பெருமாள் கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

பெ.நா.பாளையம்:மார்கழி மாத நிறைவையொட்டி பெருமாள் கோவில்களில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களை, பெருமாள் கோவில்களில் பக்தர்கள் பாடி இறைவனை வணங்கினர். இப்பாசுரங்களில், பெருமாளின் சிறப்புகளை கூறி, அவரை எப்படி வணங்குவது என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, திருப்பாவையின் இரண்டாம் பாடலில் மார்கழி மாத விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என, விளக்கமாக கூறப்பட்டுள்ளது.'வைத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச் செய்யும்,' என, துவங்கும் இப்பாடலில், 'திருமால் கண்ணணாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம் இவ்வுலகில் இருந்து விடுபட்டு அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது. பால் குடிக்கக் கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூட்டக்கூடாது. அதாவது மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்; தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது பாவம் என்பதால் பிறரை பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது.பெருமாள் மீது அளவற்ற அன்பு கொண்ட ஆண்டாள் எப்போதும் பெருமாளை பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறார். 'அவரையே நான் திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறுகிறார். மார்கழி மாதம் 26ம் நாள் ஆண்டாள் கனவில் தோன்றும் பெருமாள், உன் தந்தை பெரியாழ்வாரிடம் சொல்லி, ஸ்ரீரங்கம் வந்து தன்னுடன் சேரும்படி கூறுகிறார். அகம் மகிழ்ந்த ஆண்டாள், தந்தை பெரியாழ்வாருடன் ஸ்ரீவில்லிப்புத்துாரில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் வந்தடைகிறார். அங்கு ஆண்டாள், பெருமாள் காலடியில் விழுந்து இரண்டறக் கலக்கிறார்.திருப்பாவையின் 2வது பாடலில் மார்கழி மாதம் விரதம் குறித்து சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால், 27வது பாடலில் பெருமாள், ஆண்டாளின் கனவில் தோன்றி தன்னை வந்து அடையும்படி சொன்னதால் அனைத்து விரதங்களையும் முடிவுக்கு கொண்டு வருவது போல இப்பாடல் அமைந்துள்ளது.'கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா' என்ற அந்த பாடலில் வரும், கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து, கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. மார்கழி 27ம் நாளன்று பெருமாள் கோவில்களிலும், வைணவர்கள் வீடுகளிலும் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது.அதில், அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தமாக இருக்கும். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றை துறந்த ஆயர்குல பெண்கள் இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். கண்ணா உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள், நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாக கொடு என இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.மார்கழி மாத நிறைவு வழிபாடு குறித்து, பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் அர்ச்சகர் வெங்கட்ட ரமண பட்டர் கூறுகையில், ''மார்கழி மாத நிறைவில் ஆண்டாள், பெருமாள் காலடியில் சேர்ந்தார். இதையடுத்து பெருமாள் - ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இத்திருமண நிகழ்வு மார்கழி, 29ம் நாள் சில கோவில்களிலும், தை மாதம், 1ம் நாள் சில கோவில்களிலும் நடக்கும். பல அரிய கருத்துக்கள் அடங்கிய ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களை படிப்பவர்கள் திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும், செல்வச் செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை