சென்னை: ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய 187க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை - ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில், 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில், மேலும் பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருமானம் குறித்து முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால், அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது. காலை 7.30 மணியளவில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காரில் வந்து சோதனை நடத்தினர். பின்னர், கர்சன் எஸ்டேட் வந்த அதிகாரிகள், கிரீன் டீ எஸ்டேட்டிலும் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து கோடநாட்டிற்கு மர பொருட்களை விநியோகம் செய்த சஜீவன் என்பவருக்கு சொந்தமான அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
அது போல் இளவரசியின் மகன் விவேக் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டி.வி. பழைய அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் , கோடநாடு எஸ்டேட், வேளச்சேரி பீனிஸ்க் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், தஞ்சை டாக்டர் வெங்கடேஷ் வீடு,பெங்களூருவில் அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, மன்னார்குடி திவாகரன் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த திநகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு, தினகரன் மாமனார் சுந்தரவதனம், தஞ்சையில் உள்ள வக்கீல் வேலு கார்த்திகேயன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.
பெங்களூரு சிறையில் சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்ததும், நேற்று இரட்டை இலை தொடர்பான விசாரணை நடந்து தேதி குறிப்பிடபடாமல் ஒத்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.