சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

Added : ஜன 03, 2018
Advertisement
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், ஆருத்ரா மகா தரிசன உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில், ஆருத்ரா தரிசன உற்சவம், டிச., 24ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், தேரோட்டம் நடந்தது.
சுவாமி தேரில் இருந்து இறங்கி, ஆனந்த நடனமாடியவாறு, ராஜ சபையான, ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளினார்.
ராஜ சபையில், இரவு, 10:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு, ஏக லட்ச்சார்ச்சனை நடந்தது.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சிறப்பு மகா அபிஷேகம், சொர்ணாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், சுவாமி திருவாபரண அலங்காரத்தில், ஆயிரங்கால் மண்டபத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதியம், 1:45 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி புறப்பாடு நடந்தது. பொது தீட்சிதர்கள், சித்சபையில் ரகசிய பூஜை முடிந்து, பஞ்சமூர்த்திகள் ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளியவுடன், மாலை, 3:20 மணிக்கு, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் புறப்பாடு நடந்தது.
சித்சபை பிரவேசம் செய்வதற்காக, ஆனந்த தாண்டவ நடனமாடியவாறு, பக்தர்களுக்கு, ஆருத்ரா மகா தரிசனம் தந்தார். அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், 'தில்லை அம்பலத்தானே; பொன்னம்பலத்தானே' என, கோஷம் எழுப்பி, நடராஜரை தரிசனம் செய்தனர்.
பேரூர்
கோவை, பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவ விழாவின், 10ம் நாளான நேற்று, ஆருத்ரா தரிசனம் நடந்தது.
முன்னதாக, அதிகாலை, 3:30 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
உற்சவர் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாளுக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து கோ பூஜையும் நடந்தன. அதிகாலை, 4:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு, 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன.
காலை, 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், கோவிலின் உள் வீதிகள் வழியாகவும், ராஜகோபுரம் வழியாகவும், வெளி வீதிகளிலும் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி அம்மன், மங்களநாத சுவாமி கோவிலில் உள்ள, பச்சை மரகத நடராஜரின் திருமேனியில், புதிய சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டது.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு சந்தனம் களையப்பட்டு, அபிஷேகமும், இரவு, 11:00 மணிக்கு மேல், 18 வகையான மகா அபிஷேகமும் நடந்தது.
பின், புதிய சந்தனக்காப்பு சாத்தப்பட்டு, சர்வ மலர் அலங்காரத்தில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை, 10:00 மணிக்கு, கூத்தர் பெருமான் திருவீதியுலாவும், மாலை, 4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. இரவு, 9:30 மணிக்கு, மாணிக்க வாசக சுவாமிகளுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை