நான்கு டன் காய்கறிகளால் உருவான தேசியக்கொடி
'சென்னையில்
திருவையாறு' காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.உணவு
திருவிழா நடைபெறும் அரங்கத்திற்கு முன்பாக பலரது கவனத்தையும் ஈர்த்தவண்ணம்
பிரம்மாண்டமாக காணப்படுகிறது நமது தேசியக்கொடி.
ஐம்பது அடி அகலம்
இருபத்து நான்கு அடி நீளத்துடன் பிரம்மாண்டமாய் காணப்படும் இந்த
தேசியக்கொடி முழுவதும் நான்கு டன் காய்கறிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது
என்பது இன்னோரு ஆச்சர்யம்.
இந்த காய்கறிக் கொடியினை உருவாக்கியவர்
யார் என்பதை அறியும் ஆர்வம் ஏற்ப்பட்டது.அவர் பெயர் இளஞ்செழியன் தேனியைச்
சேர்ந்தவர் வெஜிடபிள் கார்விங் ஆர்ட் எனப்படும் காய்கறிகளில் பல்வேறு வித
முகங்களை உருவாக்குவதில் நிபுணர்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற
எம்ஜிஆர் நுாற்றாண்டுவிழாவின் போது நுாறு விதமான எம்ஜிஆர் முகங்களை
தர்பூசணியில் செய்து காட்டி முதல்வரிடம் விருது பெற்றவர்.
அப்துல்கலாம் நினைவகத் திறப்பு விழாவின் போது அவரது ஐம்பது முகங்களை செய்துவைத்து பிரதமர் மோடியை ஆச்சர்யப்படவைத்தவர்.
தமிழ கலை கலாச்சார பண்பாட்டு மையத்தின் சார்பில் வளர் இளம் கலைஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.
தைவான்
நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அங்கு காய்கறிகளில்
பல்வேறு முகங்கள் செய்துகாட்டி பரிசையும் பாராட்டையும் அள்ளியவர்.
கிருஷ்ணகிரியில் கின்னஸ் சாதனைக்காக பத்தாயிரம் பழங்களை வைத்து அமைதி சின்னம் உருவாக்கியவர்.
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், தன் நேரம் முழுவதையும் காய்கறிகளில் முகம் செதுக்குவதையே முழுநேர தொழிலாகக் கொண்டவர்.
இவர்தான் இந்த பிரம்மாண்டமான காய்கறியாலான தேசியக்கொடியை உருவாக்கியவர்.
சிவப்பு
வண்ணத்திற்கு ஊட்டி கேரட்டையும்,வெள்ளை வண்ணத்திற்கு முள்ளங்கி பச்சை
வண்ணத்திற்கு வெள்ளரிக்காய் நடுவில் உள்ள அசோக சக்கரத்திற்கு கத்திரிக்காயை
பயன்படுத்தியுள்ளார்.மொத்த காய்கறிகளின் எடை நான்கு டன்னாகும்.
ஒரே
சீராக காய்கறிகளை தயார் செய்து அதை கம்பியில் கோர்த்து கொடி போல தயார்
செய்து காட்சிப்படுத்தியுள்ளார்.பின்னனியில் பொருத்தமான வண்ண துணிகளும்
இரும்பு சாளரங்களும் துணை நிற்கின்றன.56 மணி நேர உழைப்பிற்கு பிறகு
வெற்றிகரமாக கொடி பார்வையாளர்களை ஈர்க்கிறது.
இப்படி ஒரு விஷயத்தை
செய்யலாம் என்று முடிவு செய்து அந்த வாய்ப்பை வழங்கிய ஸ்ருதி லஷ்மன்
குழுவின் ராம்-லஷ்மன் சகோதரர்களுக்குதான் இதன் பெருமை முழுவதும்
போய்ச்சேரவேண்டும் என்கிறார் இளஞ்செழியன்.
இசை விழா நடைபெறும் எட்டு
நாட்களும் காய்கறிகள் வாடிப்போகாமல் இருக்க வாட்டர் ட்ரீட்மெண்ட் உள்ளீட்ட
சில வேலைகள் செய்வதற்காக நானும் என் உதவியாளர்களும் இங்குதான்
முகாமிட்டுள்ளோம்.
இப்படி அரும்பாடுபட்டு உருவாக்கிய காய்கறிகளாலான
தேசிய கொடியின் முன்பாக மக்கள் குடும்பம் குடும்பமாய் புகைப்படம்
எடுத்துக் கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது, பள்ளி குழந்தைகள் எல்லாம்
வந்து பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.
காய்கறி சிற்பி இளஞ்செழியனுடன் பேசுவதற்க்கான எண்:9865242186.
--எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in