'வருங்கால முதல்வர் தீபாம்மா; கோட்டையை ஆளப்போகும் தீபாம்மா; புரட்சித் தலைவி தீபாம்மா' என, தீபாவை சுற்றி நின்ற கூட்டம், ஜெ., சமாதியில் எழுப்பிய கோஷத்தை கேட்டு, தீபாவே சிரித்த காட்சிகள், வீடியோ பதிவாக வெளியாகி, 'சிடுமூஞ்சி'களையும் அதிரடியாக சிரிக்க வைத்தது. அதற்கும் மேலாக, கொஞ்சம் கூட கூசாமல், 'புரட்சித் தலைவர் மாதவன் வாழ்க' என, கோஷம் போட்ட வீடியோ காட்சி, 'பகீர்' சிரிப்பை கிளப்பியது. அஜித், விஜய் பட, 'டீஸருக்கு' கிடைக்காத, 'லைக்கு'கள் இந்த வீடியோவுக்கு குவிந்தது, தனி சாதனை.
இணையதளத்தில், அரசியல்வாதிகளை கொண்டு, காமெடி வீடியோக்கள் ஏராளமாக வெளியாகி, லைக்குகளை அள்ளுகின்றன; ஆனால், பெண் அரசியல்வாதிகளை கலாய்க்கும் வீடியோக்கள் குறைவு தான். அவ்வப்போது, தமிழிசையையும், சி.ஆர்.சரஸ்வதியையும் வைத்து, அந்த குறையை மறக்க முயற்சித்தனர். இந்த நேரத்தில், இவர்களுக்கு ஆறுதலளிக்க, 'நாந்தான் இருக்கேன்ல' என, கிளம்பியிருக்கிறார் தீபா. 'ஜெயலலிதாவின் அண்ணன் மகள்' என்ற அடையாளத்துடன் களமிறங்கியவருக்கு, சீரியஸ் அரசியல் கைகொடுக்காது போனாலும், 'காமெடி' துாள் பறக்கிறது. காமெடி செய்கிறோம் என்பது தெரியாமல், அதை வெகு, 'சீரியஸாக' செய்வது தான், தீபாவின் காமெடி!
ஜெ., உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்தவராக, திடீரென காட்சியளித்தார். ஜெ.,வை பார்க்க முடியாமல், சோகத்தில் இருந்த கட்சியினருக்கு, அவரின் முகச்சாயல் உள்ள தீபா மீது, திடீர் பாசம் ஏற்பட்டது. ஜெ., ஒதுக்கியதால், போயஸ் தோட்டக் கதவு திறக்காதா என, 20 ஆண்டுக்கு மேலாக காத்திருந்த தீபாவுக்கு, இது, அரசியல் கதவை திறந்து விட்டது.
சினிமாவில், ஏழை கதாநாயகி, 'பட்டத்து ராணி கனவு' காண்பது போல, ஜெ., மறைந்ததும், முதல்வர் கனவில் மிதக்க துவங்கினார்; ஜெ., சொத்துக்கும் சொந்தம் கொண்டாடினார். அதன்பின், கட்சியையும், சொத்துகளையும் அடைய, அவர் நடத்திய முயற்சிகள் எல்லாமே, சிடுமூஞ்சிகளையும் சிரிக்க வைக்கும், காமெடியாக வே அமைந்தன. ஒன்றா, இரண்டா... அவற்றை எடுத்துச் சொல்ல!
ஆரம்பத்தில், அ.தி.மு.க., தொண்டர்கள், அவரை பெரிதாக நம்பினர். வேலையெல்லாம் உதறி, 'பால்கனியில் தோன்றமாட்டாரா...' என, அவரின் வீட்டு வாசலில், பெரும் கூட்டமே தவம் கிடந்தது. உப்பரிகையில் மகாராணி போல், தினசரி ஒரு முறை மட்டும், தரிசனம் தருவார். ஜெ., விட்டு சென்றதால், அரசியலில் அனாதையாகி விட்டதாக கருதிய தொண்டர்கள், தீபாவை பார்ப்பதை, பெரிய ஆறுதலாக எண்ணினர்.
இதைப் பார்த்து, உற்சாகத்தின் உச்சத்துக்கு போன தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற, அமைப்பை துவக்கினார். 'ஜெ., விட்டு சென்ற தமிழகத்தையும், தமிழர்களையும், இனி, நான் தான் காப்பாற்ற போகிறேன்' என்றெல்லாம் வசனம் பேசத் துவங்கி விட்டார். அதற்கு பிறகு, அதிரடி காமெடிகள் அரங்கேறத் துவங்கின. தான் துவக்கியது, கட்சியா, அமைப்பா என்பதை கூட தெளிவு படுத்த முடியாமல் திணறினார், தீபா. அப்படி யே, அது கட்சி என்றாலும், அதற்கு இப்படியா பொருத்தமற்ற பெயரை வைப்பது என, நகைத்தவர்கள் ஏராளம்.
தன் மனைவி பேசுவதையும், அதற்கு சிலர் கைத்தட்டுவதையும் பார்த்து, கணவர் மாதவனுக்கும், அரசியல் ஆசை வெடித்துக் கிளம்பியது. உடனே, தானும் தனி கட்சி துவங்கப் போவதாக, அவரும் கிளம்பி விட்டார்.
'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அ.தி.மு.க.,' என, அதற்கு பெயர் சூட்டி, ஜெ., சமாதிக்கு சென்றார். அங்கு, 'இரட்டை இலையை மீட்போம், நதிகளை இணைப்போம்' என, உறுதிமொழி ஏற்று, காமெடியில் தீபாவை விட, திறமைசாலி என காட்டினார். அப்போது, 'புரட்சித் தலைவர் மாதவன் வாழ்க' என, சிலர் கூச்சலிட்ட போது, கடுப்பான உண்மைத் தொண்டர்கள், அங்கே அவர்களை சூழ்ந்து விட்டனர். அப்புறம் என்ன... மாதவனை, போலீசார், 'பத்திரமாக' அனுப்பி வைத்தனர்.
கவுண்டமணி, கோவை சரளா ஜோடி போல, தீபாவும், மாதவனும், 'காமெடி தர்பார்' அரங்கேற்றி வந்த சூழலில், தம்பி தீபக், சும்மா இருப்பாரா... தானும் சளைத்தவரில்லை என, காட்ட நினைத்தவர், ஒரு நாள், தீபாவை, போயஸ் தோட்டத்திற்கு வரும்படி போனில் அழைத்தார். அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடி வரும் தீபா, ஓடோடி சென் றார். கூடவே, 'டிவி'க்காரர்களையும் கூட்டிச் சென்றார். தீபாவுடன் வந்த கூட்டத்தை கண்டு, மிரண்டு போன தீபக், 'நான் உன்னை வரச் சொல்லலியே...' என, 'பல்டி' அடித்ததும், கடுப்பான தீபா, அவரை, 'நாயே, பேயே' என, அசிங்கமாக திட்டியதை, தமிழகமே நேரலையில் பார்த்து திளைத்தது.
இதற்கிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், படகு சின்னத்தில் போட்டியிட்டார், தீபா. கடும் வெயில் என்பதால், காரை விட்டு
இறங்க மறுத்து, பிரசாரம் செய்தது, அவரின் தனி பாணி. அப்போதும் விடாமல், 'அ.தி.மு.க.,வை மீட்பேன்; கோட்டையை பிடிப்பேன்' என, கிச்சுகிச்சு மூட்டினார். காங்கிரசில் இருந்து, த.மா.கா., பிரிவதும், பின் இரண்டும் இணைவதுமாக இருப்பது போல, இந்த காமெடி ஜோடி, மாதவனும், தீபாவும், சண்டை போட்டு பிரிவதும், பின் சேர்வதுமாக, அவ்வப்போது தனி விளையாட்டு விளையாடினர்.
இதையெல்லாம் பார்த்து வெறுத்து, 'இது, நம்மை காக்க வந்த ஜோடியல்ல; வெறும் காமெடி ஜோடி' என உணர்ந்தவர்கள், வேறு திசை பார்த்து ஓடி விட்டனர். இப்போதெல்லாம், தீபாவின், தி.நகர் வீட்டு முன், கூட்டத்தையும் காண முடிவதில்லை; பால்கனி தரிசனமும் இல்லை. ஆனாலும், அசருவது இல்லை அவர். சமீபத்தில், போயஸ் தோட்டத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது, 'என்னை கேக்காமல், எப்படி உள்ளே போகலாம்; நானும் உள்ளே வருவேன்' என, தீபா அரங்கேற்றிய காமெடியை கேட்டு, டில்லியில் இருந்த அதிகாரிகளும் சிரித்தனராம்.
அதையும் சட்டை செய்யாமல், பழையபடி, ஆர்.கே.நகருக்கு வந்தார்; ஆனால், புது, 'கெட்டப்பில்' தோன்றி, மக்களை, 'மெர்சல்' ஆக்கினார். கணவர் பெயரையே, வேட்புமனுவில் குறிப்பிடாமல், ஓட்டைகள் நிறைந்த, ஒரு மனுவை தாக்கல் செய்து விட்டு, 'அது நிராகரிக்கப்பட்டு விடும்' என, தீர்க்கத்தரிசி போல அருள்வாக்கு கூறி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் கலகலப்பை ஏற்படுத்தினார்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின், தன்னுடைய வேட்புனுவை மறுபரிசீலனை செய்யுமாறு, தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டது, அவரின் காமெடி, 'பஞ்ச்!' கணவனும், மனைவியும், போட்டி போட்டு காட்டி வரும் முழு நகைச்சுவை திறமையையும் பார்த்தோ, என்னவோ தெரியவில்லை... 'ஜெ., மகள் நான்' என, பெங்களூரில் இருந்து புறப்பட்டிருக்கிறார் அம்ருதா. அவர் என்னென்ன காமெடி ஐயிட்டங்களை, கைவசம் வைத்திருக்கிறாரோ... முடியலடா சாமி!
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (28)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply