Can not deny Hindu Terror says Kamal | இந்து தீவிரவாதம் இருக்கிறது: கமல் சர்ச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து தீவிரவாதம் இருக்கிறது: கமல் சர்ச்சை

Updated : நவ 03, 2017 | Added : நவ 02, 2017 | கருத்துகள் (405)
Advertisement
kamalhassan, kamal, ikamalhassan, HaasanHinduTerror, கமல்ஹாசன், கமல்,

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து, கமல் கூறிய கருத்து, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், இந்துத்துவ சக்திகள், மெதுவாக ஊடுருவுவது பற்றிய கேள்விக்கு, கமல் அளித்த பதில்: கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என, பல வழிகளில் பழமையை பரப்ப, சிலர் முயன்று வருகின்றனர். ஒரு தலைமுறையே, ஜாதி வித்தியாசம் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழமைவாதிகள், அவர்களுக்குள் புகுந்து, ஜாதி வித்தியாசங்களை போதிக்க துவங்கி உள்ளனர். இது தொடர்பாக, சினிமா கலைஞர்களையும், ஜாதி வாரியாக பிரித்து, பட்டியலிடும் வேலையையும், அவர்கள் துவக்கி விட்டனர்.

இதுவரை, வாதங்களால் செய்த விஷயங்கள், முடியாமல் போகவே, வன்முறையால் நிகழ்த்த ஆரம்பித்து விட்டனர். 'எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள்' என்ற சவாலை, அவர்களால் விட முடியாது. அந்த அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது.வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கையை விட, வலிமையே வெல்லும் என்ற நம்பிக்கை, காட்டுமிராண்டிகள் ஆக்கி விடும். சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக, தமிழகம் மாறும் நிலை, வெகு தொலைவில் இல்லை. இன்றைய நிலையில், கேரளா, முன்னுதாரணமாக திகழ்கிறது. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

கமலின் கருத்துக்கு, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பா.ஜ., மேலிட செய்தித் தொடர்பாளர், நரசிம்ம ராவ் கூறியதாவது: காங்., தலைவர், சோனியா, துணைத் தலைவர், ராகுல் ஆகியோர், இந்திய மக்களை, குறிப்பாக, இந்து மதத்தினரை சிறுமைப்படுத்தி பேசும் போக்கை கடைபிடித்தனர். அதை, பார்லிமென்டில், 'இந்து தீவிரவாதம்' என பதிவு செய்து, முன்னாள் அமைச்சர்கள், சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர், கச்சிதமாக அரங்கேற்றினர்.

இப்போது, கமல் பேசுவதை பார்த்தால், அவரையும், லஷ்கர் - இ - தொய்பா நிறுவனர், ஹபீஸ் சயீத், சிதம்பரம் போன்றோரின் பட்டியலில் தாராளமாக சேர்க்கலாம். அவர், காங்கிரஸ்காரர் போலவே பேசுகிறார். இவர்கள் இப்படி பேசுவதால், பாகிஸ்தானின் கை தான் ஓங்கும். கமல், கேரள கம்யூனிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளார். அங்கு நடக்கும் சிவப்பு தீவிரவாதத்தை, பார்க்காதவர் போல் கண்ணை மூடி, குறுகிய கண்ணோட்டத்துடன் பேசுகிறார். இது போன்ற கீழ்தரமான அரசியல்வாதியை, தமிழக மக்கள் நிராகரிப்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர், ராகேஷ் சின்ஹா கூறும்போது, 'அரசியல் லாபத்திற்காக, இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசும் கமல், அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். 'அவருக்கு, அரசியலுக்கு வர ஆர்வம் இருக்கிறது. அதற்காக, அவர் தேர்ந்தெடுத்துள்ள வழி, அவருக்கு அவரே சவக்குழி வெட்டுவது போல் உள்ளது' என, தெரிவித்து உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X