சிறுவர், சிறுமியர் உறங்கப்போவதற்கு முன் மொபைல், வீடியோ கேம், பலகைக் கணினி, தொலைக்காட்சி என, எந்தத் தொலைநுட்பத்தைப் பயன்படுத்தினாலும் அது அவர்களது துாங்கும் அளவையும், துாக்கத்தின் தரத்தையும் பாதிக்கிறது என்கிறது, 'குளோபல் பீடியாட்ரிக் ஹெல்த்' இதழ்.
எட்டு முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகளைக் கொண்ட, 234 பெற்றோர் மத்தியில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மேலும், உடலின் எடையையும் இந்த வழக்கம் பாதிப்பதாக ஆய்வாளர்கள்
கருதுகின்றனர்.
படுக்கப் போகையில் தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்துவது மற்றும் அவற்றை பயன்படுத்தும் நேர அளவை குறைப்பது ஆகியவை இந்த குறைகளை போக்க உதவும் என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித இனம் உடல் ரீதியாக தனது எல்லைகளை எட்டிவிட்டது என்கிறது, 'பிரான்டியர்ஸ் இன் பிசியாலஜி' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு. பல தலைமுறைகளின் உடலியல் புள்ளி விபரங்களை வைத்து செய்யப்பட்ட இந்த ஆய்வின்படி, உயரம், ஆற்றலை வெளிப்படுத்துதல், ஆயுள் போன்ற பல அம்சங்களில், உச்சங்களை மனித குலம் எட்டிவிட்டது.
உதாரணத்திற்கு, உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர, அவர்கள் வாழும் ஆண்டுகளின் எண்ணிக்கை இனி கூடாது.
மருத்துவம், சத்துணவு, உடற்பயிற்சி ஆகிய துறைகளில் நிகழ்ந்த ஆய்வுகளும், அவை பற்றிய விழிப்புணர்வும், பலரது உடல் சார்ந்த சாதனைகளுக்கு, தற்போது காரணமாக இருக்கிறது. ஆனால், இனி அந்த உச்சங்களை மீறி யாரும் சாதனைகள் படைப்பது கடினம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பூகம்பங்கள், எரிமலைகள் என, எவையும் சீற்றம் கொள்ளாமல், அமைதியாக இருக்கும்போதும், பூமி மெல்லிய முணுமுணுக்கும் ஓசையை வெளிப்படுத்துவதாக, 50 ஆண்டுகளாக ஒரு கருத்து உண்டு. இந்த ஓசையை முதல் முதலாக பிரான்சை சேர்ந்த ஒரு ஆய்வாளர் பதிவு செய்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் அடி ஆழத் தரைப் பகுதியில் இந்த மெல்லிய ஓசையை, நில அதிர்வுமானி மூலம் விஞ்ஞானிகள் பதிவு செய்ததாக 'ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்' இதழில் பதிப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. இதற்கு காரணம், இன்னும் விஞ்ஞானிகளுக்கு பிடிபடவில்லை.
பூமி சுற்றும்போது சற்றே தள்ளாட்டத்துடன் சுற்றுவது, பூமியின், 70 சதவீத பகுதியை ஆக்கிரமித்துள்ள கடலின் ஓயாத அலைகள், பூமியைப் போர்த்தியுள்ள வளி மண்டலத்தில் ஏற்படும் தொந்தரவுகள் என, பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.