"எங்களுக்கு மக்களே எஜமானர்கள்' டெல்லி கணேஷின் "கில்லி' அனுபவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"எங்களுக்கு மக்களே எஜமானர்கள்' டெல்லி கணேஷின் "கில்லி' அனுபவம்

Added : செப் 17, 2017
Advertisement

தமிழ் சினிமாவில், குணசித்திர நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் டெல்லி கணேஷ். கதாபாத்திரத்தை எளிதாக உள்வாங்கி, அட்டகாசமாக நடிப்பை வெளிப்படுத்தும் இயல்பான நடிகர். இதுவரை, 500க்கும் மேற்பட்ட படங்களில், நடித்திருக்கிறார். தெளிவான உச்சரிப்பு, பல படங்களில் இவரை, "டப்பிங்' பேசவும் வைத்திருக்கிறது. அவிநாசியில் நடந்து வரும், "ஒரு கோடியப்பே' படத்தின் ஷூட்டிங்கில் இருந்த, டெல்லி கணேஷை சந்தித்து பேசினோம்...

சினிமா, அன்றும் இன்றும் எப்படி இருக்கிறது?
சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. தொழில்நுட்பத்தில், பெரிய வித்தியாசங்களை காண முடிகிறது. குறைந்த பட்ஜெட்டில், படம் எடுக்கின்றனர். அதற்கான செலவும் குறைவு; வருமானமும் குறைவு. மக்கள், பிரமாண்டமான படங்களையும் ரசிக்கின்றனர்.

யார் வேண்டுமானாலும், நடிக்க வந்து விடுகிறார்களே?
யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்; ஆனால், படம் ரிலீஸ் ஆகும்போது, சில பிரச்னைகள் ஏற்படுகிறது.
பிரபலங்கள் நடித்திருக்க வேண்டும் என, ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எப்போதாவது, புதுமுகங்கள் வந்தால் பரவாயில்லை; தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால், எல்லோரும் ஏற்க தயாராக இல்லை.
நாடகத்தில் நடித்த அனுபவம், புதுமுக நடிகர்கள் பல பேருக்கு இல்லை. பணம் இருந்தால், ஹீரோவாக நடித்துவிடலாம் என வருகின்றனர். ஆனால், முடிவு மக்கள் கையில் தான் உள்ளது. மக்களே எஜமானர்கள். திறமை இருந்தால் மட்டுமே மக்கள் வரவேற்பு கிடைக்கும்.

ஒரு படத்தின் வெற்றியை, எது தீர்மானிக்கிறது?
படத்தின் வெற்றியை, கதை தான் தீர்மானிக்கிறது; அதுவே, படத்தின் வெற்றி. சினிமா என்பது, டீம் ஒர்க். தனிப்பட்ட யாரையும், வெற்றிக்கு காரணமாய் சொல்லிவிட முடியாது. சிறந்த நடிப்பை தந்தாலும், கதை சரியில்லை என்றால், படம் ஓடாது; கதை நன்றாக இருந்தும், நடிப்பு திறம்பட வெளிப்படவில்லை என்றாலும் படம் ஓடாது. கதை, நடிப்பு, இசை, பாட்டு என எல்லாமே நன்றாக இருக்க வேண்டும். இது, இயக்குனரின் கையில் தான் இருக்கிறது.

சினிமாவுக்கு வந்து நீங்கள் அடைந்தது, இழந்தது...
இழந்தது என்று, எதுவும் இல்லை. ஆனால், சமூக வலைதளங்களில், கன்னாபின்னாவென்று திட்டுகின்றனர். சினிமா துறையினரை மட்டுமின்றி, யார் யாரை எல்லாம் பிடிக்கவில்லையோ, அவர்களை பற்றி நாகரிகமே இல்லாமல் அசிங்கமாக, திட்டுகின்றனர். போராட்டங்களில் நடிகர்கள் கலந்து கொள்ள வந்தாலும், "ஏன் வந்தார்கள்' என, கேட்கின்றனர்; வராவிட்டாலும், "வரவில்லை' என, குறை சொல்கின்றனர். சிலர் அநாகரிகமாக கருத்துகளை, சமூகவலை தளங்களில் வெளிப்படுத்துகின்றனர்.

பெயருக்கு முன்னால், "டெல்லி' எப்படி வந்தது?
நான் டெல்லியில், 10 ஆண்டுகள் "ஏர்போர்ஸில்' பணிசெய்தேன்; அப்போது, அங்குள்ள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து, "டிராமா ட்ரூப்' வைத்து, நாடகம் நடத்துவோம். நான், நடிப்பேன். சென்னைக்கு வந்த பின், கே.பாலசந்தர் படத்தில் என்னை அறிமுகப்படுத்தும்போது, எனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக, டெல்லியில் நான் முதன்முதலாக நாடக மேடையில் ஏறியவன் என்ற முறையில், "டெல்லி கணேஷ்' என, பெயர் வைத்தார். அந்த பெயரே நிலைத்துவிட்டது.

நாடகம் சினிமா என்ன வித்தியாசம்?
சினிமாவில் பணம், அதிகம்; நல்ல படங்களில் நடித்துவிட்டால், பேரும், புகழும் அதிகமாக கிடைத்து விடும். ஆனால், நாடகங்களை ஊர், ஊராக சென்று நடத்த வேண்டும். ஒவ்வொரு ஊரிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான், மக்கள் நாடகங்களை பார்க்கின்றனர். சினிமா அப்படியல்ல. எல்லா ஊர்களிலும், லட்சக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர். நாடகத்தில் ரசிகர்களின் கைதட்டலை நேரடியாக பார்க்கலாம். சினிமாவில், அப்படி பார்க்க முடியாது. பொருளாதார ரீதியாக, நடிகன் வெற்றி பெறுவது, சினிமாவில் மட்டுமே. நாடகத்தில் வருமானம் குறைவுதான்.

உங்கள் பார்வையில் எது நல்ல சினிமா?
வர்த்தகமும், கலையும் வெவ்வேறானது இல்லை. கலை சார்ந்த படம், நன்றாக ஓடினால் அது வர்த்தக படமாகி விடும். வர்த்தகமாக எடுக்கப்பட்ட படம் ஓடவில்லை என்றால், நஷ்டமே ஏற்படும். தயாரிப்பாளர், படத்தை தயாரிக்க செலவான பணம், நஷ்டமின்றி திரும்ப கிடைக்க வேண்டும். எந்த படமாக இருந்தாலும், 100 பேரை அழைத்து காட்டும்போது, அவர்கள் கூறும் கருத்துக்கு ஏற்ப, படம் ஓடுவதில்லை.
ஒரு படம் பற்றிய முடிவை, ஜோதிடம் பார்த்தும் சொல்ல முடியாது. சாதாரண மனிதனும் சொல்ல முடியாது. பருவராகம் என்ற படம், தமிழில் சிறப்பாக எடுக்கப்பட்டது. சிறந்த பாடல்கள், தமிழில் ஓடவில்லை. இதே படம், கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. எது நல்ல சினிமா என்பதை, யாராலும் தீர்மானித்துவிட முடியாது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை