காதலும், காமெடியும் அவசியம்| Dinamalar

காதலும், காமெடியும் அவசியம்

Added : நவ 19, 2017
Advertisement
காதலும், காமெடியும் அவசியம்

ஒவ்வொரு இயக்குனருக்கும் முதல் படம் என்பது தலைபிரசவம் மாதிரி. தனது மேயாத மான் படம் சுகப்பிரசவசமாக டெலிவரி ஆன சந்தோஷத்தில் அடுத்த படத்திற்கான திரைக்கதையை உருவாக்கும் ஆர்வத்தில் மூழ்கியிருந்த இயக்குனர் ரத்னகுமார், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...
* கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு சினிமாவில் எப்படி...?நான் சென்னை புழலை சேர்ந்தவன். எங்கப்பா, அம்மாவுக்கு துாத்துக்குடி கோவில்பட்டி பக்கம். கல்லுாரி படிப்பு முடிந்த பின், கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஓராண்டு வேலை செய்தேன். அந்த இயந்திர வாழ்க்கை ஏனோ பிடிக்கவில்லை. அப்போது விஸ்காம் படிப்பிற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததால், அதை படித்துவிட்டு சினிமாவிற்கு வந்தேன்.
* அந்த பிளாஷ்பேக்?கருப்பம்பட்டி படத்தில் உதவி இயக்குனராக இருந்தேன். அடுத்து 'மது' என்ற குறும்படத்தை தயாரித்தேன். அதைதான் 'மேயாத மானாக' டெவலப் பண்ணி இயக்கினேன். கார்த்திக் சுப்புராஜ் 6 குறும்படங்களை படமாக தயாரிக்க திட்டமிட்டார். அதில் எனது 'மது' படமும் ஒன்று.
* முதல் படத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர் எப்படி?எனது குறும்படத்தை வைபவ் பார்த்துவிட்டு, அதை படமாக எடுத்தால் நடிக்க விரும்புவதாக கூறினார். அப்போது எனக்கு அந்த ஐடியா இல்லை. போலீஸ் கதை உள்ளது என்றேன். அது நமக்கு 'செட்' ஆகாது என்ற வைபவ், ஓராண்டாக தொடர்ந்து என்னிடம் பேசி வந்தார். மேயாத மான் திரைக்கதை உருவானதும், கதைக்கேற்ப வைபவ்வை ஹீரோவாக நடிக்க வைத்தோம்.
ஹீரோயினை பொருத்தவரை குடும்ப பெண் சாயலில் இருந்தால் நல்லது எனக்கருதி, சாய்பல்லவியிடம் பேசினோம். அவரும் 'ஓ.கே.' என்றார். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அப்போதுதான் பிரியா பவானிசங்கர் இமெயில் மூலம் தொடர்பு கொண்டு, கதை கேட்டு நடித்தார்.
* அதென்ன மேயாத மான்?இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் 'இதயம் முரளி'. இந்த டைட்டிலை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்து வைத்திருந்ததால், வேறு தலைப்பை தேடினோம். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால் நல்லது எனக்கருதி, கதைக்கேற்ற தலைப்பாக மேயாத மான் என வைத்தோம். படத்தில் காதலோடு காமெடியையும் சேர்த்து சொன்னதால் அனைவராலும் ரசிக்க முடிந்தது. கமர்ஷியலுக்கு இது அவசியமும்கூட.
* முதல் படத்தை 'சக்சஸ்' ஆக கொடுக்கும் இயக்குனர்கள், அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெற முடிவதில்லையே?பல ஆண்டு அனுபவத்தை முதல் படத்தில் கொடுக்கும்போது அது வெற்றியாக மாறிவிடுகிறது. அடுத்ததாக நல்ல கதை, திரைக்கதை இருந்தாலும் தயாரிப்பாளர், வணிக ரீதியான விற்பனை போன்றவற்றிக்கு 'கமிட்' ஆகும்போது அதுபோன்ற சூழல் ஏற்படலாம்.
* அடுத்த படம்?காதலுக்கு பின் ஒரு வாழ்க்கை எல்லோருக்கும் இருக்கும். அதை திரைக்கதையாக வடிவமைத்து வருகிறேன்.வாழ்த்த: mr.rathna@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X