கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை!| Dinamalar

கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை!

Added : ஜன 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கவிதைகளில் கொட்டிக் கிடக்கிறது தன்னம்பிக்கை!

எ தையும் உடன்பாடாக, நேர்மறையாக காண்பதும் எப்போதும் உயர்வாக எண்ணுவதும் தமிழர்க்கு வாய்த்த இரு தனிப்பெரும் பண்புகள். தொல்காப்பியம் தொடங்கி இன்றைய ஹைக்கூ கவிதை வரையிலான நீண்ட தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் இவ்விரு பண்புகளே கோலோச்சி நிற்கக் காணலாம்.'இன்னாது இம்ம இவ்வுலகம்' எனப் பாடிய சங்கச் சான்றோர்
அத்துடன் நின்று விடாமல் 'இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே' என அறிவுறுத்தி
இருப்பது குறிப்பிடத்தக்கது. 'உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்' என்கிறார் வள்ளுவர். இருபதாம் நுாற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் தலைமகனான பாரதியும் புதிய
ஆத்திசூடியில் 'பெரிதினும் பெரிது கேள்' எனப் பாடி இருப்பார். ஹைக்கூ கவிதைகளும் உடன்பாட்டுச் சிந்தனைகளை, தன்னம்பிக்கை கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கக் காணலாம்.

முதல் ஹைக்கூ : தமிழுக்கு 1984ல் 'புள்ளிப் பூக்கள்' என்னும் முதல் ஹைக்கூ தொகுப்பினைத் தந்தவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி.

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு உரியது. அலகிலா விளையாட்டைப் புரிவது கவிதை' என்பது கவிதை பற்றிய அவரது விளக்கம். அவரது ஹைக்கூ
கவிதைகளில் தன்னம்பிக்கை சிந்தனைகள் ஆங்காங்கே நம்பிக்கைக் கீற்றாய் வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம். சிந்தனைக்கு விருந்தாகும்

உதாரணங்கள் சில:
* 'முதிர்ந்தால் என்ன?
இன்னும் இளமையிருக்கு
கண்களில்!'
* 'முன்னால் நீண்டது முள்;
சோர்வற்ற எனக்காக
பின்னால் முகிழ்த்தது பூ'
* 'குட்டிச் சுவர்தான்
அதன் தலையிலும் ஓர்
அற்புத இளஞ்செடி!'
* 'அடர்ந்த காட்டின் இறுக்கம்
ஒரு குருவியின் வரவால்
கலகலப்புற்றது!'

ஒன்பது முறை எழுந்தவன் : முன்னணிக் கவிஞர்களில் தனியொரு ஹைக்கூ தொகுப்பினை வெளியிட்டிருப்பவர் - ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்காக இடைவிடாமல் குரல் கொடுத்துக்
கொண்டிருப்பவர் - ஈரோடு தமிழன்பன். 'சூரியப் பிறைகள்' என்னும் அவரது கவிதைத் தொகுப்பு 1985ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்றிருக்கும் கவிதை 'பத்தாவது தடவையாக
விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி: 'ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?'
வாழ்க்கையில் அவ்வப்போது விழுவது கூட முக்கியம் இல்லை; விழும் போது எல்லாம் சோர்ந்து விடாமல், முடங்கிப் போகாமல் நம்பிக்கையோடு எழுவதுதான் முக்கியம். பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு பூமி முத்தமிட்டுச் சொன்னது இதுதான்: 'கவலைப்படாதே நம்பிக்கை இழக்காதே!ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ?'

வாழ்க்கை இதுதான்! : இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை; குணமும் குற்றமும் கொண்டவனே மனிதன்; நன்மையும் தீமையும் கலந்ததே உலகம்; பிறப்பும் இறப்பும் நிகழ்வதே வாழ்க்கை. எதையும் இயல்பு எனக் கொண்டால் எதிலும் அளவு எனப் பின்பற்றி நடந்தால்,
வாழ்வில் நம்மைத் துன்பம் அணுகாது. நெருக்கடி நம்மைத் தாக்காது. பிரச்னை நம்மைச் சூழாது.
கவிஞர் அறிவுமதி ஹைக்கூ ஒன்றில் அன்றாட வாழ்க்கைக் காட்சியின் வாயிலாக இவ்வுண்மையினை அழகுற உணர்த்துகின்றார்: 'வாழ்க்கை இதுதான்.செத்துக் கொண்டிருக்கும் தாயருகில்சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை'இதனை இன்னமும் சற்று மாற்றி
'சாகும் தாய் அருகில் சிரிக்கும் குழந்தை' என்னும் ஹைக்கூவாக வடித்துக் காட்டி இருப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

துளிர்க்கும் தளிர்கள்! : 'ஹைக்கூவைச் செய்ய முடியாது. அது எங்காவது தென்படும். அதை அடையாளம் காண ஒரு தனிப்பார்வை வேண்டும். மித்ரா கொடுத்து வைத்தவர். அவருக்கு இந்த ஹைக்கூ பார்வை இயல்பாய் வாய்த்திருக்கிறது' என்பது அப்துல் ரகுமான், கவிஞர் மித்ராவுக்குச் சூட்டியுள்ள புகழாரம். 'என்ன நம்பிக்கை தண்டவாளங்களின் நடுவே தளிர்கள்'
என்னும் மித்ராவின் ஹைக்கூ இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை இழக்காத மரம் : வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழக்கலாம்; ஆனால் ஒரு போதும் நம்பிக்கையை மட்டும் மனிதன் இழந்து விடவே கூடாது.
'வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்' என்னும் அப்பர் வாக்கினைப் பொன்னே போல் போற்றி, இறுதி மூச்சு வரை ஒருவன் தனது கடமையை ஆற்றி வந்தால் போதும் வாழ்வில் சிறப்பு வந்தே தீரும். இதனைத் நயம்பட உணர்த்தும் ஹைக்கூ ஒன்று: 'எல்லாம் இழந்தும்
நம்பிக்கை இழக்காத மரத்தை அலங்கரித்தது வசந்தம்' 'கவிதை கண்ணீரைத் துடைக்கும் கையாக இங்கே மாறுகிறது. தளர்ந்து போகாத தன்னம்பிக்கைக்காக மரத்தின் தலையில் மலர் மகுடம் சூட்டும் வசந்தத்தை வாழ்த்துவதோடு எழுதிய பல்லவனையும் பாராட்டுகிறோம்' என இத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் கவிஞர் மு.மேத்தா குறிப்பிட்டார்.

எத்திசை சென்றாலும் : 'எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!' என்றும் 'பெரிதே உலகம் பேணுநர் பலரே!' என்றும் நம்பிக்கையுடன் முழங்கினர் சங்கச் சான்றோர்கள். அவர்களின் அடிச்சுவட்டில் இன்றைய ஹைக்கூ கவிஞர்களும் பயில்வோர் மனங்களில் நம்பிக்கையை
விதைத்துச் செல்கின்றனர்.உதாரணமாக புதுச்சேரிக் கவிஞர் செந்தமிழனியனின் ஹைக்கூ ஒன்று:'கொட்டிக் கிடக்கிறது நம்பிக்கை தேடலே வாழ்க்கை பரந்த பூமி' இந்த பூமி பரந்து விரிந்தது; இதில் ஒருவர் நம்பிக்கையோடு இமைப் பொழுதும் சோராது தேடலை மேற்கொண்டால், கொட்டிக் கிடக்கிறது வாய்ப்பு! வாய்ப்பு தானாக யாரையும் தேடி வராது; வாய்ப்புக்காக ஏக்கத்தோடு காத்திருப்பதிலும் பயன் இல்லை.

'நம்பிக்கை...
வைக்கோல் போரில்
துளிர்விடும் நாற்று'
என செ.ஆடலரசன்
படைத்திருக்கும் ஹைக்கூ கவிதையும் இங்கே கவனிக்கத்தக்கது. இங்ஙனம் இன்றைய தமிழ் ஹைக்கூ கவிதைகள் பதிவு செய்திருக்கும் நேர்மறை சிந்தனைகள் பொருள்
பொதிந்தவை; நம்பிக்கை தந்து வாழ்வின் மேம்பாட்டுக்கு நலம்
பயப்பவை.

பேராசிரியர் நிர்மலா மோகன்
எழுத்தாளர், மதுரை
94436 75931

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X