வாசிப்பின் முகவரி ஸ்ரீவில்லிபுத்தூர் சேதுராமலிங்கம்...| Dinamalar

வாசிப்பின் முகவரி ஸ்ரீவில்லிபுத்தூர் சேதுராமலிங்கம்...

Updated : நவ 10, 2017 | Added : நவ 10, 2017 | கருத்துகள் (3)
Advertisement

வாசிப்பின் முகவரி ஸ்ரீவில்லிபுத்துார் சேதுராமலிங்கம்...

ஒருவரைப்பற்றி கேள்விப்பட்ட உடனே அவரைப்பார்க்க வேண்டும் என்ற என் விருப்பம் கடந்த வாரம் நிறைவேறியது

அந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ஆகும் சந்திக்க விரும்பிய நபர் எஸ்எஸ்ஆர் என்றழைக்கப்படும் 91 வயது பெரியவர் சேதுராமலிங்கம்.
கடந்த 81 வருடங்களாக வாசிப்பை நேசித்து வரும் இவர் இதுவரை 27ஆயிரதற்திற்கும் மேலான புத்தகங்களை படித்து முடித்துள்ளார் ,இப்போதும் கண்ணாடி போடாமல் தினமும் ஐந்து மணி நேரம் வாசிப்பிற்கு செலவிடுகிறார்.


ஸ்ரீவில்லிபுத்துார் கந்துார் திருமண மண்டபம் அருகில் உள்ள செட்டியக்குடி தெருவில் இருக்கும் இவரது வீட்டை யார் கேட்டாலும் சொல்கிறார்கள்.

சின்ன காம்பவுண்டு அதற்குள் தீப்பெட்டி சைசில் அடுக்கு வீடுகள் அதில் கடைசி வீடு இவருடையது.வீட்டிற்கு இலக்கிய இல்லம் என்று பெயரிட்டுள்ளார்.வீடு நிறைய பெட்டிகளிலும் அலமாரிகளிலும் பீரோவிலும் என புத்தகங்கள் மட்டுமே காணப்படுகின்றன.முன் அறையில் உள்ள கட்டிலில் கையை தலையனையாக வைத்து உடம்பை சுருக்கிக்கொண்டு ஒல்லியான தேகத்தோடு தன் உடலை சாய்த்திருந்தார் அந்த புத்தகப்பித்தர் சேதுராமலிங்கம்.

நம் வரவை அறிந்ததும் முகமெல்லாம் மகிழ்ச்சியோடு எழுந்து வரவேற்றார் அதன் பிறகு சில மணி நேரம் எப்படிப்போனது என்றே தெரியவில்லை.
முழுநேரப்படிப்பாளியாக வாழ்ந்து வரும் அவருக்கு புத்தகங்களைப் படிப்பதும் பேசுவதும் தான் வாழ்க்கை, அதைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போது கண்கள் ஒளிர்கின்றன, பேச்சில் சந்தோஷம் பீறிடுகிறது.

பக்கத்தில் உள்ள கூமாபட்டியில் 1926ம் ஆண்டு பிறந்தவர் 9ம் வகுப்பு வரை படித்தவர் படிக்கும் போது இவரது குரல் வளம் காரணமாக சுதந்திர போராட்ட களத்தில் இவரை பலரும் பாடக்கூப்பிடுவார்களாம் அப்படி பாடுவதற்காக பாரதியாரின் கவிதைப் புத்தகத்தை கையில் எடுத்தவர் இன்று வரை எதாவது ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.
பள்ளிப்படிப்போடு பலசரக்கு கடைப்பக்கம் போனவருக்கு வாசிப்பு பிடிபட்ட அளவு வியாபாரமும் பிடிபடவில்லை ,குடும்பத்தினர் பார்வையில் இவர் பிழைக்கத்தெரியாத மனுஷர், இதனாலோ என்னவோ இவரது வாரிசுகள் யாரும் பெரிதாக வாசிப்பின் பக்கம் வரவேயில்லை.எப்படியோ தானுண்டு தன் வாசிப்பு உண்டு என்று உருண்டு உருண்டு இன்று 91வயதை தொட்டுவிட்டார்.


பேச்சு விரிந்து புதுமைப்பித்தன்,கு.ப.ரா,தி.ஜானகிராமன், வண்ணதாசன், தி.க.சி, சுந்தர ராமசாமி, கோணங்கி,எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் என வளர்ந்து கொண்டே போனது,

புதுமைபித்தனின் சிறுகதைகள் துவங்கி இப்போது வௌியாகியுள்ள கனமான நாவல்களை வரை அனைத்தையும் படித்துவிட்டார். உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, உயிரெழுத்து என எல்லா இதழ்களையும் வாசித்துவிடுகிறார், படித்த விஷயம் பிடித்திருந்தால் உடனே சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதி தனது பாராட்டினைத் தெரிவிப்பது அவரது இன்னோரு சிறந்த வழக்கம்.


இவ்வளவு புத்தகம் படித்த இவர் ஒரே ஒரு புத்தகம் எழுதியுள்ளார் ஆனால் அந்த முயற்சி அவருக்கு அவ்வளவு திருப்தி தராததால் வாசித்தலே போதும் என்ற முடிவிற்கு வந்துவிட்டார்.
இன்று வரை இருபத்தேழாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் படித்திருந்தாலும் பல புத்தகங்களை நுாலகங்களிலும் இரவலும் வாங்கித்தான் படித்துள்ளார் காரணம் பொருளாதாரப் பிரச்னை இவ்வளவு பிரச்னையிலும் தான் மிகவும் நேசித்து வாங்கிய ஆறாயிரம் புத்தகங்களை வீடு முழுவதும் அடுக்கிவைத்துள்ளார்.ஒவ்வொரு புத்தகத்தையும் அழகாக அட்டையிட்டு முகப்பில் புத்தகம் பற்றிய குறிப்பும் கடைசியிலும் இடையிலும் பிடித்த விஷயங்கள் பற்றிய குறிப்புகளும் எழுதிவைத்துள்ளார்.

இவரைத் தேடிவருபவர்களிடம் இந்த புத்தகங்களை படியுங்கள் என்று விலாவரியாக பேசி இரவலாக கொடுத்து படிக்கச் சொல்கிறார் ஆனால் இங்கே வருபவரும் குறைந்துவிட்டனர் புத்தகம் வாங்குபவர்களும் குறைந்துவிட்டனர் வாசிப்பவர்களும் குறைந்துவிட்டனர் என்கிறார் வருத்தத்துடன்.

பல ஆயிரம் சம்பாதித்தாலும் வாழ்நாளில் ஒரு புத்தகத்தைக் கூடப் படித்ததில்லை என்று பெருமை பேசும் மனிதர்களுக்கு இடையில் விருப்பமான புத்தகங்களை வாங்க போதுமான பணம் இல்லை,இருந்தாலும் யாரிடமாவது கேட்டு வாங்கியாவது எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவும் படித்துமுடித்துவிட வேண்டும் என்று கண்கள் நிறைய ஆசையுடன் பேசும் லிங்கம் போன்றவர்களைக் காண்பது அபூர்வம்.

தன் சம காலத்து எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்ததோடு அவர்களை மனதார நேசித்துமிருக்கிறார் அவர்களில் பலரை பார்த்து உரையாடியதை பெருமையாகவும் போற்றுகிறார்.
நா. பார்த்தசாரதி எனது நண்பர், தோழர் ஜீவா என்னுடன் பழகியிருக்கிறார், சி.சு. செல்லப்பா எப்போது இந்தப் பகுதிக்கு வந்தாலும் என்னைத் தேடி வந்து பார்த்து தங்கிவிட்டுத்தான் போவார், ஜெயகாந்தனும் எனது இனிய நண்பர்,எஸ்.ரா தனது எல்லா படைப்பையும் எனக்கு அனுப்பிவைப்பார் நான்தான் விஞ்ஞானம், குழந்தை இலக்கியம் போன்றவைகள் எனக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன் என்கிறார்.

தீவிரமான இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகள் மட்டுமே வாசிக்கப் பிடிக்கும், பாரதி எனக்கு விருப்பமான ஆளுமை, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக படித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
இப்போது காது சரியாக கேட்பது இல்லை ஆகவே எதிர்முனையில் பேசுபவர்களை சிரமப்படுத்தக்கூடாது என்பதற்க்காக போன் உபயோகிப்பது இல்லை முன்னாடி எப்போதும் படித்துக் கொண்டேதான் இருப்பேன் இப்போது தலை சுற்றல் மயக்கம் சோர்வு போன்றவை ஏற்படுவதால் நீண்ட நேரம் படிக்கமுடிவதில்லை கையை தலைக்கு வைத்து படுத்திருப்பேன் கொஞ்சம் உற்சாகம் வந்ததும் எழுந்து படிப்பேன் சோர்வு வந்ததும் படுத்துவிடுவேன்.

இன்னும் கொஞ்சம் புத்தகம் படிக்கவேண்டும் அதற்காக இன்னும் கொஞ்ச நாள் வாழணும்ணு ஆசைப்படுகிறேன்...என்று கேட்பவர் மனம் கலங்க ஆனால் தான் கலங்காமல் பேசிமுடிக்கிறார் சேதுராமலிங்கம்.

இவரைப் போன்றவர்களை கொண்டாடவிட்டாலும் குறைந்தபட்ச அங்கிகாரத்தை படிப்புலகம் வழங்க வேண்டும் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களும் இவரை நேசிக்க விருப்பம் உள்ளவர்களும் இவரைச் சந்திக்க முடிந்தால் சந்தித்து முடிந்த அளவு சந்தோஷப்படுத்துங்கள்.நன்றி!

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yaalnila - madurai,இந்தியா
26-பிப்-201815:27:22 IST Report Abuse
yaalnila வாசிப்பின் சுவை உணர்ந்தவர் ..வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
11-நவ-201723:43:13 IST Report Abuse
ஏடு கொண்டலு வாட்ஸாப்ப்புல வந்ததை, அப்படியே நம்முடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பிவிட்டு அதை பற்றி மறந்துவிடும் இந்தக் காலத்துக்குச் சற்றும் பொருந்தாத பழைய பயித்தியங்களில் ஒன்று. தந்தை படித்த புத்தகங்களை, எடைக்குப் போட்டுக் காசாக்கவேண்டிய பழங்குப்பையாகக் கருதும் பிள்ளைகள் நிறைய பேரைப் பார்த்தாகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Vijayabaskar Ramachandran - Hong Kong ,சீனா
11-நவ-201714:08:06 IST Report Abuse
Vijayabaskar Ramachandran பெரியவருக்கு வாழ்த்துக்கள். அவருக்கு உடல் நலனும், பிடித்த புத்தகங்களும் ஒருங்கே கிடைக்கட்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X