அடுத்து ஆட்சியமைக்கப்போவது... யார்? : கருத்து கணிப்பு நடத்த ரகசிய குழு- முதல்வர் மீது அமைச்சர்கள் எரிச்சல்| Dinamalar

அடுத்து ஆட்சியமைக்கப்போவது... யார்? : கருத்து கணிப்பு நடத்த ரகசிய குழு- முதல்வர் மீது அமைச்சர்கள் எரிச்சல்

Added : செப் 13, 2017
Advertisement

பெங்களூரு: அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார் என்பதை ஆய்வு செய்ய, உள்துறை ஆலோசகர், கெம்பையா தலைமையில், ரகசிய கருத்து கணிப்பு குழுவை முதல்வர், சித்தராமையா அமைத்துள்ளார். இதனால், பெரும்பாலான அமைச்சர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆட்சிக்கு வந்து, ஐந்தாம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., ஆகிய கட்சிகள், பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
கருத்து கணிப்பு
இதற்கிடையில், கடந்த மாதம், பெங்களூரு வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, காங்., மாநில மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர், கர்நாடகாவில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால், எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதை ரகசியமாக ஆய்வு செய்து, பட்டியல் கொண்டு வந்திருந்ததாக தகவல்கள் வெளியானது.
அதில், இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதை கருத்தில் கொண்டு, அரசின் தோல்விகள், ஆளுங்கட்சியின் முறைகேடுகள், மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து கூற வேண்டுமென்று, மாநில தலைவர்களுக்கு, அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், கடந்த, 2013 தேர்தலின் போது, காங்கிரஸ் கொடுத்த பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்று, காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் கவனம்
இதற்கிடையில், ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, தன் கட்சி, பின் தங்கியுள்ள வட கர்நாடகா மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, அதிக இடங்களை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
அடுத்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று, தானே முதல்வராக தொடர வேண்டுமென்று சித்தராமையா விரும்புகிறார். இதற்காக, தன் நெருக்கமான அதிகாரியான, உள்துறை ஆலோசகர், கெம்பையா, தலைமையில், ரகசிய குழு அமைத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், பல்வேறு அமைச்சர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிகிறது.
இக்குழு, மாநிலத்தின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், எந்த கட்சிக்கு மக்கள் ஓட்டு போடுவர் என்பதை ரகசியமாக ஆய்வு செய்து, ஓரிரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
அறிக்கை வந்த பின், காங்கிரசுக்கு வாய்ப்பில்லாத தொகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்த முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரகசிய கருத்து கணிப்பு குழு, தன் பணியை துவக்கியுள்ளது.
புறக்கணிப்பு
தன் பேச்சுக்கு செவி கொடுக்காமல், பல்வேறு முடிவுகள் எடுத்ததால், கெம்பையா மீது உள்துறை அமைச்சராக இருந்த, மாநில காங்., தலைவர், ஜி.பரமேஸ்வர் அதிருப்தியில் இருந்தார்.
தற்போதைய உள்துறை அமைச்சர், ராமலிங்கரெட்டியும், அதே பாணியை பின்பற்றி வருகிறார். இம்மாதம், 9ம் தேதி நடந்த பெங்களூரு நகர சட்டம் - ஒழுங்கு சம்பந்தமான உயர் அதிகாரிகள் கூட்டத்துக்கு அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை