வெளுத்து வாங்கும் சுண்ணாம்பு உற்பத்தி!பாரம்பரிய தொழிலுக்கு இல்லை பின்னடைவு| Dinamalar

தமிழ்நாடு

வெளுத்து வாங்கும் சுண்ணாம்பு உற்பத்தி!பாரம்பரிய தொழிலுக்கு இல்லை பின்னடைவு

Added : ஜன 03, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

உடுமலை;பொங்கல் திருநாளையொட்டி உடுமலை சுற்றுவட்டாரத்தில் சுண்ணாம்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. மூலப்பொருட்கள் உயர்வால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலை, ஆலாம்பாளையத்தில் பாரம்பரியமாக சுண்ணாம்பு உற்பத்தி செய்து வருகின்றனர். கடந்த, 15 ஆண்டுகள் முன்பு வரை, 50க்கும் மேற்பட்ட சூளைகள் வைத்து சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நிலையில், நாகரிக வளர்ச்சி, பயன்பாடு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது, சிங குடும்பத்தினர் மட்டுமே உற்பத்தியை மேற்கொண்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக சுண்ணாம்பு உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் சீசன்
ஆண்டு முழுவதும் சுண்ணாம்பு உற்பத்தி செய்து வந்தாலும், தை திருநாளான பொங்கலுக்கு, கிராமங்களில் வீடுகளுக்கு வெள்ளையடிப்பர். இதனால், இச்சமயத்தில் சுண்ணாம்பின் தேவை அதிகரித்து விற்பனையும் சூடுபிடிக்கும். கிராமத்தில் உள்ளவர்கள் மொத்தமாக மாட்டு வண்டிகளில் சுண்ணாம்பு எடுத்து செல்வதும் வழக்கமாக இருந்து வந்தது.இதனால், நவ., மாதம் முதல் சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் சுறுசுறுப்படைந்து, உற்பத்தியை தீவிரப்படுத்தி தினமும் சூளை வைக்கும் நிலை இருந்து வந்தது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், அதனை சார்ந்தவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

சுண்ணாம்பு உற்பத்தி
ஓடைகளில் கிடைக்கும் ஒருவகை கரட்டு பாறைக்கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.பாறை கற்களை சிறு, சிறு கற்களாக உடைத்து, அவற்றை சூளைகளில் வேகவைப்பதன் மூலம் சுண்ணாம்பு கிடைக்கிறது. பாறைக்கற்கள் மட்டுமில்லாமல் அதனுடன் கரிக்கட்டைகள், விறகு மற்றும் தேங்காய் மட்டைகளும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.40 கூடை பாறைக்கற்கள், 10 கிலோ விறகு மற்றும் தென்னை மட்டைகள் சூளைகளில் வைத்து வேகவைக்கப்படுகிறது. காலையில் சூளை வைத்தால் மறுநாள் தான் வெளியில் எடுக்கப்படுகிறது.இவ்வாறு, ஒருமுறை சூளை வைப்பதன் மூலம், 300 முதல், 500 கிலோ வரை சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
கிராமங்களில் வீடுகள், தொட்டி, கிணறு போன்றவற்றுக்கு வெள்ளையடித்தல், கட்டடங்களுக்கு சுருக்கிப்போடுதல், பட்டுப்புழு வளர்ப்பு மனைகள், கோழிப்பண்ணைகள், தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றுக்கு சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது. விதவிதமான வண்ண பெயின்ட் மற்றும் 'டிஸ்டம்பர்' உள்ளிட்டவைகளின் வருகையில், கடந்த சில ஆண்டுகளாக வீடுகளுக்கு வெள்ளையடித்தலுக்கு சுண்ணாம்பு பயன்பாடு தவிர்க்கப்பட்டு வருகிறது.
கிராமங்களில் பயன்பாடு
அதனை தவிர, மற்ற அனைத்து பயன்பாடுகளுக்குக்கும், இன்றளவும் கிராமங்களில் சுண்ணாம்பினை பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகிறது.அதுமட்டுமில்லாமல், ஆண்டுதோறும் குடிநீர் கிணறுகளை சுத்தப்படுத்தி, துார்வாரி சுண்ணாம்பு கொட்டப்பட்டு வருகிறது. இதனால், தண்ணீர் சுத்தமாவதுடன், குடிநீர் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். கால்நடைகளுக்கும் சுண்ணாம்பு நீர் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
விற்பனை
சுண்ணாம்பு கற்களாகவும், பொடித்தும் என இரண்டு விதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுண்ணாம்பு கற்கள் ஒரு வல்லம், 30 ரூபாய்க்கும், பொடிகள் கிலோ, 5 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கோழிப்பண்ணைகள், பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் சார்பில் முன்கூட்டியே தெரிவிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதோடு, ஆடி, பொங்கல் பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில்கொண்டு அதற்கு தகுந்தது போல், சுண்ணாம்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வியாபாரிகள் மட்டுமில்லாமல் தனி நபர்களும் நேரடியாக வீடுகளுக்கே வந்து கொள்முதல் செய்வதால் விற்பனைக்காக உற்பத்தியாளர்கள் அலையவேண்டிய நிலையில்லை, என்று தெரிவிக்கின்றனர்.
சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பட்டியம்மாள் கூறியதாவது:கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரை பரம்பரையாக சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். வீடுகளுக்கு பயன்படுத்துவது குறைந்துவிட்டதால், சூளைகளும் குறைந்து, பல குடும்பங்கள் வேறுவேலைக்கு சென்றுவிட்ட நிலையில் ஒருசிலர் மட்டுமே வேறுவழியில்லாமல் சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம்.கோழிப்பண்ணைகள், பட்டுப்புழு வளர்ப்பவர்கள், சைனிக் பள்ளியில் விளையாட்டு விழா நடத்துவதற்கு, தோப்புகளுக்கு வாங்கி செல்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தது போலில்லாமல், தற்போதும் சீராக சுண்ணாம்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மூலப்பொருட்களின் விலைதான் பலமடங்கு உயர்ந்துள்ளது.ஒருலோடு பாறைக்கற்கள் சீசனுக்கு தகுந்தது போல், 5 ஆயிரம் முதல், 7 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் முன்பெல்லாம் இலவசமாக கிடைத்து வந்த தேங்காய் மட்டைகள் தற்போது இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.விறகு, கரிக்கட்டையும் விலை உயர்ந்ததுடன், கூலியாட்கள் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. சுண்ணாம்பு உற்பத்தி நலிவடைந்ததற்கு இதுவும் ஒருகாரணமாகி வருகிறது. எதிர்காலத்தில் சுண்ணாம்பு உற்பத்தி என்பாது இல்லாத நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. எங்கள் தலைமுறையுடன் இத்தொழில் முடிவடைந்துவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறு, குறு தொழில் நிறுவன சங்கம் சார்பில் சுண்ணாம்பு உற்பத்திக்கு கடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கிடைப்பதில்லை. இதுபோன்ற கடன் வழங்குவதன் மூலம் அவசர காலங்களில் பயன்படுத்திக்கொண்டு, விற்பனை சூடுபிடிக்கும் போது அதிகளவில் உற்பத்தி செய்து கடன் அடைப்பதற்கு வசதியாக இருந்து வந்தது.
அத்துடன், தொழிலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மீண்டும் சுண்ணாம்பு உற்பத்தி, தடுக்குப்பின்னுதல் போன்று குடிசைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறு, குறுதொழில் நிறுவனங்கள் சார்பில் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, பட்டியம்மாள் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை