மும்மூர்த்தி ரூபமான சூரிய பகவான் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மும்மூர்த்தி ரூபமான சூரிய பகவான்

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மும்மூர்த்தி ரூபமான சூரிய பகவான்

ஒவ்வோர் ஆண்டும், மாதந்தோறும் பண்டிகை என்ற பெயரில், நிறைய விசேஷங்கள் வந்தாலும், முதன்மை பெறும் சிறப்புமிக்க மகிழ்ச்சியான பண்டிகை, உழவர் திருநாளான, தைப்பொங்கல் தான். ஏனெனில், மற்ற தினங்களோ, மதம், சமயம், குறிப்பிட்ட தெய்வம், அவரவர் வழிபாட்டு முறைகளைச் சார்ந்து, தனித்தனியாக கொண்டாடப்படும். பொங்கல் தினமோ, எந்த ஒரு தனி தெய்வத்திற்கும், மத சாயலோடு கொண்டாடப்படுவதில்லை. தற்காலத்தில், சித்திரை துவங்கி பங்குனி மாத அடிப்படையில், பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன. தமிழர்களுக்குரிய, 60 ஆண்டு சுற்றுப் பலன்களையும், சித்திரை மாதம் முதல் சரியாகக் கணக்கிட்டு, சாஸ்திர விற்பன்னர்கள் வெளியிட்டு வருகின்றனர்.


நன்றி தெரிவிக்கும் விழா


தை முதல் மார்கழி வரை கணக்கிடுவதே, தமிழர் முறையென பண்டைய இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. தமிழ் ஆண்டின் துவக்கமாக, சித்திரை இருந்தாலும், தை மாதத்தையே முதல் மாதமாக விவசாயிகள், பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். அதிகாலையில் பிரம்மாவாகவும், மதிய வேளையில் சிவனாகவும், மாலையில் விஷ்ணுவாகவும் என, மும்மூர்த்தி ரூபமாக விளங்கும் சூரிய பகவானை, இந்நாளில் பூஜிப்பது சிறப்பு.சூரியனின் நகர்வு, உழவர்களுக்கும், விவசாயத்திற்கும் சாதகமான சூழ்நிலையை தோற்றுவிக்கிறது. சூரிய ஒளி மூலமே, இவ்வுலகம் இயங்கி வருகிறது. சூரியனின் சக்தி கொண்டே, மற்ற கிரகங்கள் யாவும் இயங்குவதை உணர்த்தவே, இந்த சூரிய வணக்கம்.தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் சூரியன் நுழையும், தை முதல் நாளை, தைப் பொங்கலாய் கொண்டாடுகிறோம். நல்ல விளைச்சலை கொடுத்த பூமி, சூரியன், நீர், விவசாயத்திற்கு உதவிய காளை பசுக்கள் போன்ற, இயற்கை சக்திகளுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கமே, பொங்கல் கொண்டாட்டம்.மகரத் திருநாளாக, தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் என, தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மலேசியா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில், பொங்கல் பண்டிகையை, அரசு விடுமுறையாக அங்கீகரித்துள்ளனர்.
மாட்டுப் பொங்கல்


விழாவின் மூன்றாம் நாளாம் இன்று, நமக்கு வாழ்வளித்த, மாடுகளுக்கு நன்றி சொல்லும் தினம். பசுக்களின் மீது எல்லாத் தேவர்களும் இருப்பதாக நம்பிக்கையோடு வணங்கி வழிபடும் நாள். கிராமங்கள் தோறும், மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும்.மாட்டு தொழுவங்கள் சுத்தப்படுத்தப்படும். மாட்டின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூசி, அவற்றை அலங்காரம் செய்து, படையலிட்டு வழிபாடு செய்வர். மாடுகளுக்கு பொங்கல் உணவாய் அளிக்கப்படும். நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினம் இன்று. மாடுகளுக்கு வேலை கொடுக்காமல், சுதந்திரமாக திரிய விடுவர். இன்று தான் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு நடக்கும். ஒருவன் போரிட்டு வெற்றி பெற்றால், அதை போர்க்களத்தில் பிற ஆண்கள் மட்டுமே காண முடியும். பெண்களும் காணும்படி, தன் வீரத்தை பறை சாற்ற, வீர ஆண் மகனுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு, இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு.பெண்களை பார்வையாளர்களாய் அனுமதித்த அந்தக் கால விளையாட்டு இந்த ஜல்லிக்கட்டு மட்டும்தான். மாடு பிடித்தல், ஏறு தழுவல், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, பொல்லெருது பிடித்தல் போன்றே காளையோடு சேர்ந்து விளையாடும் வீர விளையாட்டு எனவும் அழைப்பர்.
இந்திர விழா


பொங்கல் என்றால், பொங்கிப் பெருகி வருவது. 'இந்திர விழா' என்ற பெயரில், நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும், இந்திரனை ஆயர்கள் வழிபட்டனர். ஆனால், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அறிவுரைப்படி, தங்களுக்கும், தம் பசுக்களுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு, ஆயர்கள் மரியாதை செய்தனர். இதனால், கோபமுற்ற இந்திரன், புயலாலும், மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து, இந்திரனிடமிருந்து ஆயர்களையும், அவர் தம் பசுக்களையும், கிருஷ்ணர் காத்தருளினார். அந்த நாளே, சூரிய நாராயண பூஜை செய்யும் நாளாகும்.இந்திரன், தன் தவறை உணர்ந்து, கண்ணனிடம், தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என, வேண்டிய தால், தைப் பொங்கலுக்கு முதல் நாள் போகி எனப்படும், இந்திர வழிபாட்டை ஆயர்கள் கொண்டாடினர்.சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு, 'புதியூடு' என்று பெயர்; ஆண்டின் முதல் அறுவடை என பொருள். உழவர்கள், தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது; இது தான் பின், பொங்கல் என மாறியது. போகி, சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என, அழகான காரணப் பெயர்களோடு, இந்த பண்டிகை சிறப்பு பெறுகிறது.
சூரிய பொங்கல்


பெரும் பொங்கல் என அழைக்கப்படும் இன்றைய நாளுக்கான கொண்டாட்டங்கள், 10 நாட்களுக்கு முன் துவங்கி விடும். வீட்டுக்கு வண்ணம் அடித்து, புத்தம் புது வீடாக மாற்றி, புது உடைகள் தைத்து, குப்பையோ பழையவையோ சேராமல், அனைத்தையும் சுத்தப்படுத்தி, அழகாய், அருமையாய் இந்த தைப் பொங்கலை வரவேற்பர் நம் மக்கள்.தை முதல் நாளில், புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப்பாலில் புது அரிசியிட்டு, வெல்லம் கலந்து பொங்கலிடுவர். வீட்டுக்கு வெளியே, சூரியன் இருக்கும் திசையை நோக்கி, இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.சூரிய ஒளி படும் இடத்தில், சிறு பந்தலிட்டு, தலைவாழை இலை பரப்பி, பொங்கலையும், இதர தானியங்கள், பழ வகைகளையும் பக்தியோடு படைத்து, சூரிய உதயத்தில் தீபம் காட்டி, ஆராதனைகள் செய்து வணங்குவர். பின், 'டிவி' மற்றும் இணையதள உருப்படிகளுக்கு ஓய்வு கொடுத்து, குடும்பத்தினர் அனைவரும் கூடி அமர்ந்து சாப்பிடலாம். அன்று மாலை, கலாசார விளையாட்டுகளை தேர்வு செய்து விளையாடலாம். கவிதை, கதை வாசிப்பவர்களை சொல்ல வைக்கலாம். நடனம் மற்றும் இசையில் தேர்ந்தவர்கள், மற்றவர்களை மகிழ்விக்கலாம். அதற்காக, கீர்த்தனைகள் பாடும் அளவிற்கு இசை ஞானமோ, கூட சேர்ந்து ஆட வைக்க குச்சிப்புடி நடனமோ தெரிந்திருக்க வேண்டும் என்ற நடுவர் கமென்ட் எதுவும் அவசியமில்லை. கொண்டாட்டம் என்ற மனநிலையை ஏற்படுத்தினால் போதும். அந்த சூழ்நிலையை நீங்கள் முன்வந்து உருவாக்குங்கள். நிச்சயம் மற்றவர்கள் பின் தொடர்வர்.
காணும் பொங்கல்


பொங்கல் விழாவில், நான்காவது நாள், காணும் பொங்கல், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. உற்றார், உறவினர் நண்பர்களை கண்டு வாழ்த்துகளையும், இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக, இது உள்ளது.சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுது போக்கும் இடங்களுக்கும் போவது வழக்கம். நண்பர்களை கண்டு, அவர்களுடன் நட்பு பாராட்டி, பார்க், பீச், ஓட்டல், சினிமா என்று சென்று வருவதிலும் ஓர் அர்த்தத்தோடு செய்தால், காணும் பொங்கல் களை கட்டிவிடும்.இன்று முழுவதுமான நம் கொண்டாட்டத்தில், முடிந்த அளவு மரக்கன்றுகளை நடலாம். அருகில் இருப்பவர்களிடம், அதை பராமரிக்கச் சொல்லி, வேண்டுகோள் வைக்கலாம். நண்பர்களுக்குள் மரக்கன்றை பரிசாக வழங்கிக் கொள்ளலாம். இப்போது, நம் காணும் பொங்கல், மனநிறைவோடு மகிழ்ச்சியை கண்ட நாளாய் அமைந்துவிடும். அடுத்த ஆண்டு, அதே மரக்கன்று கொஞ்சம் போல் வளர்ந்திருந்தாலும், நம் சமூகத்திற்கு நம்மால் ஆன கடமையை செய்திருக்கோம் என, காலரை துாக்கி விட்டுக் கொள்ளலாம்.உழவர்கள், தொழிலாளர் கள், வியாபாரிகள் என, அனைவருக்குமே பொங்கல் ஒரு விசேஷ பண்டிகையே. இதுவரை பட்ட துன்பங்கள் மறைந்து, இப்போது பட்டுக் கொண்டிருக்கும் அவதிகள் ஒழிந்து, இந்த ஆண்டில் எல்லா வளமும் பெற்று, அமைதியான சூழலில் வாழ, சூரியனை வணங்குவோம்.- ம.வான்மதி -

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-201811:07:32 IST Report Abuse
muruganthiruvelangudi Very good Dinamalar, remember history and follow next generation, thanks
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-201808:40:58 IST Report Abuse
ushadevan சூரிய பகவானுக்கும் ,உழவர்களுக்கும், நம்மோடு கலந்து இயங்கும் கால்நடைகளுக்கும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர ஒவ்வொரு பண்டிகைக்கும் உரிய தகவல்களை அளிக்கும் தினமலருக்கும் நம் வாசகர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201805:48:25 IST Report Abuse
JShanmugaSundaram சித்திரை 1தான் வருடபிறப்பு தைமாதம் பிறப்பு அருவடைதிருநாள் உத்தராயணபுண்ய காலம்மட்டுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை