உணவுப்பண்டம் மீது விலை 'ஸ்டிக்கர்':கூடுதல் விலைக்கு ரயில்வே 'செக்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவுப்பண்டம் மீது விலை 'ஸ்டிக்கர்':கூடுதல் விலைக்கு ரயில்வே 'செக்'

Added : அக் 13, 2017
Advertisement

கோவை:உணவுப் பண்டங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை கட்டுப்படுத்தவும், தரமான உணவுப் பொருட்களை பயணிகளுக்கு வினியோகிக்கும் விதமாகவும் அனைத்து தகவல்கள் அடங்கிய 'ஸ்டிக்கர்' ஒட்டும் நடைமுறையை சேலம் ரயில்வே கோட்டம் கொண்டுவந்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தின்கீழ் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம் ஆகிய முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் உட்பட, 99 ஸ்டேஷன்கள் உள்ளன. லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் போக்குவரத்து சேவையை பயன்படுத்துகின்றனர்.
'பிளாட்பார்ம்' மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கான்ட்ராக்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கென, பிளாட்பார்ம் ஓட்டல்கள், 'பெட்டி ஷாப்' உள்ளிட்டவை ரயில்வே நிர்வாகத்தின் மூலம் 'கான்ட்ராக்ட்' விடப்படுகிறது.
ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்த விலையில், அனுமதிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே அங்குள்ள கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். பயணிகளை ஏமாற்றும் விதமாக, அதிக விலைக்கு விற்பனை செய்வதும், காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பதும் ஆங்காங்கே நடந்துவருவதால், ரயில்வே அதிகாரிகளும் அடிக்கடி ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர்.
இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, உணவுப் பண்டங்கள்மீது பல்வேறு தகவல்கள் அடங்கிய 'ஸ்டிக்கர்' ஒட்டி விற்பனை செய்யும் நடைமுறை சேலம் கோட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படுவதுடன், புகாருக்கு ஆளாகும் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவுப் பொருட்களில் ஜி.எஸ்.டி., உடன்கூடிய விலை, அளவு, தயாரிப்பு தேதி, விற்பனையாளர் பெயர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும்.
டீ, காபி கேன்கள், சைவ, அசைவ உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட அனைத்திலும் இந்த 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டிருக்கும். அதிக விலை வசூலிப்பவர் மீது பயணிகள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் கோட்டத்தில் ஈரோடுக்கு அடுத்தபடியாக கோவையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஸ்டேஷன்களிலும் இது அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அதிகாரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை