நான் என்ற அகந்தை அகற்றுங்கள்!| Dinamalar

நான் என்ற அகந்தை அகற்றுங்கள்!

Added : செப் 27, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நான் என்ற அகந்தை அகற்றுங்கள்!

நான் பெரியவன். எனக்கு எல்லாம் தெரியும். என் பேச்சை எல்லோரும் கேட்க வேண்டும். என்னை வெல்ல எவருமில்லை. எல்லோரும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள். இது போன்ற நான் என்ற அகந்தை அகற்றுங்கள்.இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. எதுவும் தெரியாதவரும் எவரும் இல்லை. நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தால் அடியோடு அகற்றி விடுங்கள்.சக மனிதனை மதிக்க வேண்டும். அவரது கருத்தையும் செவிமடுத்துக் கேட்க வேண்டும். அதில் நல்லவை இருந்தால் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு கீழ் பதவியில் உள்ளவர் சொல்வ தை நான் கேட்பதா? என் கவுரவம் என்ன ஆகும்? என்ற தவறான எண்ணங்களைத் தகர்த்து விடுங்கள்.யாரையும் இவர் நல்லவர், கெட்டவர் என்று முன்மதிப்பீடு செய்யாதீர்கள். நமது மதிப்பீடு தவறாகலாம். அலுவலகத்தில் மட்டுமல்ல இல்லத்திலும்
மனைவியின் கருத்துக்கு மதிப்புஅளித்துக் கேளுங்கள். கேட்பதில் தவறு இல்லை. கேட்டு விட்டு சரியெனப்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள். தவறு என்றுதோன்றினாலும் விட்டு விடுங்கள்.ஒருவர் என்னால் முடியாத செயல் எதுவுமில்லை என்ற கர்வத்துடன் வாழ்ந்து வந்தார். அந்த ஊருக்கு வந்த முனிவர்களிடமும் மிகவும் கர்வத்துடன் சவால் விட்டுப்
பேசினார். முனிவர் குளத்தங் கரைக்கு அழைத்துச் சென்று கையில் உள்ள கமண்டலத்தில் இருந்த தண்ணீரை குளத்தில் ஊற்றச்சொன்னார். ஊற்றியதும் தற்போது நீங்கள் ஊற்றிய தண்ணீரை கமண்டலத்தில் கொடுங்கள் என்றார். அது எப்படி முடியும்? குளத்து நீருடன் கலந்து விட்டது. அதே நீரை எப்படி அள்ள முடியும்? என்றார்.முனிவர் சொன்னார்... இந்த உலகில் முடியாத செயல்கள் என்று சில உள்ளன. அதனை உணர்த்தவே உங்களிடம் இவ்வாறு நடந்து கொண்டேன் என்றார். அதனைக் கேட்ட அவருக்கு அவரது “நான் என்ற அகந்தை” அகன்றது.

நானே பெரியவன் : இன்று வீட்டிலும் நாட்டிலும் உலகத்திலும் 'நானே பெரியவன்' என்ற எண்ணத்தின் காரணமாகவே சண்டை, சச்சரவு, பிரச்னைகள் வளர்ந்து வருகின்றன. நான் என்ற அகந்தையை அகற்றி விட்டு பிறரையும் மதித்து அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பு அளித்து வந்தால் எங்கும் சண்டை, சச்சரவு, அமைதியின்மை நிலவாது. மன நிம்மதி, மன அமைதி
கிடைப்பதற்கு மற்றவர்களை மதிக்க வேண்டும். உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும்? என்று எதிர்பார்ப்பது போலவே நீங்கள் மற்றவர்களை நடத்த முன்வர வேண்டும். உங்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை உணருங்கள். விட்டுக் கொடுத்து வாழுங்கள். “விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை” என்ற பொன்மொழியை நினைவில் கொள்ளுங்கள்.'நான் சிறந்தவன்' என்று எண்ணுவது தவறல்ல. 'நானே
சிறந்தவன்' என்று எண்ணுவது தான் தவறு. உங்களை விடச் சிறந்தவர்கள் உலகில் உண்டு
என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னால் முடியும் என்று எண்ணுவது தவறு அல்ல. என்னால் மட்டுமே முடியும் என்று எண்ணுவது தவறு.வல்லவனுக்கு வல்லவன் உண்டு என்பதை உணர்ந்து வாழுங்கள்.தான் என்ற அகந்தையால் உலகத்தையே ஆட்டிப் படைத்த ஹிட்லர் கடைசியில் தற்கொலை செய்து கொண்டார். அரசியலிலும் நானே பெரியவன் என்று எண்ணி வாழ்ந்தவர்கள் பின் இருந்த இடம் தெரியாமல் போன வரலாறுகள் உண்டு. அரசியலில் தான் என்ற அகந்தை இன்றி நேர்மையாக வும், நாணயமாகவும் வாழ்ந்த காமராஜரும், அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கனும் இறந்து பல ஆண்டுகள் கழிந்திட்ட போதும் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களது எளிமை.
படித்தவர்கள் நான் படித்தவன்; எனக்கு எல்லாம் தெரியும். படிக்காதவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணுவதும் தவறு. படித்தவன் ஒரு நாள் நடந்து செல்லும் போது செக்கு மாடு சுற்றி எண்ணெய் எடுக்கும் இடத்தைப் பார்த்தான். அங்கு செக்கு ஆட்டுபவர் வெளியில் நின்று கொண்டு இருந்தார். அவரிடம் கேட்டான்... நீங்கள் இங்கே நிற்கிறீர்கள் உள்ளே செக்கு சுற்றுவது எப்படித் தெரியும் என்றான். மாட்டின் கழுத்தில் மணிகள் கட்டி உள்ளேன்; அது
சுற்றும் போது மணி சத்தம் கேட்கும் என்றார். அதற்கு படித்தவன் கேட்டான். மாடு சுற்றாமல் தலையை மட்டும் ஆட்டினாலும் மணி சத்தம் கேட்குமே என்றான்.சுற்றாமல் நின்றபடி தலையை மட்டும் ஆட்டி ஏமாற்றுவதற்கு உன்னைப் போல கல்லுாரி சென்று படிக்கவில்லை என் மாடு, என்றார். படிப்பு என்பது வேறு. அறிவு என்பது வேறு. படித்து விட்டால், நான் அறிவாளி எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் தவறு என்பதை படித்தவர்கள் உணர வேண்டும்.
படித்தவன் கிராமத்திற்கு சென்றான். அங்கு நின்ற உழவனைப் பார்த்து இந்த மரம்
எவ்வளவு காய்கள் ஆண்டிற்கு காய்க்கும் என்றான். நுாறு காய்கள் காய்க்கும் என்றார். அதற்கு படித்தவன் சொன்னான். சோடியம் பாஸ்பேட் போன்ற உரங்கள் போட்டால் வருடத்திற்கு ஐநுாறு கொய்யா காய்கள் காய்க்கும் என்றான். அதற்கு உழவன் சொன்னான், நீங்கள் சொன்னதைப் போட்டாலும் ஐநுாறு கொய்யா காய்க்காது என்றான். ஏன்காய்க்காது என்றான் படித்தவன். தம்பி இது கொய்யா மரமல்ல; கொய்யா காய்ப்பதற்கு. இது தென்னை மரம் என்றார்.

நேர்மறை சிந்தனை : நான் என்ற அகந்தை உள்ள மனிதர்களுக்கு நேர்மறையான சிந்தனை இருப்பதில்லை. எப் போதும் எதிர்மறையாகவே சிந்திப்பார்கள். ஜென் கதை ஒன்று.
ஒரு ஜாடியில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி விட்டு, குரு சீடர்களிடம் ஜாடியைக் காட்டி என்ன தெரிகிறது என்றார். எதிர்மறையாளனான ஒரு சீடன் சொன்னான். பாதி ஜாடி காலியாக உள்ளது என்று. மற்றொரு சீடன் நேர் மறையாளன். அவன் சொன்னான, பாதி ஜாடி
தண்ணீர் உள்ளது என்று. ஒரே காட்சி; பார்வை இரண்டு.ரோஜாச் செடியைக் காண்பித்து, குரு சீடர்களிடம் கேட்டார். என்ன தெரிகிறது என்று. எதிர்மறையாளன் சொன்னான், செடியில் நிறைய
முட்கள் உள்ளன என்று. நேர்மறையாளன் சொன்னான் அழகிய ரோஜா பூத்து உள்ளது என்று. ஆம், ஒரே காட்சி பார்வை வேறு ஆகின்றது.அகந்தை உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணம் இருப்பதில்லை. எல்லோரையும் சந்தேகப்படுவது குற்றவாளி போலவே அனைவரை யும் பார்ப்பது; இவை எல்லாம் கர்வத்தின் விளைவே ஆகும். தன்னைப் போல பிறரை நேசிக்கும் உள்ளம் கர்வம் உள்ளவர்களுக்கு வருவதே இல்லை. நான் என்ற அகந்தையை அகற்றினால் தான் உள்ளத்தில் மனிதாபிமானம் பிறக்கும்; மனித நேயம் சுரக்கும்.முன்பு நடந்தது போலவே
எப்போதும் நடக்கும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. இந்த உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது. எனவே மாற்றங்களை ஏற்றுக் கொள்ள நம் மனம் தயாராக இருக்கவேண்டும். நான் மாற மாட்டேன்; நான் மாறாமல்அப்படியே தான் இருப்பேன் என்பது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து உலகில் நடக்கும் மாற்றங்களை எதிர்கொள்ள மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் பெரியவன் நான் பெரியவன் என்று நாம் எண்ணும் போதே நாம் மிகச் சிறியவன் ஆகி விடுகிறோம். ஆணவத்தால் அழிந்தவர்கள் பலர். நல் குணத்தால் மற்றவரை மதித்து தன்னைப் போலவே பிறரையும் நேசித்து மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து வாழ்ந்தவர்கள் இறந்த பின்னும் வாழ்கின்றனர்.கர்வத்துடன், ஆணவத்துடன், அகந்தையுடன் நடந்து கொள்ளும் மனிதனை வீட்டிலோ, அலுவலகத்திலோ, நாட்டிலோ யாரும் மதிப்பது இல்லை. ஆணவக்காரர்கள் பற்றிய பிம்பம் உடைந்தே இருக்கும்.என்னை மிஞ்சிய ஆள் உலகத்தில் இல்லை என்ற
எண்ணத்தை அகற்றி விட்டு, என்னை விட உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் உலகத்தில் உண்டு என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும்.மாமனிதர் அப்துல் கலாம், தன்னை விட வயதில் மிகவும்
குறைந்த மாணவ, மாணவியரை லட்சக்கணக்கில் சந்தித்து அவர்களை மதித்து அன்பு செலுத்தினார். அவர் ஜனாதிபதி பதவியில் இருந்த போதும் கர்வமின்றி எளிமையாகவே வாழ்ந்தார். தன் உதவியாளர்கள் நல்ல கருத்து சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் நான் என்ற அகந்தை இன்றி வாழ்ந்த காரணத்தால் தான் அவர் இறந்த பின்னும் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார். எனவே எல்லோரும் நான் என்ற அகந்தை அகற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

-கவிஞர் இரா.இரவி
எழுத்தாளர், மதுரை
98421 93103

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை