பணி துவங்கும் வரை தொடர் உண்ணாவிரதம் அத்திக்கடவு திட்ட நிர்வாகிகள் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணி துவங்கும் வரை தொடர் உண்ணாவிரதம் அத்திக்கடவு திட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

அன்னுார்:'அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்கான, அடிக்கல் நாட்டி பணியை துவக்கும் வரை, தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, அத்திக்கடவு திட்ட நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை இல்லாமல், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், 'லே அவுட்'களாக மாறி விட்டன.
விவசாய பரப்பும், கால்நடை வளர்ப்பும் குறைந்து விட்டது. விவசாய தொழிலாளர்கள் பலர் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கும், கோவை மில்களுக்கும் வேலைக்கு செல்கின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, பவானி ஆற்றில், வெள்ளக் காலங்களில் உபரியாக சென்று கடலில் கலக்கும் நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 500க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை நிரப்பும், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக, பல்வேறு அமைப்புகள், 40 ஆண்டுகளாக போராடி வருகின்றன.
காலவரையற்ற உண்ணாவிரதம், 1,000 பேர் மொட்டையடித்தல் என, பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதையடுத்து, அத்திக்கடவு திட்ட நிர்வாகிகள் கூட்டம், அன்னுார் ஒருங்கிணைப்பாளர் காளிச்சாமி தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கடந்த முறை, 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஆர்வலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அத்திக்கடவு திட்ட நிர்வாகிகள் கூறியதாவது:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மீண்டும் நிலத்தடி நீர் மட்டம், 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. 250 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, ஆறு மாதங்களுக்கு முன் அறிவித்தனர். அது என்னவானது என தெரிவில்லை. திட்டத்துக்காக முழுநேரமாக மேற்பார்வை பொறியாளர் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்படவில்லை. திட்டத்திற்காக தனி அலுவலகம் ஏற்படுத்தப்படவில்லை.பல்லடத்தில் கடந்த ஜூலையில், நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் பழனிசாமி, 'அவிநாசி - அத்திக்கடவு திட்டம், மத்திய அரசை எதிர்பார்க்காமல், 1,516 கோடி ரூபாயில், மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்.
'காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து இத்திட்டத்துக்கு நீர் எடுக்கப்படும். வரும் டிசம்பருக்குள் பணி துவங்கும்,' என தெரிவித்தார். இன்று வரை, இற்கான அறிகுறி கூட தென்படவில்லை. இரண்டு தலைமுறையாக இத்திட்டத்துக்காக போராடி வருவோருக்கு, அரசின் மெத்தன போக்கு வருத்தம் அளிக்கிறது. எனவே, அன்னுார், ஓதிமலை ரோட்டில் வரும் பிப்., 8ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் துவக்கப்படும்.
இதில், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளிலிருந்து, 50 பேர் பங்கேற்கின்றனர். இந்த முறை அடிக்கல் நாட்டி, திட்ட பணிகள் துவங்கும் வரை, உண்ணாவிரதத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம். காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் குறித்து அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். அனைத்து சேவை அமைப்புகள், விவசாய சங்கங்களிடம் ஆதரவு திரட்டப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை