நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை வாங்கும் பொழுது அதன் விலை, தரம் போன்றவற்றை கணக்கில் கொள்வதுடன் மிக முக்கியமாக எந்த நிறுவனம் அதை தயாரித்தது என பார்த்துதான் வாங்குகிறோம். ஒரு நல்லபொருள் வரவேண்டும் என்றால் அதற்கு அடிதளமாக
தரமான தொழிற்சாலை அவசியம். நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கே இந்தநிலை என்றால் நமது வாழ்க்கைக்கும், வாழ்வியல் தரத்திற்கும் மிகவும் முக்கியமாக தேவைப்படும் உற்சாகத்திற்கு எத்தகைய தொழிற்சாலை இருக்க வேண்டும் என யோசித்து பார்த்தால் வியப்பாக இருக்கும். உன்னத வளமான வாழ்க்கை சூழ்நிலைகளில் வெற்றி பெறவேண்டும் என்றால், அதற்கு உற்சாகம் அவசியம். உற்சாகம் வாழ்க்கையில் இருந்துவிட்டால் குடும்பம் மகிழ்ச்சி
யாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். தொழிலில் சாதித்து லாபகரமான வாழ்க்கையை ஈட்டவேண்டும் என்றால், அதற்கும் உற்சாகம் மிகவும் முக்கியமான காரணி. சமூகத்தில் சிறந்த அந்தஸ்தை அடைந்து மதிப்புமிக்கவர்களாக வாழ்வதற்கும் உற்சாகம் தேவைப்படுகிறது. இவ்வளவு ஏன்? ஆரோக்கியமாகவும், அமைதி யாகவும் வாழ்வதற்கே உற்சாகம்
வேண்டும். இந்த உற்சாகம் எங்கே இருக்கிறது என நம்மில் பலர் இன்னமும் தேடி கொண்டுதான் இருக்கிறோம். பலர் உற்சாகத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். இன்னும் பலர் நம்மிடையே உற்சாகம் இல்லை என வருந்துகின்றனர். உற்சாகம் வேறெங்கும் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் அது நிரந்தரமாகவும் இருந்துவிடுவதில்லை.உற்சாகத்தை உருவாக்கும் தொழிற்சாலை ஒன்று, அவர்களுக்குஉள்ளேயே சத்தம் இல்லாமல் இயங்கிவருகிறது. அந்த தொழிற்சாலை உத்வேகத்தையும் ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சியையும் நொடிபொழுதில் உருவாக்கிடும் திறன் படைத்தது - அதுதான் மனம்!
வெற்றிக்கான வழித்தடம் : இன்றைய சமூகத்தில் சராசரி மனிதரின் வாழ்க்கையும் வெற்றி என்ற கண்ணோட்டத்தில் தான் அனைவராலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வெற்றி என்பது வெறும் பணத்தை மட்டும் வைத்து கொண்டு மதிப்பீடு செய்யப்படுவதில்லை. ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தையும் அவர்களது வாழ்க்கையின் மூலம் மற்றவர்கள் அடையும் பலன்களையும், வாழ்க்கை முறையில் மகிழ்ச்சியின் பிரதிபலிப்பை வைத்துகொண்டு வெற்றியின் தரம் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு மதிப்பீடு செய்பவர்களின் தொழில் மற்றும் சமூகத்தினரோடும், குடும்ப உறுப்பினரும் உறவினர்களும் அடங்கியுள்ளனர். இத்தகைய வெற்றியை பெறுவதற்கு பல்வேறு சூழ்நிலைகளில் பலதரப்பட்ட காரணிகள் தேவைப்பட்டாலும் மனிதர்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது உற்சாகம் எனும் மந்திர சக்தி. உற்சாகம் வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கும் ஒரு வழித்தடம், அதன் துணைகொண்டு வாழ்க்கையில் நடைபோடுவோர் ஆர்ப்பரிக்கும் வெற்றியினை பெறுகின்றனர். எல்லா வசதிகளும் இருந்தும் வாழ்க்கையில் உற்சாகம் இல்லையென்றால், வெற்றி மிக பெரிய கேள்விக்குறியாகும். வாழ்க்கையில் உற்சாகமற்றவர்கள் வெற்றிக்கான வழித்தடம் தெரியாமல் தவித்து நிற்கின்றனர். இதற்கு மாறாக வெற்றிக்கான வழித்தடம் உற்சாகம் என்று கருதுபவர்கள் விறுவிறுப்பாக வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர்.
உற்சாகமும், மனமும்பிரபஞ்சத்தில் மனதிற்கு இணையான சக்தி இல்லை.
எல்லையற்ற பரப்பளவு கொண்ட மனம் கற்பனைக்கும் எட்டாதகாரியங்களை செய்திடவும் முடியும்,அதை அழித்திடவும் முடியும். மனம் ஒளியைவிட அதிவேகமாக பயணிக்கூடிய ஆற்றல் கொண்டது,அது உணர்வுகளை வல்லமை படைத்த சக்தியாக மாற்றும் காரணியாக அமைந்து மனிதர் களுக்கு உற்சாகத்தை வாரி வழங்குகிறது. மனம், செயல்களுக்கு வழிக்காட்டி; செயல்கள், குணாதிசயங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி. இது மனசக்தியின் வெளிப்
பாடாகும். மனதில் உருவாகின்ற உற்சாகத்தை பொறுத்தே வாழ்க்கை முறையும் அதனால்
வருகின்ற வெற்றியும் அமைகிறது. மகிழ்ச்சியாக தங்களது ஆளுமை திறன்களை வெளிப்படுத்தி தங்கள் தனிதிறன்களை ஆக்கப்பூர்வ செயல்களுக்கு பயன்படுத்தி
கொள்பவர்களுக்கு வெற்றிகிட்டும். இதற்கு மாறாக மனதில் தேவையில்லாத சுமையை ஏற்றிகொண்டு தன்னம்பிக்கை இழந்த நிலையில் மனஅழுத்தத்துடன் வாழ்பவர்களுக்கு மனம்
உற்சாகத்தை அளிக்காது. மனதில்உற்சாகம் இல்லையென்றால் ஆரோக்கிய எண்ணங்களும்
ஆக்கப்பூர்வ செயல்களும் ஏற்படுவதில்லை. அது மனித சக்தியை சுருங்க செய்து வலிமை அற்றவர்களாக சமுதாயத்தில் பிரதிபலிக்க வைக்கும்.
மனம் மலரட்டும் : வாழ்தல் இனிது என்ற அடிப்படையில் தங்களுக்கு தேவையான மகிழ்ச்சி அனுபவங்களை பறைசாற்றி வாழ தயாராக வேண்டும். உற்சாக நிலையில் குடும்பத்தின் மகிழ்ச்சியும், இன்பமும் அடங்கியுள்ளது. மனம் ஆரோக்கியமாக மலர்ந்தால் மட்டும் அவர்கள் எண்ணிய நற்பலன்கள் வாழ்க்கையில் கிடைக்கிறது. நல்ல உடல் நிலை, அமைதியான குடும்ப சூழ்நிலை, லாபகரமான தொழில், சமூகத்தில் நன்மதிப்பு ஆகியவை மனதில் உதயமாகும் உற்சாக நிலையை பொறுத்தே அமைகிறது.உன்னத உற்சாகத்தை உருவாக்குவதற்கு மனதை மதிக்க தெரியவேண்டும். தங்களது மனதில் விதைக்கப்படும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் பிரகாசமான
பலன்கள் இருக்கிறது என்பதை உளமாற உணரவேண்டும்.இதன் தொடர்ச்சியாக மேலும் எவ்வாறு நடந்துகொள்வது என யோசிப்பவர்களுக்கு இதோ சில எளிய வழிமுறைகள்:
* காலையில் கண் விழிக்கும் வேளையில், இன்று இது எனது நாள், நான் மகிழ்ச்சியோடு இருப்பேன் என்று தீர்மானித்து கொண்டு அந்த நாளுக்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
* அதிகாலையில் மனதிற்கினிய மெல்லிய இசையையோ, மனதை அமைதிப்படுத்தும்
நறுமணத்தையோ, இயற்கையை பார்த்து சுவாசிக்கும் சூழ்நிலையையோ உருவாக்கிகொள்ளவேண்டும்.
* மனஅமைதியை பாதிக்கின்ற கோபம், வெறுப்பு, பழிவாங்கும் குணம் போன்றவற்றினை தவிப்பதற்காக சிறு நிமிடங்கள் அமைதியாக தியானித்தால் மிகவும் நல்லது.
* உற்சாகமாக இருப்பதை உங்களின் தனிப்பட்ட உரிமையாக தீர்மானித்து கொள்ளுங்கள், இதை சீர்க்குலைக்க அல்லது தடுத்து நிறுத்த எவரையும் அனுமதிக்கமாட்டீர்கள் என்று மனதில் பதியவையுங்கள்.
* மன அழுத்தத்தை குறைத்து கொள்வதற்காக புத்தகம் வாசித்தல் மற்றும் எழுதும் பழக்கத்தை கற்றுகொள்ளுங்கள்.
* தேவையானவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்கள் உதவிகளை பெற்றவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை உணர்வுடன் உள்வாங்கி கொள்ளுங்கள். அது உங்கள் மனதில் இருக்கும் அழுத்தங்கள் கலைந்து புது நம்பிக்கையை உற்சாகத்தோடு அளிக்கும். இறுதியாக எல்லா வாழ்க்கை சூழ்நிலையிலும் மாபெரும் வெற்றி அடைவீர்கள் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் ஆழமாக பதித்துவிடுங்கள்; அது மிகப் பெரிய வெற்றியாக மலரும்.
உற்சாகத்தை உருவாக்குவோம்உற்சாகம் என்றுமே ஏற்றம் தரும் என நினைத்து வாழ தொடங்கினால்வாழ்க்கையில் வெற்றி ஜோதி பிரகாசமாக ஒளிரும். உற்சாகத்தை உருவாக்கும் வாய்ப்பு அனைவருக்குமே இருக்கிறது என்பதை புரிந்துகொண்டால் உற்சாகத்தை தேடி எங்கும் அலைய தேவையில்லை. நமது மனதை பக்குவத்தோடு பாதுகாத்து நமக்கு தேவையான வெற்றிகனை பெறுவதில் தான் உற்சாகத்தை உருவாக்கும் திறன் வெளிப்படும்.
--நிக்கோலஸ் பிரான்சிஸ்
தன்னம்பிக்கை எழுத்தாளர்
மதுரை. 94433 04776