மதுரை: மதுரை நகரில் வீணாகும் உணவுகளை சேகரித்து ஆதரவற்றோருக்கு வழங்கி அவர்களின் பசியை தீர்க்கும் பணியை தொடர்ந்து வருகிறது 'மதுரை விருந்து'அமைப்பு.
விழாக்களில் மிஞ்சும் உணவுகளை யாருக்கு எப்படி வழங்குவது என தெரியாமல் குப்பை தொட்டிகளில் கொட்டி, வீணடிக்கும் செயல்கள் பல இடங்களில் நடக்கிறது. பசியால் ஓராயிரம் உயிர்கள் வாடும் நிலையில், இதுபோன்ற நிலை ஏற்படாமல் அதை பயனுள்ள வகையில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு வழங்கும் பணியை இந்த அமைப்பினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.'பசியில்லா தேசம்' என்ற வாசகத்தோடுஇந்த பணிகளை ஒருங்கிணைப்பு செய்து நடத்தி வருபவர்கள் டாக்டர் உமர் மற்றும் அவரது மனைவி காருண்யா. உணவு வழங்கும் பணிகளில் வாடகை வாகனங்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இதற்காக தனி வாகனம் ஏற்படுத்தப்பட்டு, அதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் பங்கேற்றார்.
டாக்டர் உமர் கூறியதாவது: நகரில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் விருந்துடன் நடக்கிறது. எங்களது புள்ளிவிபரபடி ஒவ்வொரு நாளும் 1.5 டன் உணவு வீணாகிறது. வீணாகும் உணவுகள் குறித்த தகவல்களை யாராவது அளித்தால், அதை சேகரித்து பெரியார், மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், வைகை கரையோர பகுதிகளில் உள்ள ஆதரவற்ற மக்கள் மற்றும் சில காப்பகங்களுக்கு வழங்கும் பணிகளை செய்கிறோம். இதற்கும் சில கால வரைமுறை வைத்துள்ளோம். கெட்டுப்போன, கெட்டுப்போகும் நிலையில் உள்ள உணவுகளை வழங்குவதில்லை. வரும் காலங்களில் இந்த நிலையில் உள்ள உணவுகளையும் கால்நடைகளுக்கு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம்.மதுரையில் 10 கி.மீ., சுற்றளவு உள்ள பகுதிகளில் இருந்து வீணாகும் உணவுகளை சேகரித்து வந்தோம். தற்போது இதற்காக தனி வாகனம் உள்ளதால் இன்னும் கூடுதல் பகுதிகளில் இந்த சேவையை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது, என்றார்.
மிஞ்சும் உணவால் மற்றவர்களின் பசியை போக்க 96003 78786ல் அழைக்கலாம்.