delhi ush | ராஜ்யசபாவில் அமித் ஷா| Dinamalar

ராஜ்யசபாவில் அமித் ஷா

Updated : டிச 17, 2017 | Added : டிச 16, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
delhi ush, டில்லி உஷ், ராஜ்யசபா, பா.ஜ., அமித்ஷா, மோடி, ஆர்கே நகர், ராஜ்நாத் சிங், பணம், வாக்காளர்கள், பணம், குஜராத்தி, தேர்தல் கமிஷன், விமானம், பிரதமர்

குஜராத்தில் இருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, பார்லி., துவங்கிய முதல் நாள், ராஜ்யசபாவில் வந்து அமர்ந்தார். இவருக்கு முதல் வரிசையில், 'சீட்' கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சீட்டில், முன், வெங்கையா நாயுடு அமர்ந்திருந்தார்; இப்போது அவர், துணை ஜனாதிபதியாகி விட்டதால், அந்த சீட், அமித் ஷாவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
முதல் நாள், சபையில் அமர்ந்திருந்த அமித் ஷா, ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருப்பவர்கள், அப்படி என்ன தான் இவர் எழுதுகிறார் என, பார்த்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அமித் ஷா, பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தார். அவரது அருகே அமர்ந்திருந்த, அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் எட்டிப் பார்த்தார். அமித் ஷா எழுதியிருப்பது எதுவுமே, அவருக்கு புரியவில்லை; அமித் ஷா, குஜராத்தியில் எழுதியது தான் இதற்கு காரணம்.
மோடியும், அமித் ஷாவும், கட்சி முக்கிய விவகாரங்களை போனில் பேசிக் கொள்வதுடன், சில சமயம், இப்படி, 'நோட்' எழுதி அனுப்புவதும் வழக்கம். பிரதமர் மோடிக்கு அளிக்க உள்ள ஏதோ அறிக்கையைத் தான், அமித் ஷா எழுதிக் கொண்டிருந்தாராம். தாய்மொழியான குஜராத்தியில் எழுதினால், மற்றவர்களுக்கு புரியாது என்பதால், இப்படி செய்கிறாராம், ஷா.
பார்லி., சென்ட்ரல் ஹாலுக்கு, அமித் ஷா வந்த போது, அனைத்து, பா.ஜ., - எம்.பி.,க்களும் வரிசையில் நின்று, 'நமஸ்தே' கூறினர். 'மோடிக்கு அடுத்தது இவர் தானே; இவரது ஆசி கிடைக்காவிட்டால், கட்சியில் மேலே போக முடியாது' என்கின்றனர், பா.ஜ.,வினர்.
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமா?

என்ன தான் தேர்தல் கமிஷன், பறக்கும் படைகளை அமைத்தாலும், நம் அரசியல்வாதிகள், அனைவரது கண்ணிலும் மண்ணை துாவி, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி வீசி வருகின்றனர். 'பண வினியோகம் இல்லாமல், தேர்தலை இனி தமிழகத்தில் நடத்தவே முடியாது' என்கிறார், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்.
'ஓட்டுக்கு பணம் என்ற நடைமுறையை, தி.மு.க.,வினர் தான் துவக்கி வைத்தனர். இப்போது, அனைவருமே இதை பின்பற்ற வேண்டியதாயிற்று. எனவே, எதிர்கால தேர்தல்கள் அனைத்திலுமே பணம் தான்' என, வருத்தத்துடன் கூறுகிறார், அந்த, அ.தி.மு.க., தலைவர்.
சமீபத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, ஒரு முக்கிய பிரமுகர், டில்லி வந்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், அவரை அழைத்து பேசினார். 'ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா நடப்பது குறித்து, உளவுத் துறை அறிக்கை அளித்துள்ளது. அதைப் படித்தால், அதிர்ச்சியாக உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது? ஒழுங்காக இருங்கள்; இல்லையென்றால், உங்களுக்குத் தான் பாதிப்பு' என, 'அட்வைஸ்' செய்தாராம், ராஜ்நாத் சிங்.
மற்றொரு பக்கம், தேர்தல் கமிஷன், ஆர்.கே.நகர் விவகாரங்களை மிகவும் கூர்ந்து கவனிக்கிறது. தொகுதியில் நடக்கும் விஷயங்கள் பற்றி, தேர்தல் பார்வையாளர்கள் அளித்துள்ள அறிக்கைகளை, கமிஷன் ஆய்வு செய்கிறது.
'பீஹார், உ.பி., போன்ற மாநிலங்களில், ஒரு காலத்தில் தேர்தல் நடத்துவது, மிகவும் கடினமாக இருந்தது. அங்கு, இப்போது எந்த பிரச்னையும் இல்லை; ஆனால் தமிழகத்தில், ஓர் இடைத்தேர்தல் நடத்துவது மிகவும் கஷ்டம்' என்கின்றனர், தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.
'வாக்காளர்கள், தாங்களாக பணம் வாங்க மாட்டோம் என, திருந்தினால் மட்டுமே, தமிழகத்தில் தேர்தல்கள் ஒழுங்காக நடக்கும்' என்கின்றனர். கடந்த முறை போல, இந்த முறையும் தேர்தல் ரத்தாகுமா எனக் கேட்டால், 'பொறுத்திருங்கள்' என, பதில் வருகிறது.
தடையை மீறிய மோடி

குஜராத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில், மோடியின் பிரசார ஊர்வலத்திற்கு, போலீஸ் அனுமதி தரவில்லை. அசராத மோடி, அதிரடியாக, ஆமதாபாதில் உள்ள, சபர்மதி நதியில், நீரில் இறங்கும் சிறிய விமானம் மூலம் வந்து இறங்கினார். நதியில் அந்த விமானம் படகு போல மிதக்க, அதன் வாசலில் நின்றபடி பிரசாரம் செய்தார். நதியின் கரையில், மக்கள் ஆர்வத்துடன் மோடியை பார்த்து, ஆரவாரம் செய்தனர். இந்த பிரசாரம், 'ஹிட்' ஆகி விட்டது.
இதே சம்பவம், நம்ம ஊரில் நடந்திருந்தால், மக்கள் அதை கிண்டலடித்திருப்பர். ஆனால், குஜராத் மக்கள், இப்படிப்பட்ட விஷயங்களை ஆர்வத்தோடு பார்க்கின்றனர்; அதை புரிந்த மோடி, இந்த அதிரடி பிரசாரத்தை மேற்கொண்டார்.
பிரதமரின் இந்த விமான பயணத்திற்கு, பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்பு வந்தது. 'இந்த விமானத்திற்கு, ஓர் இன்ஜின் மட்டுமே உள்ளது. பிரதமர் பயணம் செய்யும் விமானத்துக்கு, எப்போதுமே இரண்டு இன்ஜின் இருக்க வேண்டும்' என, கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பிரதமர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பயணத்தை மேற்கொண்டார். இந்த விமானம், ஒரு துபாய் நிறுவனத்தைச் சார்ந்தது; இதன் பைலட், அமெரிக்கர்.
இதற்கிடையே, 'பிரதமரின் இந்த பயணத்திற்கான செலவு என்ன; இது, யாருடைய விமானம்?' என, தகவல் பெறும் சட்டம் மூலம், பலர், பிரதமர் அலுவலகத்திற்கு மனு அனுப்பி உள்ளனர்.
'பிரதமர் பயணம் குறித்த தகவல்கள், பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை; எனவே, அதை வெளியிட முடியாது' என, பதில் தர தயாராகி விட்டது, பிரதமர் அலுவலகம். இந்த விமான பயணத்திற்கான செலவு, மூன்று கோடி ரூபாய் என்றும், இந்த செலவை, பா.ஜ., ஏற்றுக் கொண்டதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X