கோவை: சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சேர்ந்தவர், பாலமுருகன், 25. சாப்ட்வேர்
இன்ஜினியரான இவர், ஜெர்மனியில் பணியாற்றுகிறார்.
பாலமுருகனுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.
இந்நிலையில்,இணையதளம் மூலம், 'மேட்ரிமோனியல்' பகுதியில், மணமகள் தேவை என, பாலமுருகன், அவரது புகைப் படத்துடன், அவரை பற்றிய தகவலை பதிவிட்டார்.
கோவை, அவினாசி ரோடு, நவ இந்தியா, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுருதி, 21, மேட்ரிமோனியல் விளம்பரத்தை பார்த்து, பாலமுருகன் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டுபேசினார்.
பின், 'வாட்ஸ் ஆப்'பில், பாலமுருகனுக்கு, 'மாடலிங்' உடையில் எடுத்த, பல போட்டோக்களை அனுப்பினார். இதை பார்த்த பாலமுருகன், 'உங்களை பிடித்து இருக்கிறது; திருமணம் பற்றி பேசலாம்' என, தெரிவித்து உள்ளார்.
கோவையில் உள்ள, ஓர் ஓட்டலுக்கு, பாலமுருகனை வரவழைத்தார் சுருதி.அப்போது, சுருதியுடன் வந்த சித்ரா, 48, பிரசன்ன வெங்கடேசன், 50, ஆகியோரை பெற்றோர் என்றும், சுபாஷ், 23, என்பவரை சகோதரர் என்றும் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின்,திருமணம் பற்றி பேசினர்.
அப்போது, 'தாய், சித்ராவுக்கு மூளையில் கட்டி இருப்பதால், அறுவை சிகிச்சை செய்வதற்கு, 45 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
'பணம் கொடுத்து உதவி னால், அறுவை சிகிச்சை முடிந்து, திருமணம் வைத்துக் கொள்ளலாம்' என, தெரிவித்தனர். இதை நம்பிய பாலமுருகன், 45 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
அதன்பின், சுருதியின் புகைப்படத்தை, தன் நண்பருக்கு அனுப்பிய பாலமுருகன், இந்த பெண்ணை திருமணம் செய்யப் போவதாக தெரிவித்து உள்ளார்.
இதை பார்த்த நண்பர் அதிர்ச்சி அடைந்தார். 'ஏற்கனவே, பல ஆண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பணத்தை வாங்கி மோசடி செய்தபெண்' என, தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, கோவை சைபர் கிரைம் போலீசில், பாலமுருகன் புகார்அளித்தார்.
சுருதி உட்பட, நான்கு பேரையும் பிடித்து நேற்று விசாரித்த போது, ஏற்கனவே பல ஆண்களிடம், திருமண ஆசை காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியது தெரிய வந்தது. நான்கு பேரையும், போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதுமுக நடிகை: கோவை மற்றும் சென்னையில் திருமண ஆசை காட்டி, இன்ஜினியர்களிடம் பணம் பறித்த சுருதி, சினிமா நடிகை என்பது தெரிந்துள்ளது. ஆடி போனா ஆவணி என்ற படத்தில் அறிமுகம் ஆனார். ஜே.எம்., என்பவர் இயக்கிய இந்தப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
இப்படத்தை, 'ஸபா சினி ஆர்ட்ஸ்' என்றநிறுவனம் தயாரித்துள்ளது. சென்னையில் சினிமாவில் நடித்து கொண்டே, பலரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிந்துள்ளது.
'வாடகை' பெற்றோர் : போலீசார் கூறியதாவது: இணையதளத்தில் பெண் தேடும், வசதி படைத்த இன்ஜினியர்களை குறிவைத்து, சுருதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். கோவையில், அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த இவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, பொய்யான தகவலை அளித்துள்ளனர். சித்ராவும், பிரசன்ன வெங்கடேசனும், சுருதிக்கு உண்மையான பெற்றோர் இல்லை.
பெற்றோராக நடித்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சுபாஷ் என்பவரும் சகோதரர் போல நடித்து, மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். பிரசன்ன வெங்டேசன், துபாயில், பிசினஸ் செய்வதாகவும், விலை உயர்ந்த கார் இருப்பதாகவும், வசதியானவர்கள் போல நாடகமாடி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். மைதிலி உட்பட பல்வேறு பெயர்களில், சுருதி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. பெண் தேடும் ஆண்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் கவர்ச்சியான போட்டோவை அனுப்பி, நேரில் வரவழைத்து உள்ளனர். இது போல, எத்தனை பேரை ஏமாற்றி உள்ளனர் என்பது குறித்து, தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.
இன்ஜினியர்களுக்கு, 'குறி' : நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுாரைச் சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினியர், சந்தோஷ்குமார், 30, என்பவரிடமும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, சுருதி ஏமாற்றி உள்ளார். அவரிடமும், தாய் மூளையில் கட்டி என, பொய் தகவல் கூறி, 43 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, 2016 பிப்., 27ல், சுருதி மீது சந்தோஷ்குமார், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதே போல், ஐதராபாதில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும், சிதம்பரத்தைச் சேர்ந்த, அருள்குமரன் குருராஜாவிடம், 28, திருமண ஆசை காட்டி, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சந்தோஷ்குமார் அளித்த புகாரின்படி, அவர்களை போலீசார் தேடி வந்துள்ளனர். அப்போது, கோர்ட்டில் முன்ஜாமின் பெற்று, தலைமறைவான நான்கு பேரும்,
தற்போது போலீசில் சிக்கி உள்ளனர்.
போலீசாரை மிரட்டியதால் தனி வழக்கு : திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, இன்ஜினியரிடம் மோசடி செய்தது தொடர்பாக, சுருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேசன், சுபாஷ் ஆகியோரை கைது செய்வதற்கு, நேற்று முன்தினம் இரவில், போலீசார், சுருதி வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த, சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, சபரிநாத், 23, என்பவர், இன்ஸ்பெக்டர், கலையரசியை வீட்டுக்குள் விடாமல் தடுத்தார். பாதுகாப்புக்கு வந்த ஆயுதப்படை போலீஸ்காரர், ஷாகுல் என்பவரை தாக்கினர். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசில், இன்ஸ்பெக்டர், கலையரசி புகார் அளித்தார். இது தொடர்பாக, தனி வழக்கு பதிவு செய்த போலீசார், சபரிநாத், சுருதி உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர். சபரிநாத், சென்னையைச் சேர்ந்த, கலால் வரித்துறை அதிகாரி ஒருவரின் மகன்என்றும், சுபாஷின் நண்பர் என்றும் கூறப்படுகிறது.