'டெண்டர்' முறைகேடு தடுக்க மின் வாரியம் புதிய முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டெண்டர்' முறைகேடு தடுக்க மின் வாரியம் புதிய முயற்சி

Added : ஜன 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement

மின் உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும், ஒப்பந்த நிறுவனங்கள், 'டெண்டரில்' அதிக விலை வழங்குவதை தடுக்க, மின் வாரியம், புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. மின் வாரியம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம், உபகரணங்கள், நிலக்கரி போன்றவற்றை, 'டெண்டர்' வாயிலாக வாங்குகிறது.
மின் நிலையம், துணைமின் நிலையம் உள்ளிட்ட, கட்டுமான பணிகளும், டெண்டர் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் விலை என, இரு விதமான விலைப்புள்ளிகளை தருகின்றன. தொழில்நுட்ப புள்ளியில், தேர்வான நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் மட்டுமே திறக்கப்படும். அதில், குறைந்த விலை கோரிய நிறுவனம் மற்றும் அந்த விலையை ஏற்க முன் வரும் நிறுவனங்களிடம், விலை குறைப்பு பேச்சு நடத்தி, பணிக்கான ஆணை வழங்கப்படும். பல நிறுவனங்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, சந்தை நிலவரத்தை விட, அதிக விலைப்புள்ளி வழங்குகின்றன. அதே விலைக்கு வாங்கும்படி, அரசியல்வாதிகள் தரப்பிலும் நெருக்கடி தரப்படுவதால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இவற்றை தடுக்க, அதிரடியாக, புதிய முறையை அமல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

புதிய முறை என்ன? : இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பம் முறையில் அளிக்கும் டெண்டரில், அதிக முறைகேடு நடந்ததால், பல நெருக்கடிக்கு இடையிலும், 2016 ஜன., இறுதியில், 'இ - டெண்டர்' எனப்படும், இணையதள டெண்டர் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், ஏற்கனவே வழங்கிய விலையை திருத்துவது, ரகசியம் கசியவிடுதல் போன்ற முறைகேடுகள் தடுக்கப்பட்டாலும், நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து, அதிக விலை வழங்குவதை தடுக்க முடியவில்லை. இந்த முறைகேட்டை தடுக்க, அதிரடி நடவடிக்கையாக, 'இ -- டெண்டர் வித் ரிவர்ஸ் பிட்டிங்' என்ற, புதிய முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, இரு வகையாக உள்ளது. இதன்படி, டெண்டர் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளன்று, இணையதளம் வாயிலாகவே, தொழில்நுட்ப விபரங்கள் ஆய்வு செய்யப்படும்; விலைப்புள்ளி திறக்கப்படாது. நிறுவனங்கள் தெரிவித்துள்ள, பிட்டிங் விலை வெளிப்படையாக தெரிவிக்கப்படும். அதிக விலை குறிப்பிட்ட நிறுவனங்கள், தாங்கள் குறிப்பிட்ட விலையை குறைக்கலாம். ஒரு நிறுவனம் விலையை குறைக்கும் போது, அடுத்த ஐந்து நிமிட இடைவெளியில், மற்றொரு நிறுவனமும் விலையை குறைக்கும். மற்றொரு நிறுவனம் விலை குறைக்கவில்லை என்றால், அந்த விலையோடு பிட்டிங் முடியும்.
பின், விலைப்புள்ளி திறக்கப்படும். இதையடுத்து, பிட்டிங், விலைப்புள்ளி ஆகியவற்றில், எந்த விலை குறைவாக உள்ளதோ, அந்த விலை ஏற்கப்படும் . மற்றொரு முறையில், டெண்டர் கடைசி தேதியின் போது, தொழில்நுட்ப புள்ளியில் தேர்வான பின், நிறுவனங்கள் தெரிவித்துள்ள விலை, வெளிப்படையாக தெரிவித்து, கடைசி தேதிக்கு, ஒரு நாள் கூடுதல் அவகாசம் தரப்படும்.
இடைப்பட்ட காலத்தில், குறைந்த விலை கோரியுள்ள நிறுவனத்திற்கு இணையாக, மற்ற நிறுவனங்களுக்குள் போட்டி ஏற்பட்டு, விலையை குறைத்து தர முன் வரும்.
ஏற்கனவே, குறைந்த விலை கோரிய நிறுவனமும், மேலும் விலையை குறைக்க முன் வரும். இந்த முறையை, மின் உபகரணங்கள் கொள்முதலுக்கு பின்பற்ற வாய்ப்புள்ளது.
இதன் வாயிலாக, அதிக விலைக்கு உபரணங்கள் வாங்குவது தடுக்கப்படும். தமிழக அரசின் அனுமதி கிடைத்ததும், புதிய டெண்டர் முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
03-ஜன-201807:29:49 IST Report Abuse
Loganathan Kuttuva விலை குறைத்து தரத்தை குறைத்துவிடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை