தீராத விளையாட்டு பிள்ளை திரு| Dinamalar

தீராத விளையாட்டு பிள்ளை திரு

Added : நவ 19, 2017
Advertisement
தீராத விளையாட்டு பிள்ளை திரு

தமிழ் சினிமாக்களில் காதல் மற்றும் சண்டை காட்சிகள் வழக்கமாக இருப்பது தானே என்று, சலிப்படைய வைக்காமல் தனது இயக்கத்தில் தயாரான அனைத்து படங்களிலும் அக் காட்சிகளை ரசிக்கும்படி வைத்தவர் இயக்குனர் திரு. 'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' படங்களை இயக்கி இளைஞர்களுக்கு பிடித்தவராகி விட்டார். கல்லுாரி மாணவர் போல இளமை தோற்றம் கொண்ட இவர் பேசிய நிமிடங்கள்...
* உங்களை பற்றி...நான் குடியாத்தத்தில் பிறந்தவன், அங்கே பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கல்லுாரி படிப்பிற்காக சென்னைக்கு வந்தேன். சினிமா மீதான ஆர்வத்தால் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.
* குறும்படங்கள் இயக்கி எளிதில் திரைப்பட இயக்குனர் ஆகிறார்களே...எனக்கு முதலில் 'பத்ரி' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் 10 ஆண்டாக உதவி இயக்குனராக பணியாற்றினேன். இப்போது குறும்படங்கள் மூலம் எளிதில் இயக்குனராக முடிகிறது. நான் சினிமாவில் நுழைந்த போது இது போன்ற வாய்ப்புகள் இல்லை. கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளனர். * காதலில் தீராத 'விளையாட்டு பிள்ளையா'...ஆம், நான் காதல் திருமணம் தான் செய்து கொண்டேன். என் மனைவி இயக்குனர் அகத்தியன் மகள் கார்த்திகா. காதலித்த பின்பு தான் இயக்குனரின் மகள் என்பது தெரியும்.
* மூன்று படங்களிலும் விஷால் ?விஷால் நடித்த 'சத்யம்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினேன். அப்போதிருந்தே விஷால் எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். விஷாலுடன் முதல் படத்தை முடித்து, அடுத்த படத்திற்கு வேறு ஹீரோவை தேடினேன். யதார்த்தமாக தான் தொடர்ந்து 3 படங்களும் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
* ஒவ்வொரு படங்களுக்கும் பெரிய இடைவெளி...10 ஆண்டுகளில் 3 படங்கள் மட்டுமே எடுத்துள்ளேன். அதுமட்டுமில்லை விக்ரம், ஜெய் ஹீரோவாக வைத்து ஆரம்பித்த படங்கள் சில காரணங்களால் கைவிடப்பட்டது. என் இடைவெளிக்கு இது தான் காரணம். * சினிமாவில் கருத்துரிமை நசுக்கப்படுகிறதா...விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்பட்டாலும், சில படங்களின் திரையிடலின் போது ஏதோ காரணங்களை சொல்லி தடை செய்யப் பார்க்கிறார்கள். சர்ச்சையாகவும், மனது புண்படும்படியாகவும் காட்சிகள் இருந்தால் எதிர்ப்பு தெரிவித்து பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
* உங்களின் குரு...குரு என்று குறிப்பிட்டு யாரும் இல்லை. நிறைய இயக்குனர்களிடம் சினிமாவை கற்றுக் கொண்டேன். ஆனால், எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்னம், அவர் படங்களை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்.
* உங்கள் இயக்கத்தில் அடுத்து...'மிஸ்டர் சந்திரமவுலி 'என்ற தலைப்பிடப்பட்ட படத்தில் கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இருவரும் அப்பா ,மகனாகவே நடிக்கிறார்கள், விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளேன்.thirucan@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X