'2ஜி' வழக்கில் சொதப்பியது ஏன்?| Dinamalar

'2ஜி' வழக்கில் சொதப்பியது ஏன்?

Updated : டிச 26, 2017 | Added : டிச 23, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 '2ஜி' வழக்கில் சொதப்பியது ஏன்?

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜா, கனிமொழி என, அனைவரையும் விடுதலை செய்து விட்டது, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம். 'ஊழல் நடந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை' என, நீதிபதி, சைனி தீர்ப்பில் தெளிவாக கூறிவிட்டார். 'அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த இந்த வழக்கு, இப்படி சொதப்பியதற்கு யார் காரணம்?' என, டில்லிஅரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில், கேள்வி எழுப்பப்படுகிறது.

சி.பி.ஐ., வழக்கறிஞராக, உதய் லலித் என்ற மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தால், முதலில் நியமிக்கப்பட்டார். இவர், கிரிமினல் வழக்குகளை வாதாடுவதில் சிறந்தவர். இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதும், ஆனந்த் குரோவர் என்பவரை, சி.பி.ஐ., வழக்கறிஞராக நியமிக்கும்படி, அப்போது, சி.பி.ஐ., வழக்கறிஞராக இருந்த, கே.கே.வேணுகோபால் சிபாரிசு செய்தார். அதை, உச்ச நீதிமன்றம் ஏற்று, குரோவரை, சி.பி.ஐ., வழக்கறிஞராக நியமித்தது.

அப்போதே, சட்ட நிபுணர்கள், ஆனந்த் குரோவர் குறித்து, பல சந்தேகங்களை எழுப்பினர். 'ஓரினச் சேர்க்கை மற்றும் பொதுநல வழக்குகளுக்கு ஆதரவாக வாதாடிய குரோவர், ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கு சரிபட்டு வர மாட்டார். இவருக்கு, கிரிமினல் சட்டம் அவ்வளவாக தெரியாது' என, சட்ட நிபுணர்களிடையே முணுமுணுப்பு எழுந்தது. ஆனால், உச்ச நீதிமன்றமே அவரை நியமித்த காரணத்தால், யாரும் இதை வெளிப்படையாக சொல்லவில்லை.

உதய் லலித் வழக்கறிஞராக வாதாடிய போது இருந்த வேகம், அவருக்கு அடுத்து வந்தவருக்கு இல்லை. 'சரியான முறையில், குறுக்கு விசாரணையும் செய்யவில்லை' என, குரோவரை, தன் தீர்ப்பில் சாடினார், நீதிபதி, சைனி.இது குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் கூறுகையில், '-ஆனந்த் குரோவரை, சி.பி.ஐ., வழக்கறிஞராக நியமித்த போதே, இந்த வழக்கு ஊற்றிக் கொள்ளும் என, நினைத்தேன்; அப்படியே நடந்து விட்டது. இந்த நாட்டில் பணம் இருப்பவர்கள் என்றாவது தண்டிக்கப்பட்டு உள்ளனரா?' என்றார்.

''இந்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றம் செல்லவிருக்கிறது, சி.பி.ஐ., உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடிக்க, குறைந்தபட்சம், எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாவது ஆகும். இதன்பின், உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல முடியும். வழக்கு முற்றிலும் முடிவிற்கு வர, 20 ஆண்டுகளாகி விடும்,'' என்கிறார், முன்னாள் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி.


டில்லியை கலக்கிய தி.மு.க.,


'2ஜி' வழக்கு தீர்ப்பு வருவதற்கு, இரு நாட்கள் முன்னதாகவே, ராஜாவின் ஆதரவாளர்கள், டில்லியில் வந்து இறங்கி விட்டனர். ராஜாவின் சொந்த ஊரான, பெரம்பலுாரில் இருந்து, 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள், கடுமையான டில்லி குளிரையும் பொருட்படுத்தாமல், அரைக்கை சட்டையோடு வந்து விட்டனர். டில்லியின், குல்மொஹர் பார்க் பகுதியில் உள்ள, ராஜாவின் வீட்டிற்கு எதிரில், ஒரு பெரிய பூங்கா உள்ளது.

தன் ஆதரவாளர்களுக்கு இங்கே சாப்பாடு போட்டார், ராஜா. தீர்ப்பு வரும் நாளன்று, வீட்டிலிருந்து கிளம்பிய ராஜா, 'தீர்ப்பு, நமக்கு எதிராக வந்து விட்டாலும், இவர்களுக்கு சாப்பாடு கொடுக்க மறந்து விடாதீர்கள்' என, சொல்லிவிட்டுச் சென்றாராம்.விடுதலை என, நீதிபதி அறிவித்ததும், ராஜாவின் மனைவி உணர்ச்சி வசப்பட்டு அழ, அவரது மகளும் கண்ணீர் விட, அனைவரும் ராஜாவை கட்டிப் பிடித்தபடி அழுதனர். 'இந்த வழக்கில் ஒன்றுமே இல்லை. நிச்சயம் அனைவரும் விடுதலையாகி விடுவோம் என்றேன். கனிமொழி அதை நம்பவில்லை; ஆனால், நீதிபதி சைனி, என் வாதத்தை நம்பினார்' என்றாராம், ராஜா.

கோர்ட்டில் இருந்த சுப்பிரமணியன் சாமி, வெறுத்துப் போய் வெளியே சென்று காரில் ஏற, வெளியே நின்றிருந்த, தி.மு.க.,வினர், அவரை வசைபாடினர். அவருக்கு எதிராக கோஷமிட்டனர். கோர்ட் வளாகம் முழுக்க, தி.மு.க., கொடிகளாக காணப்பட்டன.கனிமொழி வீட்டில், அவரது கணவர், தாயார் ராஜாத்தி என, உறவினர்கள், மகளிரணியினர் என, பெரிய பட்டாளமே அவரை வரவேற்றது.


பீதியை கிளப்பும் புத்தகம்


'2ஜி' வழக்கின் தீர்ப்பை அடுத்து, தமிழக அரசியலில், பல மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த வழக்கில், தி.மு.க., மீது மொத்த பழியையும் போட்டு, காங்., தப்பிக்க நினத்தது. 'மன்மோகன் சிங் கூறியதை, ராஜா கேட்கவில்லை. அதனால் தான், இந்த ஊழல் நடந்தது' என, காங்கிரசார் கூறிவந்தனர்.

ஆனால், தற்போது தீர்ப்பு வந்ததும், கனிமொழிக்கு, காங்., தலைவர், ராகுல், போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார். காங்., தலைவர்கள், குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர், கனிமொழி வீட்டிற்கே வந்து வாழ்த்தினர்; ராஜாவை, யாரும் கண்டு கொள்ளவேயில்லை.
'2ஜி விவகாரத்தில் என்ன நடந்தது; தி.மு.க.,வை, காங்., எப்படி மாட்டி விட்டது...' என, பல
அதிரடியான விஷயங்களை புத்தகமாக எழுதியுள்ளார், ராஜா. டில்லி திகார் சிறையில், 15
மாதங்கள் இருந்த போது, இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்.

'தீர்ப்பு வெளியான பின், புத்தகம் வெளி வரும்' என, கூறியிருந்தார், ராஜா. அதன்படி, அடுத்த மாதம் இந்த புத்தகம் வெளியிடப்பட உள்ளது. மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் உள்ளிட்டோர், '2ஜி' விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டனர் என, பல புதிய விபரங்களை எழுதி உள்ளாராம், ராஜா.

'இந்த புத்தகம் வெளியானால், அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்துவதுடன், தி.மு.க., - காங்., உறவும் பாதிக்கப்படும்' என்கின்றனர், விஷயம் அறிந்தவர்கள். தி.மு.க.,வுடன் கைகோர்க்க, பா.ஜ., தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. மோடி- - கருணாநிதி சந்திப்பு, இந்த உறவிற்கான அச்சாரம் என்றும் பேசப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X