மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மேட்டுப்பாளையம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வக்கீல்கள் சங்கம் சார்பில், நடந்த விழாவுக்கு சப் - கோர்ட் நீதிபதி ராமநாதன் தலைமை வகித்தார். ஜுடிசியல் மாஜிஸ்திரேட் சரவணபாபு முன்னிலை வகித்தார். வக்கீல்கள் சங்கத் தலைவர் வில்சன் வரவேற்றார். கோர்ட் வளாகத்தில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. வக்கீல்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. முன்னாள் தலைவர்கள், மூத்த வக்கீல்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.காரமடை அருகேவுள்ள குமரன் கலை, அறிவியல் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் பொங்கல் வைத்தனர். திருச்சி பாரதி கலைக்குழுவினரின் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.கிராமிய கலை நிகழ்ச்சிகள் குறித்து, கல்லுாரி முதல்வர் சீனிவாசன் கூறுகையில், ''தமிழர் திருநாளில் நமது பாரம்பரிய கிராமிய கலைகளை, இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது,'' என்றார்.கல்லுாரி நிர்வாக அறங்காவலர் அம்மாசியப்பன் தலைமை வகித்தார். அறங்காவலர் மருதமணி, இயக்குனர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர்.