டான்ஸின் 'டார்கெட்'-'ஹிட்' பாடல் பின்னணி கூறுகிறார் மாஸ்டர் சிவா| Dinamalar

டான்ஸின் 'டார்கெட்'-'ஹிட்' பாடல் பின்னணி கூறுகிறார் மாஸ்டர் சிவா

Added : டிச 10, 2017
Advertisement
டான்ஸின் 'டார்கெட்'-'ஹிட்' பாடல் பின்னணி கூறுகிறார் மாஸ்டர் சிவா

வெற்றி என்பது எப்போதுமே நம் கைக்கு எட்டும் துாரத்தில் தான் இருக்கும். அந்த துாரம் கண்டு தயங்கி, மலைத்து நிற்பவர்களை விட துணிந்து நின்று எட்டிப் பிடிப்பவர்களுக்கே அது சாத்தியமாகிறது; அவர்களால் சாதிக்கவும் முடிகிறது. அந்த வகையில் சினிமா துறையில் எட்டிப் பிடித்து வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ஆர்.பி.சிவா.
சென்னையை சேர்ந்த இவர், இதுவரை தமிழ் தேசம், பிஞ்சு மனசு, பாளையங்கோட்டை, அழகின் பொம்மி உட்பட 38 சினிமாக்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி, முன்னணி ஹீரோக்களுக்கு டான்ஸ் அமைக்கும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அவர், நம்மிடம் மனம் திறந்த தருணம்...

சினிமா துறையில் 20 ஆண்டுகளாக உள்ளேன்.பிரபு தேவா உட்பட பல டான்ஸ் மாஸ்டர்களிடம் பணியாற்றியுள்ளேன். முத்து, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி, காதலன், வி.ஐ.பி., உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட படங்களில் டான்சராக இருந்துள்ளேன். பார்த்திபன் நடித்து தங்கர் பச்சான் இயக்கிய தென்றல், அகத்தியன் இயக்கிய ராமகிருஷ்ணா படங்களில் சிவசங்கர் மாஸ்டரின் கீழ் பணியாற்றியபோது தனியாக டான்ஸ் செய்துள்ளேன். டான்ஸ் மாஸ்டராக கால் பதித்து ஐந்து ஆண்டுகளில் இதுவரை 38 சினிமாக்களுக்கு டான்ஸ் அமைத்துள்ளேன்.தற்போது வெளியாகியுள்ள 'அழகின் பொம்மி' படத்தில் இளையராஜா மகள் பவதாரணி இசை அமைத்து பாடிய 'கொக்கரக்கோ... கொக்கரக்கோ...' பாடல் குட்டீஸ் மற்றும் கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சினிமாவை பொருத்தவரை வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். கிடைத்த வாய்ப்பை யார் சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் எளிதில் வெற்றி பெறுகின்றனர். 'அழகின் பொம்மி'யில் அந்த வாய்ப்பை நான் பயன்படு்த்திக்கொண்டேன் என நம்புகிறேன்.

பிரபு தேவாவின் லாலாக்கு டோல் டப்பிமா... முக்காலா முகாபுலா... வாடி வாடி நாட்டுக் கட்டை, தினேஷ் மாஸ்டரின் ஆத்தி... ஆத்தி என்னாச்சு... போன்ற பாடல் இசை, கதை, கதாபாத்திரம், லொகேஷனுக்கு ஏற்ப அமைந்ததால் 'ஹிட்' ஆகின. ஆயிரம் பாடல்களுக்கு கூட எளிதில் அசைவுகள் அமைத்து விடலாம். ஆனால் கதைக் களத்திற்கு ஏற்ப புதுமையான அசைவுகளை உருவாக்கும் போதுதான் ரசிகர்கள் பாடலை ரசிக்கின்றனர்.

பாடல்களுக்காகவே சில படங்களை பார்க்க ரசிகர்கள் சென்றது உண்டு. சில படங்களில் பாடல் காட்சி வந்தாலே ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியேறி 'ரிலாக்ஸ்' செய்ய கிளம்பி விடுவதும் உண்டு. ரசிகர்களை வெளியேற விடாமல் சீட்களில் உட்கார வைப்பது தான் டான்ஸ் மாஸ்டர்களின் திறமை, என்கிறார் இவர்.இவரை 98404 92914ல் வாழ்த்தலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X