ஓதுவார்களுக்கு அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் : உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஓதுவார்களுக்கு அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: 'கோயில் ஓதுவார்களின் நலன் கருதி, அவர்களுக்கும் இதர அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் நிர்ணயிப்பது பற்றி தாமதமின்றி பரிசீலிக்க வேண்டியது அரசின் கடமை,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென்காசி இலஞ்சி சிங்காரவேலன் தாக்கல் செய்த மனு:
குற்றாலம் அருகே இலஞ்சி குமராரர் கோயில் உள்ளது. இது அகஸ்தீஸ்வரர், அருணகிரியால் பாடப் பெற்ற திருத்தலம். இக்கோயிலில் ஓதுவாராக 1980 லிருந்து பணிபுரிகிறேன். தேவாரம், திருவாசகம், திருப்புகழை பாடி வருகிறேன்.
சிறப்பு நிலை கோயில்களில் ஓதுவார்களாக பணிபுரிவோருக்கு சம்பளம் நிர்ணயித்து, 2004 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது முன்தேதியிட்டு 1997 முதல் நடைமுறைப்படுத்த அறிவிக்கப்பட்டது. அதன்படி எனக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை.
அரசாணைப்படி எனக்கு சம்பளம் நிர்ணயிக்கக்கோரி, அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். அவர் நிராகரித்தார். அதை ரத்து செய்து, எனக்கு சம்பளம் மறு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு சிங்காரவேலன் மனு செய்திருந்தார்.
நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார்.
அறநிலையத்துறை கமிஷனர் பதில் மனுவில், 'கோயிலின் இதர பணியாளர்கள் போல் ஓதுவார் பணி என்பது முழு நேர பணி அல்ல. கோயிலில் ஆறு கால பூஜைகளில் இரண்டு அல்லது மூன்றுகால பூஜையில் மனுதாரர் தேவாரம், திருமந்திரம், திருவாசகம் பாடுகிறார். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,' என தெரிவித்தார்.
நீதிபதி: ஓதுவார்களின் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்க்க வேண்டியுள்ளது. கி.பி.,892 மற்றும் 992 இடைப்பட்ட காலத்தில் சோழ மன்னர்கள் ஆட்சியில் கோயில்களில் தேவாரம் பாட 'அடிகள்மார்' என்ற பெயரில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ராஜராஜ சோழன் ஆட்சியில் திருப்பதிகத்தை இசையுடன் பாட, 'பிடாரர்கள்' என்ற பெயரில் 50 பேர் நியமிக்கப்பட்டனர். இதற்கு தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன. கி.பி.,1517 ல் கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் திருவண்ணாமலை கோயிலில் தேவாரம் பாட இரண்டு ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர்.
முன்பு ஓதுவார்களை திருப்பதியம் விண்ணப்பம் செய்வார், பதியம் பாடுவார் பிடாரர்கள், அடிகள்மார், ஆண்டார், திருமேனிகள் தபசிகள், திருப்பாட்டோதும் ஓதுவார், ஓதுவாமூர்த்திகள் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் தற்போதைய நிலையை பார்க்கையில் மனதிற்கு வேதனையளிக்கிறது. ஓதுவார்களின்நலனிற்காக, அரசு பல்வேறு அரசாணைகள் பிறப்பித்தாலும், அப்பலன்களை அவர்களால் பெறமுடியவில்லை; அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கோயில்களில் ஓதுவார்கள் சிறிது நேரம் தேவாரம், திருவாசகம், திருமந்திரம் பாடுவதை, மணிக்கணக்கில் பாடவில்லையே என அலட்சியம் செய்யக்கூடாது. அவர்கள் பாடுவதை கேட்கும் பக்தர்கள் கவலை மறக்கின்றனர். அவர்களின் மனதில் புத்துணர்வு ஏற்படுகிறது. ஓதுவார்கள் நிலையை பார்க்கையில் கண்ணீர்வரும் நிலை உள்ளது.
மனுதாரர் மனுவை தகுதி அடிப்படையில், சட்டத்திற்குட்பட்டு ஆறு வாரங்களில் அறநிலையத்துறை கமிஷனர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஓதுவார்களின் நலன் கருதி, அவர்களுக்கும் இதர அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் நிர்ணயிப்பது பற்றி, தாமதமின்றி பரிசீலிக்க வேண்டியது அரசின் கடமை என இந்நீதிமன்றம் கருதுகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X