ஒரு சொல் வெல்லும்!| Dinamalar

ஒரு சொல் வெல்லும்!

Added : செப் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஒரு சொல் வெல்லும்!

சொல்ல சொல்ல இனிக்குதடா என்று நாம் கடவுளை நினைத்து பாடும்போது சொல்வோம்.
குழந்தையின் சொல்லில் இனிமை, தாயின் சொல்லில் அன்பு, ஆசிரியரின் சொல்லில் கண்டிப்பு,
தலைவனின் குரலில் நம்பிக்கை என ஒவ்வொரு சொல்லுக்கு ஒரு உணர்வு உண்டு.
ஒரு சொல்லால், பிரிந்த நாடுகளே இணைந்த கதைகள் உண்டு. ஒரே சொல்லால் பல போர்கள்
உருவான கதைகளும் உண்டு. எனவே சொற்களின் முக்கியத்துவத்தை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பேச்சு என்பது மனித வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் சீராக பேசிக்கொண்டு இருக்கும் வரை அதன் அருமை நமக்கு தெரிவதில்லை என்பதுதான் உண்மை. பேச்சிற்கு ஒரு சிறிய தடை வரும்போதுதான், அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம்.
பேச்சின் முதல் படி, வாயில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. வாயில் ஏற்படும் சிறுமாற்றம் கூட நம் பேச்சை வெகுவாக பாதிக்கும். சொல்லின் முதல் படியான வாயையும், அதில் உருவாகும் சொற்களையும் பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை சரியான நேரத்தில் செய்தாலே போதுமானது.

சொல்லின் சாராம்சம் : சொல்லில், பல்லின் பங்கு என்ன என்பதை முதலில் அறிவோம். எல்லோருக்கும் பற்களை சுத்தமாக வைத்தால்தான் நன்றாக சாப்பிட முடியும். அழகாக சிரிக்க முடியும். ஆனால் சொற்களை சரியாக உச்சரிக்க மற்றும் சீராக பேசுவதற்கும் பற்கள் மிகவும் முக்கியம் என்பது பலருக்கு தெரிவதில்லை. சொல் என்பது பல், நாக்கு, உதடு இவை மூன்றும் சேர்ந்து
உருவாக்கும் ஓசை. வாயின் அமைப்பு, நாக்கின் நீளம், பற்களின் அளவு மற்றும் அமைப்பு. இவை அனைத்தும் சொற்களை உருவாக்குவதில் பங்களிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொருவரின் பேச்சும், உச்சரிப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதில் ஏதாவது ஒன்று சரியாக இல்லாவிட்டால் பேசுவதில் தடை ஏற்படும். இதில் முதலில் பாதிக்கப்படுவது ஷா, டா, வா, பா போன்ற எழுத்துக்களும், அதை சார்ந்த வார்த்தைகளும்தான். மூக்கு மற்றும் சுவாசக்குழாயில் ஏற்படும் அடைப்புகள் சில சமயம் உச்சரிப்பை மாற்றும். ஆனால் பெரும்பாலும் பற்கள் மற்றும் நாக்கினால் ஏற்படும் பிரச்னைகளே அதிகம். தெற்று பற்கள், கோணல் பற்கள், பற்கள் ஆடும் போது அல்லது பற்கள் விழுந்து காலியாக இருந்தால்தான் அனைத்து சூழ்நிலையிலும் சொல்லின் உச்சரிப்பு மாறும். பற்களின் மாற்றத்தால் வரும் ஒரு முக்கியமான பக்க விளைவு பற்றி கண்டிப்பாக அறியவேண்டும். பற்கள் நிறம் மங்கி இருந்தாலோ, பற்களுக்கு நடுவில் இடைவெளி இருந்தாலோ, பற்கள் இல்லாமல் இருந்தாலோ நம்மை அறியாமல் செய்யும் ஒரு செயல், பற்கள் தெரியாமல் பேசுவதும், சிரிப்பதும். இது முதலில் சாதாரணமாக இருக்கும். பின்னர் இதுவே பழக்கமாகிவிடும்.நாளாக நாளாக ஒருவரின் பேச்சின் அளவு, திறன், சத்தத்தின் அளவு எல்லாமே குறைந்துவிடும். முகத்தின் தசைகளையும் பல் தெரியாமல் பேசுவதற்கும், சிரிப்பதற்கும் உபயோகப்படுத்தி அதன் தன்மையும் பாதிக்கப்படும். ஒரு காலகட்டத்திற்கு மேல் இதை மாற்றுவது மிக கடினம். பற்களில் சிறு மாற்றங்கள் செய்து ஆடும் பற்களை பலமாக்குவது, இல்லாத பற்களை கட்டுவது, அவற்றின் அமைப்பை சீராக்குவது போன்ற சின்ன விஷயங்களை உரிய நேரத்தில் செய்தால் நம் பேச்சின் அழகும், முகத்தின் அழகும் பல நாள் நம்மிடமே இருக்கும்.

சொற்கள் தடைபட காரணங்கள் மூன்று : முதல் காரணம் பற்களில் பலம் இல்லாமல் ஆடும்போது நம்மால் வார்த்தைகளை சரிவர உச்சரிக்க முடியாது. பற்கள் பலம் இல்லாமல் இருப்பது முதல் கட்டம். இதன் அடுத்த கட்டம் பற்களில் வலி அல்லது பற்கள் விழுந்து விடும். இதனால் பேச்சு தடைபடுவதும், வாய் குளறுவது போல் பேசும் நிலையும் ஏற்படும். பேசும் போது காற்று புகுவது போன்ற உணர்வு ஏற்படும்.
இரண்டாவது காரணம் வாய்ப்புண் ஏற்படுவது. அடிக்கடி நாக்கில், ஈறுகளில், கன்னத்தில் மற்றும் உதட்டில் சிலருக்கு புண் ஏற்படும். இதற்கு காரணம் உடலில் சத்து குறைபாடாக இருக்கலாம் அல்லது எச்சில் குறைவாக சுரப்பதால் வாய் வறண்டு போவதாக இருக்கலாம்.
உடைந்த பற்கள் அல்லது கூரான பற்களாக இருக்கலாம். இந்த புண்கள் இருக்கும்போது நாக்கை சரியாக மடிக்க முடியாது. புண் இருக்கும் இடத்தில் நாக்குபட முடியாது. இதனால் சொற்கள் தடைபடும்.
மூன்றாவது காரணம் கோணலான பல் வரிசை பற்கள் வரிசையாக இல்லாமல் வெளியில் தள்ளியோ ஒன்றுக்கொன்று சீராக இல்லாவிட்டாலோ வார்த்தைகளின் உச்சரிப்பு மாறுபடும்.

உன் பேச்சை நீ அறிவாய் : நம் பேச்சு சரியாக உள்ளதா, பேச்சில் ஏதாவது மாற்றம் உள்ளதா என அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் மழலை மாறி நன்றாக பேச ஆரம்பிக்கும் போதிலிருந்தே பேச்சை கவனிக்க வேண்டும். தெற்று பற்கள் அல்லது கோணல் பற்கள் இருந்து அவற்றால் உச்சரிப்பு அல்லது முக அமைப்பு மாறும்போது அழகாகதானே இருக்கிறது என்று அதை ஒதுக்கக்கூடாது. ஏனெனில் நாளடைவில் இதுவே பேச்சில் தடை ஏற்பட காரணமாகிவிடும். பெரியவர்களின் பேச்சு குறைபாடுகளை கண்டுபிடிப்பது சுலபம்.
வார்த்தையின் உச்சரிப்பு மாறுவது, நாக்கை வேண்டிய அளவு அசைக்க முடியாமல் வாய் குளறுவது போல் பேசுவது, நாக்கில் அல்லது வாயில் அடிக்கடி புண் ஏற்படுவது. இதுபோன்ற பிரச்னைகள் கவனிக்கப்பட வேண்டியவை. சரியான வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் நம் கண்ணுக்கு தெரியாமல் நம் பற்களிலும், வாயிலும், உடலிலும் சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை நம் கண்ணுக்கு தென் படும்போது, பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்காக உடலை நினைத்து தினமும் பயம் கொள்ள வேண்டியதில்லை.
சிறு சிறு விஷயங்களை பழக்கமாக்கி கொண்டால் வாயின் ஆரோக்கியத்தையும், உடலின் ஆரோக்கியத்தை பற்றியும் கவலையின்றி இருக்கலாம்.

நன்றே செய் இன்றே செய் : காலை எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டிய வேலையாக பல் துலக்குவதை நாம் பின்பற்றி வருவதில் இருந்தே வாயின் ஆரோக்கியம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடிகிறது. ஆலங்குச்சி, வேப்பங்குச்சி, மண், கரித்துாள், பற்பொடி, டூத் பிரஷ் மற்றும் பேஸ்ட் என முறைகள்தான் மாறி உள்ளதே தவிர, பல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறையவே இல்லை.பல் பராமரிப்பு அனைத்து வயதினரும் செய்ய வேண்டிய ஒன்று. குழந்தைகளின் பால் பற்கள் வளரும் வயதில் தொடங்கி வயதாகும்போது பற்கள் ஆடி விழும் வரை. ஏன் விழுந்த பின்னரும் முறையான பாதுகாப்பு தேவைப் படுகிறது.
குழந்தையின் பற்களுக்கு பெற்றோர் சரியான கவனம் செலுத்த வேண்டும். விழப்போகும்
பற்கள்தானே என்று அசட்டையாக இருக்கக்கூடாது. ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்க பழக்க வேண்டும். பால் பற்களின் ஆரோக்கியம் பின்னாளில் வரும் நிரந்தர பற்களின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். பெரியவர்களை பொறுத்த வரை பற்களை சுத்தமாக வைப்பது, சரியான உணவு பழக்கங்களை கடைபிடிப்பது, சிகரெட் மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை தவிர்ப்பது போன்றவற்றை செய்தால் வாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பற்களில் சொத்தையோ, கோணலான பல் வரிசையோ இருந்தால் அதை உரிய நேரத்தில் சரி செய்துவிட வேண்டும். வயதானவர்களை பொறுத்த வரை சரியான கால இடைவெளியில் வாயையும், பற்களையும் பரிசோதிக்க வேண்டும். வயதானால் பல் விழுந்து விடும். இருக்கும் பற்களை பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வயதிலும் நிலையான பற்களுடன் விரும்பியதை உண்டு ஆரோக்கியமாக வாழ, இன்றைய மருத்துவத்தில் பல வழிகள் உண்டு.
அவற்றை சரியான நேரத்தில் செய்து, எந்த வயதிலும் அழகிய புன்னகையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கலாம். சொல்லின் முக்கியத்துவம் புரிந்த நாம், பல் போனால் சொல் போச்சு
என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். பற்களை சரியான முறையில் பாதுகாத்தால் பல்லும், சொல்லும் பலம் பெற்று வாழ முடியும்.

-- டாக்டர் ஜெ. கண்ணபெருமான்
மதுரை.
94441 54551

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X