சென்னை: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை, அரசு நியமித்துள்ள குழு முடிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நர்ஸ்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யவும், ஊதிய உயர்வு அளிக்கவும் கோரி, ௨௦௧௭ நவம்பரில், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கணேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், போராட்டத்துக்கு தடை விதித்தது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நர்ஸ்கள் நல சங்கம் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், ''நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்தும், இன்னும் வரன்முறை செய்யப்படவில்லை.
''மருத்துவப் பணிகளுக்கான இயக்குனரகம், செவிலியர்களுக்கான சம்பளமாக, ௨௨ ஆயிரம் ரூபாய் பரிந்துரைத்துள்ளது,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான, அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், ''செவிலியர்களின் குறைகளை ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழு, செவிலியர்களின் குறைகளை கேட்டு, ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்.
'குறைந்தபட்ச ஊதியம் குறித்தும் முடிவு செய்து, பரிந்துரை அளிக்க வேண்டும்' என, கூறியுள்ளது.