பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள், பழநி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில், பெண் உட்பட மூவர் மொட்டையடித்து காணிக்கை செலுத்தினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த, 20 பேர், ஆன்மிக சுற்றுலாவாக, முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள், பஞ்ச பூத லிங்க கோவில்களில், தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் நேற்று, பழநி முருகன் கோவிலுக்கு வந்தனர்.
அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சேலை அணிந்து வந்தனர். உச்சி கால பூஜையில், மூலவர் முருகனை தரிசனம் செய்து, போகர் சன்னதியிலும் வழிபாடு செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த, வழிகாட்டி, ஜெகநாதன்பாபு கூறியதாவது: பக்தி மிகுதியால், அமெரிக்கரான, டாக்ல்ஸ்புருஷ் என்பவர், சுந்தரமூர்த்தி என, பெயர் மாற்றிக் கொண்டார். இக் குழுவினர், 10 ஆண்டுகளாக, தைப்பூச விழா நேரத்தில் பழநிக்கு வருகின்றனர்.
இம்முறை ஆறுபடை வீடுகள், பஞ்ச பூத லிங்க கோவில்களில் தரிசனம் செய்கின்றனர்.நம் கலாசாரம் அவர்களுக்கு பிடித்து விட்டதால், சிலர், தமிழ் கற்று வருகின்றனர். வேட்டி, சேலையை விரும்பி அணிகின்றனர். கேத் என்ற பெண் உட்பட, மூவர் முடி காணிக்கை செலுத்தினர்.இவ்வாறு அவர் கூறினார்.