சீனாவில் ராமநாதபுரம் தமிழன் - கலக்கும் பாண்டியன் ஐஏஎஸ்| Dinamalar

சீனாவில் ராமநாதபுரம் தமிழன் - கலக்கும் பாண்டியன் ஐஏஎஸ்

Added : டிச 03, 2017
Advertisement
சீனாவில் ராமநாதபுரம் தமிழன் - கலக்கும் பாண்டியன் ஐஏஎஸ்

உயர்பதவிக்கு வர நகரில் வசிக்கும் இளைஞர்களுக்கு தான் திறமை இருப்பதாக எண்ணி, கிராமப்புற இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர தயங்குகின்றனர்.
ஆனால், இதை முறியடிக்கும் விதமாக 33 ஆண்டுகளுக்கு முன் ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் டி.ஜெ., பாண்டியன். ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர். இன்றைக்கு சீனாவில் இந்திய தலைமை முதலீட்டு அதிகாரி பதவி வகித்து தமிழரின் பெருமையை நிலை நாட்டுகிறார்.மதுரை வந்திருந்த அவர் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்.....
என்னுடன் பிறந்த அனைவரும் ஆசிரியர் பணிக்கு சென்றுவிட்டனர். நான் ஐ.ஏ.எஸ்., ஆக என் தந்தை ஊக்கம் அளித்தார். 6 வது வயதில் இருந்தே, தினமலர் படித்தேன். நாளிதழ் மூலமே நாட்டு நடப்பை அறிய முடிந்தது. எம்.பி.ஏ., முடித்து விருதுநகர் தனியார் கல்லுாரியில் தற்காலிக பேராசிரியர் பணி பெற்றேன். அங்கு தான் எனது ஐ.ஏ.எஸ்., கனவுக்கு விதை கிடைத்து விருட்சமாக மாற உதவியது. கல்லுாரி நுாலகத்தில் அரசியல் அறிவியல், வணிக நிர்வாகம், வணிகவியல் பாடபுத்தகம் கிடைத்தது.

பேராசிரியர் பணியின்போதே மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் தினமும் 2 மணி நேரம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்றேன். குஜராத்தில் மட்டுமே 20 ஆண்டு பணிபுரிந்து, துணை செயலர் முதல் தலைமை செயலர் பதவி வரை வகித்தேன். குஜராத்தில் பள்ளிசெல்லா குழந்தைகள் எண்ணிக்கையை குறைக்க அரசு உத்தரவிட்டதால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து பெண் கல்வியை வளர்த்தோம்.

தமிழக இளைஞர்களிடம் அறிவுசார்ந்த தேடல் அதிகம் உள்ளன. ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிபெறுவது பெரிய விஷயம் அல்ல. ஐ.ஏ.எஸ்., தேர்வெழுத அன்றாட நாட்டு நடப்பை நாளிதழ் மூலம் அறிய வேண்டும். ஏற்கனவே வெற்றி பெற்றோரின் வழிகாட்டுதலை பின்பற்றி, குழுக்களாக அமைத்து படிக்கவேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வு மட்டுமின்றி வங்கி, குரூப் 1, 2 தேர்வுக்கு தயார்படுத்தலாம்.

கடின உழைப்பு, உண்மை இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம். மது, சிகரெட் போன்றவற்றிக்கு அடிமையாகாமல் இருந்தாலே நல்வாழ்க்கை அமையும். இதற்கு கல்வி நிலையங்களும் வழிகாட்ட வேண்டும், என்றார். -இவரை பாராட்ட dj.pandian@yahoo.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை