திக்கெட்டும் அன்பு பொங்கட்டும்! தித்திப்பாய் மகிழ்ச்சி பரவட்டும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திக்கெட்டும் அன்பு பொங்கட்டும்! தித்திப்பாய் மகிழ்ச்சி பரவட்டும்!

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
திக்கெட்டும் அன்பு பொங்கட்டும்! தித்திப்பாய் மகிழ்ச்சி பரவட்டும்!


சூரியனால் தீரும் பிரச்னை


சூரியனை வணங்கினால் ஆரோக்கியம், ஆயுள் பெருகும் என்பது பொது விதி. இது தவிர, வைத்தியத்திற்கு கட்டுப்படாத வியாதி உள்ளவர்கள், பாடுபட்டு சேர்த்த பணம் விரயமாகும் நிலை உள்ளவர்கள், கண்பார்வை இழக்கும் நிலையில் இருப்பவர்கள், குற்றமே செய்யாமல் வழக்குகளில் சிக்கி கொண்டவர்கள், பலனின்றி வெளியூர் பயணம் செய்பவர்கள், கடனால் வீட்டை விற்றுவிட்டு எங்கு செல்வதென தெரியாமல் தவிப்பவர்கள் ஆகியோருக்கெல்லாம் சூரிய வழிபாடு மிகவும் உயர்ந்தது. இதனால் பிரச்னைகள் தீர்ந்து நல்வாழ்வு கிடைக்கும்.பயம் போக்குபவர்பறவை, விலங்கு முதலிய அனைத்து ஜீவ ராசிகளும் இருட்டை கண்டு பயப்படுகின்றன. பொழுது புலர்ந்ததும் மகிழ்ச்சியில் குயில், சேவல் என்று பறவையினங்கள் கீச்சிடுகின்றன. சோம்பல் முறித்து, இரை தேடப் புறப்படுகின்றன. சூரியன் பயம் போக்குபவராகவும், உழைப்பின் சின்னமாகவும், வாழ்வின் ஆதாரமாகவும் திகழ்கிறார். அவர் சங்கு, சக்கரம், கதாயுதம், அபயஹஸ்தம் கொண்டவர். அபயஹஸ்தம் என்பதற்கு 'பயம் போக்குவது' என்று பொருள். உயிர்களின் பயம் போக்கி, மகிழ்ச்சியை வழங்குபவராக இவர் திகழ்கிறார்.
காஞ்சிப்பெரியவர் சொல்றதை கேளுங்க!

பரிவார தெய்வமாக சூரிய பகவானை கருதி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் சொல்வது, சூரிய நமஸ்காரம் செய்வது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், சூரியனே முழுமுதற் கடவுளாக கருதப்பட்ட மதம், சவுரம். ஒடிசாவிலுள்ள 'கோனார்க்' என்னும் இடத்தில் சூரியனுக்கு கோயில் இருக்கிறது. கோண அர்க்கம் என்பதே 'கோனார்க்' எனப்படுகிறது. 'சூரியனின் பகுதி' என்பது இதன் பொருள். வெளிநாட்டவரும் வியக்கும் கலைநயமிக்க கோயில் இது. அர்க்கன் என்பதற்கு 'சூரியன்' என்பது பொருள். எருக்கம்பூவிற்கு வடமொழியில் 'அர்க்க புஷ்பம்' என்று பெயர். அர்க்கஎன்பதே தமிழில் 'எருக்கு' என்றானது. சூரியனார் கோவிலின் தல விருட்சமாக எருக்கு உள்ளது. சூரியனின் அம்சமான எருக்கம்பூவால் விநாயகரை அர்ச்சனை செய்வோருக்கு சூரியனை வழிபட்ட பலன் கிடைக்கும். காஞ்சிப்பெரியவரின் 'தெய்வத்தின் குரல்' புத்தகத்தில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

நாளின் பெயரில் ஊர்

சூரியனுக்கு 'சவுரம்' என்ற தனி மதம் இருந்தது. இதை ஆதிசங்கரர் இந்து மதத்துடன் இணைத்தார். பிற்காலத்தில் சூரிய வழிபாடு நவக்கிரக வழிபாட்டில் இணைந்தது. அந்த நிலையிலும் நவக்கிரகங்களின் தலைவனாக சூரியனே விளங்குகிறார். வாரத்தின் முதல்நாளுக்குரிய இவர், சிவனை வழிபட்ட 'தலை ஞாயிறு' என்னும் ஊர், நாகபட்டினத்தில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் உள்ளது.


மாதம் ஒரு பெயரை மாற்றுபவர்


சூரிய பகவானை வணங்கும் போது, மாதம் ஒரு பெயரைச் சொல்லி வணங்கினால், அவர் பரம திருப்தியடைவார். அந்தப் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சித்திரை - அம்சுமான்
வைகாசி - தாதா
ஆனி - இந்திரன்
ஆடி - ரவி
ஆவணி - கபஸ்தி
புரட்டாசி - தர்மராஜா
ஐப்பசி - சுவர்ண ரேதஸ்
கார்த்திகை - துவஷ்டா
மார்கழி - மித்திரன்
தை - சூரிய நாராயணன்
மாசி - அருணன்
பங்குனி - சூரியன்


சூரியனின் வடதிசை பயணம்

ஒரு ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில் சூரியன் இரு திசைகளில் பயணம் செய்வதாகக் குறிப்பிடுவர். தை முதல் ஆனி வரை வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரை தென்திசையிலும் சூரியன் பயணிக்கிறார். இதை உத்ராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர். பூலோகத்தை போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு. இதில் உத்தராயண காலம் தேவர்களுக்கு பகலாகவும், தட்சிணாயனம் இரவாகவும் இருக்கும். ஆறு மாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளான தை முதல்நாளில் பொங்கல்கொண்டாடுகிறோம். இந்த நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும்.
பொங்கல் நன்னாளில் இதை படித்தால் சூரியனின் அருளால் நல்வாழ்வு உண்டாகும்.


* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்தாய். உலக உயிர்கள் தங்கள் செயல்களை செய்ய பலத்தை கொடுக்கிறாய். உலகிற்கு ஒளிகொடுக்க ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.

* தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ண மயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலை படைக்கிறாய்.

* ஆயிரம் கதிர்கள் கொண்டவனே!'சப்த' என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் கிடைக்கிறது.

* சூரியனே! ஆகாயத்திற்கு நீயே நாதன். ராகு என்னும் இருளை பிளந்து கொண்டு வெளியில் வரும் ஆற்றல் கொண்டிருக்கிறாய். ரிக், யஜூர், சாமம் என்ற வேதங்களின் முடிவாக இருக்கிறாய்.

* கண் கண்ட தெய்வமே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன். தட்சிணாயண காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாக மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.

* வட்ட வடிவம் உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயமாகும் போது மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா பொருட்களையும் தகிக்க செய்பவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! எல்லாப் பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! நட்சத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் அதிபதியே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா. அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற 12 மூர்த்திகளை உள்ளடக்கியவனே! உனக்கு என் நமஸ்காரம். உன்னருளால் பொங்கல் நன்னாளில் எட்டு திக்கும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கி பரவட்டும்.


உலகின் முதல் 'பர்சனல் அசிஸ்டன்ட்'


சூரியலோகத்தில் தண்டி, பிங்கலன் என்னும் இரு துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் தண்டி, சூரியனின் 'பர்சனல் அசிஸ்டன்ட்' போல செயல்படுகிறார். தினமும் நடக்க வேண்டிய பணிகளை வகுத்து கொடுக்கிறார். இவரை உலகின் முதல் 'பர்சனல் அசிஸ்டன்ட்' என்று சொல்லலாம். பிங்கலன் காலையில் ஒளியையும், மாலையில் இருளையும் பிரித்தளிக்கும் செயலைச் செய்கிறார்.
ஐஸ்வர்யம் தரும் ரதசப்தமி


தைமாத வளர்பிறை சப்தமியன்று ரத சப்தமியாக (ஜன.24) கொண்டாடுவர். இந்நாளில் சூரியனின் ரதம் மேற்கு நோக்கி நகர்வதாக ஐதீகம். அன்று காலை சுமங்கலிகள் குளிக்கும் போது, ஏழு எருக்க இலைகளையும், சிறிது அட்சதையையும் வைத்துக் கொண்டுநீராட வேண்டும். ஆண்கள் நீராடும்போது, ஏழு எருக்க இலைகளையும், அரிசியையும் வைத்து நீராட வேண்டும். பூஜையறையில் தேர்க்கோலமிட்டு சர்க்கரை பொங்கல், வடை நைவேத்தியம் செய்து சூரியனை வழிபடவேண்டும். இதனால் ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும் மிக்க வாழ்வு அமையும்.
தமிழ் மாதம் கணக்கிடுவது எப்படி?


ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நாட்கள் ஒரு ராசியில் சஞ்சரிக்கும். குரு ஒரு ராசியில் ஒரு வருடம் சஞ்சரிப்பார். ராகு, கேது ஒன்றரை வருடம் இருப்பர். சனி இரண்டரை வருடம் இருப்பார். ஆனால் சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் மட்டுமே தங்குவார். இவர் மேஷ ராசியில் நுழையும் மாதம் சித்திரை. ரிஷப ராசியில் நுழையும் மாதம் வைகாசி. மிதுன ராசியில் நுழைந்தால் ஆனி, கடகத்தில் ஆடி, சிம்மத்தில் ஆவணி, கன்னியில் புரட்டாசி, துலாமில் ஐப்பசி, விருச்சிகத்தில் கார்த்திகை, தனுசுவில் மார்கழி, மகரத்தில் தை, கும்பத்தில் மாசி, மீனத்தில் நுழையும் போது பங்குனி என தமிழ் மாத பிறப்பு கணக்கிடப்படும். இவற்றில் மேஷத்தில் நுழையும் காலம் சித்திரை விசு, துலாமில் நுழையும் போது ஐப்பசி விசு, மகரத்தில் நுழையும், மகர சங்கராந்தி நாளான தை பொங்கல் ஆகியவை சூரியனுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன.Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை