delhi ush | மத்திய அரசுக்கு அதிர்ச்சி தந்த தீர்ப்பு| Dinamalar

மத்திய அரசுக்கு அதிர்ச்சி தந்த தீர்ப்பு

Updated : டிச 31, 2017 | Added : டிச 30, 2017
Advertisement
டில்லி உஷ்,2ஜி, அமித்ஷா, அருண் ஜெட்லி, ரவிசங்கர்பிரசாத், திமுக,அழகிரி, ஆர்கே நகர், கர்நாடகா, பா.ஜ.,

நாட்டையே உலுக்கிய, '2ஜி' ஊழல் விவகாரத்தில், சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு, மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டதாக, தகவல்கள் இப்போது கசிந்துள்ளன. இப்படி ஒரு தீர்ப்பு வரும் என, பிரதமர் எதிர்பார்க்கவே இல்லை.

தீர்ப்பு வெளியான அன்று, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர், பார்லிமென்டில் இருந்தனர். விஷயம் தெரிந்ததும், ஜெட்லியை அழைத்த அமித் ஷா, 'முக்கிய தலைவர்களை அழையுங்கள்; அவசரமாக ஒரு மீட்டிங் போட வேண்டும்' என்றார்.
சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர், அமித் ஷாவின் அறைக்குச் சென்றனர். '2ஜி வழக்கில், ராஜா விடுதலையாகிவிட்டார்' என, கூறியதும், ஆச்சரியப்பட்ட சுஷ்மா, 'இது நல்ல விஷயமாச்சே; ராஜா, என் மகன் போல' என, சந்தோஷப்பட, மற்றவர்கள் சுஷ்மாவை முறைக்க, அவர் அமைதியானாராம்.

'தீர்ப்பை படித்துவிட்டு, நாளைக்கு நாம் மீடியாவில் பேசலாம்' என, ரவிசங்கர் பிரசாத் கூறினார். 'கபில் சிபல் மீடியாவில் பேசுகிறார்; நாமும் உடனடியாக பேசினால் தான் நல்லது. இல்லையென்றால், ஒரு தரப்பு செய்தியாகவே போய்விடும்' என்றார், ஜெட்லி. உடனே அமித் ஷா, 'சற்று பொறுங்கள்; இதோ வந்து விடுகிறேன்' என, வெளியே சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் திரும்பிய அமித் ஷா, 'பிரதமரிடம் பேசிவிட்டேன்; மீடியாவிற்கு அருண் ஜெட்லி உடனே பேசட்டும்' என்றார். இதனால், ரவிசங்கர் பிரசாத், 'டல்' ஆனார். இதையடுத்து, 'கடந்த, 2012ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமே, 122 தொலை தொடர்பு லைசென்ஸ்களை ரத்து செய்துள்ளது; அப்படியிருக்க, இந்த தீர்ப்பு ஆச்சர்யமளிக்கிறது' என, அருண் ஜெட்லி பேட்டி அளித்தார். இதன்பின், ஒரு உயர்மட்டக் கூட்டம் நடந்தது. அதில், 2ஜி வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி, 'இந்த விவகாரத்தை அருண்ஜெட்லியே கவனிக்கட்டும்' என, சொல்லிவிட்டாராம்.

தீர்ப்பை முழுவதுமாக படித்த ஜெட்லி, சீனியர் வழக்கறிஞர்கள் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளை அழைத்து, இது குறித்து விவாதித்துள்ளார். பொங்கலுக்கு முன்னதாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாம். மேலும், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு வர வேண்டும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறதாம்.


அழகிரிக்கு தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆதரவு?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி, அ.தி.மு.க.,வை கலங்கடித்தாலும், இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது, தி.மு.க., தான். டிபாசிட் பறிபோனதற்கு பதில் சொல்ல முடியாமல், தி.மு.க., திண்டாடிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், 'ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை, தி.மு.க.,வுக்கு தோல்வி தான். தேர்தல் வேலைக்கு, நம் கட்சியைச் சேர்ந்தவர்களை போடாமல், வேறு கட்சியிலிருந்து வந்தவர்களை போட்டது தப்பு' என, அழகிரி பேட்டி அளித்தது, தி.மு.க.,வுக்குள் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து, தமிழக, எம்.பி.,க்களிடம், வட மாநில, எம்.பி.,க்கள் விசாரித்தனர். சில தி.மு.க., - எம்.பி.,க்கள்,வெறுமனே புன்னகையை பதிலாக தந்துவிட்டு சென்றனர்.
ஆனால், தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர், 'அழகிரி சொன்னது முற்றிலும் உண்மை; அதில் தப்பே கிடையாது. ஆர்.கே.நகர் தேர்தலில் பணியாற்ற, நம் ஆட்களைப் போடாமல், அ.தி.மு.க.,விலிருந்து வந்த செல்வகணபதியை பொறுப்பாளராக நியமித்தார், ஸ்டாலின். வெளியூர்காரரான செல்வகணபதிக்கு, இந்த தொகுதியைப் பற்றி என்ன தெரியும்' என்றனர்.
மேலும், இதே தொகுதியில் பல ஆண்டுகளாக பணியாற்றிய ஒருவரைக் குறிப்பிட்டு, 'அவருக்கு எல்லாம் தெரியும்; அவரை ஏன், நியமிக்கவில்லை' என, கேள்வி கேட்டனர், அந்த, எம்.பி.,க்கள். 'தி.மு.க., தொண்டர்கள் ஏன் கட்சிக்கு ஓட்டளிக்கவில்லை' என்ற கேள்விக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை; இப்படியே போனால் நிலைமை மோசமாகும் என்றும் கவலைப்பட்டனர், அந்த, எம்.பி.,க்கள்.


களம் இறங்கும் அமித் ஷா

ஒரு வழியாக, குஜராத், ஹிமாச்சல பிரதேச தேர்தல்களை வெற்றிகரமாக முடித்துவிட்டார், பா.ஜ., தலைவர் அமித் ஷா. அடுத்த தேர்தல், கர்நாடகாவில் நடக்கவுள்ளது. அடுத்தாண்டு, மார்ச் அல்லது ஏப்ரலில், கர்நாடகாவில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் இங்கு வெற்றி பெற வேண்டும் என தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார், அமித் ஷா.
உ.பி., சட்டசபை தேர்தலின்போது, லக்னோவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கேயே தங்கி, தேர்தல் வேலைகளைக் கவனித்தார் அமித் ஷா. அதேபோல, பெங்களூரிலும் அடுத்த மாதத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க முடிவு செய்துள்ளார்.மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு எங்கு உள்ளது; எங்கு பிரச்னை ஏற்படும் என அனைத்து விபரங்களையும் தயாராக வைத்துள்ளார். இப்போதுள்ள நிலவரப்படி, பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், தனிப் பெரும்பான்மை கிடைக்காது என சொல்லப்படுகிறது.
அப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும்என்பதற்கான திட்டத்தையும், தயார் செய்துள்ளார். முன்னாள்பிரதமர் தேவ கவுடாவின், மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு, 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், தேவ கவுடாவுடன் கூட்டு வைக்க, பா.ஜ., தயாராகி வருகிறது.
சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. 'கர்நாடகாவில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்து உங்களுடன் பேச வேண்டும்' என, அமைச்சர், பியுஷ் கோயலுக்கு தகவல் அனுப்பினார், தேவ கவுடா. இதையடுத்து, கவுடாவின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று விட்டார், கோயல். இரண்டு மணி நேரம் அவருடன் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
'ரயில்வே திட்டங்கள் குறித்து பேசினோம்' என, இருவரும் கூறினாலும், உண்மையில் இவர்கள் பேசியது, பேரம் தான் என கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்துக்கான, பா.ஜ., மேலிட பார்வையாளராக இருப்பவர் கோயல். மேலும், 'சமீப காலமாக பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு அதிக மரியாதை தருகிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, கவுடாவுக்கும், பா.ஜ.,வுக்குமான பேரம் படிந்து விட்டதாகவே தெரிகிறது' என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை