சென்னை: மனதின் குரல் என்ற பெயரில், தன்னுடைய நடவடிக்கைகள், மத்திய அரசின் நடவடிக்கைகள், இந்தியாவுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் என, எல்லாவற்றையும் தொகுத்து, மாதம் தோறும் வானொலி மூலம் பேசி வருகிறார் பிரதமர் மோடி.
அரசின் செயல்பாடுகள், நாட்டு நலன் குறித்து அவர் பேசினாலும், அதிலும் அரசியல் செயல்பாடுகள் உள்ளன. சில விஷயங்களுக்கு மக்களை தயார்படுத்தும் வேலையை செய்து வருகிறார். கடந்த 25ல், வானொலியில் பேசிய பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பேசினார். கூடவே, தமிழகத்தின் பிரதான நாயகனாக இருந்த தஞ்சை ராஜராஜ சோழன் குறித்தும், முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் ஆட்சி குறித்தும் பேசி பெருமைப்படுத்தினார். இதெல்லாமே, திட்டமிட்டு மக்களை தயார்படுத்துபவைதான் என்று, பா.ஜ., வட்டாரங்களிலேயே பேசுகின்றனர்.
அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: குஜராத், இமாச்சல பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல்கள் முழுமையாக முடிவடைந்த கையோடு, மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தை மையமாக வைத்து, பா.ஜ., தீவிர அரசியல் செய்யப் போகிறது. அதற்காகத்தான், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ராஜராஜ சோழன், காமராஜர் குறித்தெல்லாம், மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேசி இருக்கிறார். இந்த இரு மாநிலங்களையும் மையமாக வைத்து, விரைவில் பல்வேறு திட்டங்களையும் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.