கீழடியில் என்ன குழப்பம்| Dinamalar

கீழடியில் என்ன குழப்பம்

Added : செப் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கீழடியில் என்ன குழப்பம்

மத்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத்துறை 2015ம் ஆண்டு முதல் மதுரைக்கு
அருகில், சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்வான கதை : இங்கு 1980--81ல் சிலைமானில் இருந்த பாலசுப்பிரமணியம் என்னும்
ஆசிரியரால் ஆய்வு செய்யப்பட்டது. அவர் மேற்பரப்பில் சேகரித்த கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் உருவங்களை மதுரையில் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள மாநில தொல்லியல் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தர். அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அப்போதைய தொல்லியல் துறை இயக்குனர் நாகசாமி தலைமையில் அதே இடத்தில் ஆய்வு செய்தனர். இதன் மூலம் கீழடி சங்ககாலத்திலேயே ஒரு வாழ்விடமாக திகழ்ந்தது
என்பது உறுதிபடுத்தப்பட்டது. அதன் பின் இங்கு எவ்வித ஆய்வுகளும் நடைபெறவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசின் தொல்லியல் துறை, வைகை கரையோரம் உள்ள கிராமங்களில் மேற்பரப்பு ஆய்வு செய்தது. இதில் 293 கிராமங்களில் வரலாற்று எச்சங்கள் இருப்பதை கண்டறிந்தது. அதில் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடலை அகழாய்வுக்கு தேர்வு செய்தது. இதற்கு காரணம் ஏற்கனவே இந்த இடத்தில் செங்கல் சூளைக்காக மண் எடுக்க நிலத்தை தோண்டிய போது வெளிப்பட்ட ஒரு செங்கல் சுவரை கண்டதுதான். இதை தொடர்ந்து 2015 ல் இப்பகுதியில் நிலஉரிமையாளர்களிடமிருந்து உரிய அனுமதி பெற்று அகழாய்வு பணி துவக்கப்பட்டது.

ஆய்வுகள் துவக்கம் : முதல் ஆண்டில் (2015) 43அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. அவற்றின் மூலம் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றுள் சுடுமண் உருவங்கள், சதுரங்கக் காய்கள், தந்தத்தில் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், சூதுபவளம் போன்ற பொருட்கள் கிடைத்தன. பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில் ஆதன், உதிரன், திஸன், ஸாதன், சரம் பொன்ற பெயர் சொற்கள் இடம்பெற்றிருந்தன. மேற்பரப்பு ஆய்விலேயே இராஜராஜன் காலத்து செப்புக்காசு ஒன்றும் கண்டறிப்பட்டது. மண்ணால் செய்து சுட்டு, உறைகளை ஒன்றன் மேல் ஒன்று அடக்கி கட்டப்படும் உறைகிணறுகளும் காணப்பட்டன. இது போல் ஏற்கனவே சங்ககால வாழ்விடங்களான கரூர், பூம்புகார், உறையூர், மதுரை மாங்குளம் போன்ற இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன.

திருப்பம் தந்த அகழாய்வு : 2016 ம் ஆண்டில் 2ம் கட்ட அகழாய்வு நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதில் 5,000 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவற்றிலும் 'சேந்தன் அவதி' என்பன போன்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன. செங்கல் கட்டடப்பகுதிகள் பெரும் அளவில் வெளிப்பட்டதும், அவற்றின் அமைப்பு முறையும் ஆய்வாளர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழி வகுத்தன. இது மற்ற சங்க கால வாழ்விடங்களில் வெளிப்பட்ட அளவுகளைக் காட்டிலும் பெரியது. 21 உறைகளை கொண்ட உறைகிணறும் கண்டறியப்பட்டது வியக்கத்தக்கது. இந்த பகுதியில் பெரிய நெசவுக்கூடம் அல்லது ஆபரண தொழிற்கூடம் இருந்திருக்கலாம். இங்கு மக்கள் வாழ்ந்த காலத்தை கி.மு.2000த்திலிருந்து கி.பி.10ம் நுாற்றாண்டு வரை இருக்கலாம் என தொல்லியலாளர்கள் கணித்திருந்தனர். ஒரு சில மாதிரிகளை வேதியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி அதன் முடிவை பெற்றுள்ளதின் அடிப்படையில் கீழடி அகழாய்வு பொருட்களின் காலம் கி.மு.200; 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எதிர்மறை விளைவு : இந்த அகழாய்வு தமிழக மக் களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. காரணம் சமீபகாலத்தில் இவ்வளவு பெரிய அளவிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட குழிகளில் அகழாய்வு மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் வேறு எங்கும் இத்தனை பெரிய கட்டடப்பகுதிகள் வெளிப்படவில்லை. இந்த செய்திகள் அதிகப்படியான மக்களிடம் சென்று சேர்ந்தன. அகழாய்வு மேற்கொண்ட அதிகாரிகளும் நல்ல நோக்கத்தில் பார்வையாளர்களை தடையின்றி அனுமதித்தனர். அவர்களது அந்த தாராள மனப்பான்மைதான் இறுதி யில் அவர்களுக்கு எதிராகவும் திரும்பி விடப்பட்டது. பார்வையாளர்கள், அலைபேசிகளில் படங்களை எடுத்து அதனோடு தங்களுக்கு தெரிந்த கட்டுக்கதைகளையும் அறிவுக்கு எட்டியவரையில் அவிழ்த்து விட்டனர். 'கீழடி கட்டுமானங்கள் சிந்துவெளி பண்பாட்டிற்கு இணையானது' என்றெல்லாம் கற்பனைகளை உருவாக்கினர். இதில் ஒரு சில அரசியல் கட்சியினரும், 'உலகிலேயே தொன்மையான நாகரிகம் இது. இக்குழிகளை அப்படியே பாதுகாக்க வேண்டும். தமிழக பண்பாட்டு கூறுகளை மறைக்க மத்திய அரச முயல்கிறது' என முழங்கினர். இதன் காரணமாக மூன்றாம் கட்ட ஆய்விற்கு நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் பணியில் தொய்வும் ஏற்பட்டது. ஏற்கனவே அகழாய்வு பணியை தலைமையேற்று நடத்திய அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டார்.சில காலதாமதத்திற்கு பின்
புதிய பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வரலாறு முடக்கப்படுகிறதா : கீழடியின் தொன்மை வரலாறு முடக்கப்படுகிறதா, உரிய கவனத்திற்கு கொண்டுவரப்படுமா என்ற கேள்வி பலரின் மனதிலும் கேட்கப்படும் கேள்வி. பொதுவாக
எவ்வூரிலும் அகழாய்வு பணி நிறைவு பெற்றதும் அங்குள்ள குழிகள் மூடப்படுவது மரபு.
ஏனெனில் அகழாய்வுக்கு உட்பட்ட நிலம் தனியாருக்கு சொந்தமானது. அவரிடம் பணி முடிந்த பின் நிலம் முன்னைப் போலவே ஒப்படைக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலே பணி மேற்கொள்ளப்படும். பணி முடிந்த பின் நிலம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்பது போல கீழடியிலும் குழிகள் மூடப்பட்டன. நிலம், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது போல சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள், ஒளிப்படங்கள், வார்ப்புகள் செய்யப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அதே பாணியைத்தான் கீழடியிலும் அதிகாரிகள் பின்பற்றினர். இவற்றை தவறாக புரிந்து கொண்ட சிலர், மக்களை ஆய்வாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு திருப்பினர்.

ஆய்வுகளில் தெளிவு : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி நாகரீகம் எவ்வாறு
அழிவுக்குள்ளாகியது என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. 11-12ம் நுாற்றாண்டு கால வரலாற்று
ஆவணங்கள் கீழடி, கொந்தகை, மணலுார் பகுதிகளில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. கொந்தகை என்பது குந்தி தேவிச்சூர்வேதிமங்கலம் என்னும் பெயரில் இயங்கியுள்ளது. கீழடி பண்பாடு எவ்வாறு அழிந்திருக்க கூடும் என்று ஆய்வோமானால் ஓரிரண்டு சாத்திய கூறுகள் தென்படுகின்றன. ஒன்று வெள்ளப்பெருக்கு. மற்றொன்று வேற்று நாட்டவரின் படையெடுப்பு.

அருங்காட்சியகம் : கீழடியில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் ஒன்று
அமைக்கப்படவேண்டும் என்னும் வேண்டுகோள் பரவலாக எழுந்துஉள்ளது. அரசும் இசைந்து நிலமும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த அருங்காட்சியகம் கீழடியிலோ,
கொந்தகையிலோ அமைவதைக்காட்டிலும் மதுரை நகரத்திற்கு உள்ளேயோ அல்லது நகரத்தையொட்டியோ அமைவது தான் சிறந்தது. அப்போது தான் மக்களும், மாணவர்களும், ஆய்வாளர்களும் எளிதில் சென்று பார்க்க இயலும். இப்போதைக்கு கீழடியில் அமைய வேண்டும் என்று பரிந்துரைப்பவர்கள், எதிர்காலத்தில் அதை யாரும் சென்று காணமாட்டார்கள் என்பதை அறிய வேண்டும். அருங்காட்சியக அலுவலர்கள் மட்டுமே அதனை காவல்காக்க நேரிடும். தற்போது தமிழகத்தில் உள்ள பல அருங்காட்சியகங்களின் நிலை இதுதான். எனவே கீழடி போன்ற
தொன்மையான வாழ்விடங்களை அறிவதிலும், அகழாய்வு செய்வதிலும், அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாப்பதிலும் நம்மக்கள் உணர்வுவயப்படாது, அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

-- சொ.சாந்தலிங்கம்
தொல்லியல் அறிஞர், மதுரை.
98946 87358

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை