ஐக்கிய நாடுகள்: பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகள் வலிமையான உறுதியுடன் உள்ளதாகவும், தலைமையேற்று நடத்துவதாகவும் ஐக்கிய நாடுகள் பொது செயலர் ஆன்டனியோ குட்ரெஸ் கூறியுள்ளார்.
பாதிப்பு
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பருவநிலை மாற்றம் நம்மை தோற்கடிக்க அனுமதிக்கக்கூடாது. அதேநேரத்தில் இந்த போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக ஆப்ரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வறட்சி உருவாகியுள்ளது. சிறிய தீவுகளில் சூறாவளி மற்றும் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
தலைமை பண்பு
அதேநேரம், இந்த போராட்டத்தில் மற்ற நாடுகள் பங்கேற்பதில் தயக்கம் காட்டி வருகின்றன. ஆனால், உலக பொருளாதாரத்தில், பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வரும் இரண்டுநாடுகள், போராட்டத்தில் முன்னின்று நடத்தி செல்ல உறுதி பூண்டுள்ளன.
அந்த நாடுகள் சீனா மற்றும் இந்தியா. பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களை நாம் சமாளிக்க தவறியதால், அதன் பாதிப்புகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகள், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமையேற்று, அதன் பாதிப்புகளிலிருந்து நம்மை காக்க முயற்சி செய்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.