போது அந்நாட்டு கல்வி அமைச்சக தொழில் நுட்ப அதிகாரியாக உள்ளார். உயர்ந்த அரசுப்பணியில் இருந்தாலும் அயராத தமிழ்ப்பணி, இவரது உயிர் மூச்சு. இவர் தோற்றுவித்து, தலைவராக உள்ள, உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தில் உலகமெங்கும் உள்ள தமிழறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழரின் தொன்மையையும், உயர் தனிச் சிறப்பினையும் விளக்கும் இலக்கியங்கள், தமிழ்க் காப்பியங்கள் என்பதை நாம் அறிவோம். கன்னித்தமிழ்க் காப்பியங்களை உலகறியச் செய்ய, இவர் ஆற்றிவரும் பணிகள் அற்புதமானவை. பழந்தமிழ்க் காப்பியங்களின் சுவடிகள், பதிப்புகள், உரைகள், ஆய்வு நுால்கள், ஆய்வேடுகள் முதலியவற்றை 'டிஜிட்டல்' ஆக்கும் நோக்கில் 'காப்பியகம்' என்னும் அமைப்பை உருவாக்கி உள்ளார். காப்பியங்களின் ஆய்வுச் சிந்தனைகளைத் தாங்கிய பன்னாட்டுக் காலாண்டிதழை 'காப்பியம்' என்னும் பெயரில் நடத்தி வருகிறார். மூன்று நுால்கள் எழுதியுள்ளார். இரண்டு நுால்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்த குறைந்த வயதிலேயே 'தமிழ்ச்செம்மல்' உட்பட பல விருதுகள் இவரை தேடி வந்து விட்டன.தமிழ் வளர்க்கும் தனேசு பாலகிருஷ்ணன் தன்னடக்கத்துடன் கூறியது:தமிழ் என்ற தொன்மையான மொழிக்கு நாங்கள் செய்யும் பணி ஒரு சிறு முயற்சி மட்டுமே. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க் காப்பியங்களை உலக இலக்கியங்களாக உயர்த்தும் நோக்கில், உலகத் தமிழ்க் காப்பிய மாநாட்டை கோலாலம்பூரில் 2015ல் நடத்தினோம்.இரண்டாம் மாநாட்டை தமிழ்க்கூடல் நகராகிய மதுரையில் வரும் டிசம்பர் 8,9,10 தேதிகளில் நடத்த உள்ளோம். இந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு, இணையம் மூலம் தமிழ் வளர்க்கும் பணியை தலையாய பணியாக கொண்டுள்ளது. உலகத்தமிழர்களை ஒன்றிணைத்து உலகத் தமிழிணைய மாநாட்டை அண்மையில் மலேசியாவில் நடத்தினோம்.நாடகம், குறும்படம், இசைப்பாக்கள், கதை போன்றவற்றை காலத்திற்கேற்றவாறு, கணினி வழியாக மின்னிலக்க வடிவில் (டிஜிட்டல்) இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே என் லட்சியம். அதற்காக தான் இந்த அமைப்பை துவக்கினேன். மக்கள் போற்றும் இலக்கியங்களாக, காப்பியங்களை எளிமைப்படுத்தும் முயற்சியையும் இந்நிறுவனம் மேற் கொண்டு வருகிறது.நம் காப்பியங்களில் வேரூன்றியுள்ள தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், வரலாறு, கலை முதலியவற்றை இயல், இசை, நாடகம், மின்னிலக்கம் வடிவில் உலகத் தமிழர்கள் அனைவரையும் அறியச் செய்யும் முயற்சி இது. இதற்காக, ஏராளமான தமிழ் இளைஞர்கள் என்னுடன் கைகோர்த்து உள்ளனர், என்கிறார் பெருமிதம் கொண்டு!தனேசு போல் தன்னலம் பாராத மெய்யான தமிழ் ஆர்வலர்களால், நாளெல்லாம் நம் தமிழ் தழைக்கட்டும். வரும் தலைமுறை தமிழே பேசட்டும்!படிக்கட்டும்!இவருடன் கருத்து பரிமாற thaneshbalakrishnan@gmail.comவாட்ஸ்அப்: +601432 79982

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை