சினிமாவுக்கு கேளிக்கை வரியை குறைத்தது அரசு : விஷாலுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சினிமாவுக்கு கேளிக்கை வரியை குறைத்தது அரசு : விஷாலுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு

Added : அக் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement

திரைத்துறையினர் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, சினிமாவுக்கான கேளிக்கை வரியை, 10 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதை வரவேற்றுள்ள தியேட்டர் உரிமையாளர்கள், 'சினிமா டிக்கெட்டிற்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது' என்ற, விஷாலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சினிமா டிக்கெட் கட்டண நிர்ணயம் மற்றும் கேளிக்கை வரி தொடர்பாக, அரசு அதிகாரிகளுடன் திரைத்துறையினர் நேற்று பேச்சு நடத்தினர். பின், முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து, கேளிக்கை வரி, 10லிருந்து, ௮ சதவீதமாக குறைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தியேட்டர் லைசென்ஸ் உள்ளிட்ட விஷயங்களிலும், அரசு சலுகை வழங்கியது. இதை, தியேட்டர் உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர். இதற்கிடையில், சினிமா டிக்கெட் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், விஷால் வெளியிட்ட அறிவிப்பு: சினிமா டிக்கெட்டிற்கு, அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கேன்டீனில், எம்.ஆர்.பி., விலையில், பொருட்களை விற்க வேண்டும். 'அம்மா' குடிநீர் பாட்டில் விற்க வேண்டும். தண்ணீர் பாட்டிலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டும். பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது. 'ஆன் லைன்' கட்டணத்தை, விரைவில் ரத்து செய்ய வேண்டும். இதை மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது, அரசிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு, தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர், ஸ்ரீதர் கூறியதாவது:
அரசு நிர்ணயித்த, டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க தயாராக உள்ளோம். திண்பண்ட விஷயத்திலும், எம்.ஆர்.பி., விலையில் விற்க தயார். ஆனால், நடைமுறை எதுவும் தெரியாமல், குழந்தை தனமாக, விஷால் நடந்து கொள்கிறார். அவரை, தமிழக கவர்னராக நியமித்தார்களா என, தெரியவில்லை. கட்டண விஷயத்தில், அதிரடி காட்டியதாக கூறும் விஷால், 'துப்பறிவாளன்' படத்திற்கு பெற்ற, கூடுதல் கட்டணத்தை திரும்பி கொடுப்பாரா? சென்னையில், பொது இடங்களில், வாகனம் நிறுத்த வசூலிக்கப்படும் கட்டணத்தை நிறுத்தினால், நாங்களும், 'பார்க்கிங்' கட்டணத்தை பெற மாட்டோம். தியேட்டர் கட்டணத்தில் மூக்கை நுழைக்கும் விஷால், நடிகர்களின் சம்பளத்தை முதலில் குறைக்கட்டும். படத்தின் லாப, நஷ்டத்திற்கு ஏற்ப, சம்பளம் பெற நடிகர்கள் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201710:21:41 IST Report Abuse
Bhaskaran திரையரங்கினுள் குடிநீர் பாட்டில் 30 ரூபாய்க்கு விற்கும் இவர்கள் நியாயம் பேசுவது எந்தவிதத்தில் சரியானது. தமிழ் ராக்கர்ஸ் இவர்களால் மென்மெலும்வளரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை