barathi | அவன் ஒரு அதிசயம்| Dinamalar

அவன் ஒரு அதிசயம்

Updated : டிச 01, 2017 | Added : டிச 01, 2017 | கருத்துகள் (1)
Advertisement

பாரதி யார்?
அவன் ஒரு அதிசயம்
அவன் ஒரு அவசியம்
அவன் ஒரு அவதாரம்
அவன் ஒரு லட்சியம்
முப்பத்தொன்பது வயதிற்குள்ளே முன்னுாறு பேர்களின் வாழ்க்கையை வாழ்ந்தவன்,மூச்சுக்கு மூச்சு தேசமென்ற பாடியவன்,தேசமே தெய்வமென்று வணங்கியவன்,சாதிக்கொடுமைகளை சகிக்காதவன்,மூடநம்பிக்கைகளை சாடியவன்,பராசக்தியின் செல்லமகன்,பாரதத்தாயின் தவப்புதல்வன்,எட்டையபுரத்தில் சுப்பையாகவாகப் பிறந்தவன்,பாரதியாக வளர்ந்தவன்,மகாகவியாக மலர்ந்தவன்.

அருமைத்தமிழை அழகு செய்த நம் பாரதிக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 11ந்தேதி 135 வது பிறந்த நாள்,இந்த நல்ல நாளில் அவரது பெருமையை போற்றும் விதத்தில் சென்னையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அதில் ஒன்றுதான் பாரதி யார்? என்கின்ற நாடகம்
வருகின்ற 09/12/17 ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி வளாகம் பாரத் கலாசார் மையத்தில் நடைபெற உள்ளது.
இந்த நாடகத்தினை பாரதிப்பிரியர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் திரளாக பார்க்கவேண்டும் ஆகவே நீங்கள் நாடக ஒத்திகையை வந்து பாருங்களேன் என்று நாடகத்தின் வசனகர்த்தாவும், பாரதியாக நடிப்பவருமான இசைக்கவி ரமணன் அழைப்பிதழ் கொடுக்கும் போதே ஒத்திகைக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.
ஒத்திகை சென்னையில் உள்ள அமரர் எஸ்.வீணை பாலசந்தர் வீட்டில் நடந்தது.

'அந்த நாள்' படம் பார்த்தது முதல் வீணை எஸ்.பாலசந்தர் மீது அலாதி பிரியம் கொண்டவன் நான் ஆகவே அவர் வாழ்ந்த வீட்டிற்கு செல்வதையே பெருமையாக கருதிச் சென்றேன்.பழம் பெருமையுடன் ஒரு கலைக்கூடம் போல வீடு இருந்தது.
நாடகத்தின் இயக்குனரும் எஸ்.பாலசந்தரின் மகனுமான எஸ்.பி.எஸ்.ராமன்,அவரது தாயார் சாந்தாம்மா,துணைவியார் தர்மா ராமன் மற்றும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் காட்டிய அன்பும் விருந்தோம்பலும் சிறப்பாக இருந்தது இது எனக்கானது அல்ல இசைக்கவி ரமணன் நண்பருக்கானது என்பதால் எல்லா நன்றிகளும் அவருக்கே சமர்ப்பணம்.
இனி நாடகத்திற்குள் செல்வோம்...
பாரதியை பல கோணங்களில் எழுத்து சினிமா நாடகம் என்று பல ஊடகங்களில் பார்த்திருப்பதால் இவர்கள் எப்படி பாரதியைப் பார்க்கப் போகின்றனர் என்ற ஆர்வம் நிறையவே இருந்தது.
ஒத்திகை என்றால் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் என்பதற்கு நேர்மாறாக மேடையில் நடந்ததைப் போலவே நாடகம் நடந்தது.
ஒட்டு மீசை இல்லாமல் ஒரு காட்சியில் பாரதிதாசன் தோன்ற மீசையோடு வந்தாலே ஆச்சு என்று பிடிவாதமாக இருந்த அந்த ஒரு விஷயத்திலே இயக்குனர் ராமனின் 'பெர்பக்சன்' தெரிந்தது, அது நாடகம் முழுவதுமே தெரித்தது.
பாரதியின் மரணத்தோடு துவங்கும் நாடகம் பிளாஷ் பேக் முறையில் பின்னோக்கி சென்று அவரது வாழ்க்கையின் அனைத்து சாரம்சங்களையும் சுருக்கமாகவும் சுவையாகவும் தருகிறது.
பாரதி பற்றி நமக்கு தெரிந்த விஷயங்களுடன் நமக்கு தெரியாத பல விஷயங்களையும் இந்த நாடகம் தருகிறது உதாரணத்திற்கு ஒன்று சொல்வதனால் கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதனின் மரணம் பாரதியாரிடம் எப்படி எதிரொலித்தது என்பது போன்ற விஷயத்தை சொல்லலாம்.
வறுமைக்கும் புலமைக்கும் நடுவே எப்போதும் ஊடாடிக்கொண்டிருந்த பாரதி வேடத்திற்கு மிக பொருத்தமாக இருந்தார் இசைக்கவி ரமணன்.இவருக்கும் சரி பாரதிக்கும் சரி பொதுவானவர் பராசக்தி என்பதாலும், இவர் ஒரு இசைக்கவி என்பதாலும் பாடல்களிலும் வசன உச்சரிப்பிலும் பிரமாதப்படுத்தினார்,அதிலும் மழை நேரத்து கவிதையிலும், மரண நேரத்து கவிதையிலும் பிரமிப்பை ஏற்படுத்திவிட்டார்.இசைக்கவி ரமணனுக்கு இந்த நாடகம் ஒரு மைல்கல்லாகவே இருக்கும்.
வழக்கமாக செல்லம்மாவை அரிசிக்கும் பருப்புக்கும் அல்லாடுபவராக சித்திரித்துவந்த நிலையில், இதில் பாரதியின் கவிதையை கண்டு சிலிர்ப்பவராகவும்,அவர் குழந்தைகளோடு மகிழ்ந்திருப்பதை பார்த்து சிரிப்பவராகவும்,பாரதியின் ஆரோக்கியத்திற்காக துடிப்பவராகவும்,கணவரின் சகல இன்ப துன்பங்களிலும் பங்கேற்பவராகவும்,பாரதியோடு வாதப்பிரதிவாதம் செய்யும் புத்திசாலியாகவும் நாடகம் முழுவதிலும் செல்லம்மாவாக தர்மா ராமன்வருகிறார், மனதில் நிற்கிறார்.
பாரதியின் வளர்ப்பு மகள் யதுகிரியாக வரும் கிருத்திகாவை ஒரு பெண் பாரதி என்றே சொல்லலாம் நடிப்பிலும் பாட்டிலும் அவ்வளவு ஜீவன், சபாஷ்!
இன்னும் பாரதியின் நண்பனாக துணைவனாக போலீசாக ஜாமீன்தாராக மைத்துனராக வந்த மற்ற நாடகபாத்திரங்கள் யாவரும் குறையின்றி நிறைவுடன் செய்திருந்தனர்.

வீட்டின் கூடத்தில், மேஜை நாற்காலிகளுக்கு நடுவே, 'லைட்ஸ் ஆன்' 'லைட்ஸ் ஆப்' 'மெயின் லைட்ஸ் ஆன்' என்ற ஒத்திகைக்கான சத்தங்களுக்கு நடுவில் நடந்த போதே என்னை மிகவும் நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய இந்த நாடகம், முழுமையான விளக்கு வெளிச்சத்தில் மேடை அலங்கார உச்சத்தில் நடக்கும் போது பார்வையாளர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.
நாடகம் மேடையேறிய பிறகு பார்த்து எழுதுவதால் வாசகர்களாகிய உங்களுக்கு பயன் இருக்கப் போவது இல்லை, நடப்பதற்கு முன்பாகவே சொல்லிவிட்டால் நீங்கள் நாடகம் பார்க்க தயராகிவிடுவீர்கள் ஆகவேதான் ஒத்திகையை பார்த்துவிட்டு இங்கே எழுதுகிறேன்,நாடகம் காணத் தயராகுங்கள்.

இலவச அனுமதியுடன் நடைபெறும் இந்த நாடகம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்க இசைக்கவி ரமணனை தொடர்பு கொள்ளவும் எண்:9940533603.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
04-டிச-201711:49:49 IST Report Abuse
ganapati sb மஹாகவி பாரதியை எவ்வளவு யார் எப்படி போற்றினாலும் தகும் இசைக்கவி ரமணனும் பொருத்தமானவர் நாடகம் வெல்ல வாழ்த்துக்கள் முடிந்தால் இதை ஒரு திரைப்படமாகவும் கொண்டுவரலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X