நடுக்கடலில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி... சோகம்! ஓ.என்.ஜி.சி., துணை பொதுமேலாளரும் உயிரிழப்பு| Dinamalar

நடுக்கடலில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி... சோகம்! ஓ.என்.ஜி.சி., துணை பொதுமேலாளரும் உயிரிழப்பு

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நடுக்கடலில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி... சோகம்! 	ஓ.என்.ஜி.சி., துணை பொதுமேலாளரும் உயிரிழப்பு

மும்பை:மஹாராஷ்டிர மாநிலம், மும்பை கடல் பகுதியில், ஓ.என்.ஜி.சி., எனப்படும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை விமான நிலையத்திலிருந்து, 175 கி.மீ., தொலைவில், அரசு நிறுவனமான, ஓ.என்.ஜி.சி.,யின், மும்பை ஹைபீல்ட்ஸ் நோக்கி, பவன் ஹான்ஸ் நிறுவனத்தின், 'தி டாபின்' என்ற ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.
ஏழு பேர்
அதில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின், துணை பொது மேலாளர், பங்கஜ் கார்க் உட்பட, ஐந்து உயரதிகாரிகள், இரண்டு விமானிகள் என, ஏழு பேர் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்டு, 15 நிமிடங்களில், திடீரென, மும்பை, விமான கட்டுப்பாட்டு அறை, ஓ.என்.ஜி.சி., ஆகியவற்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அந்த சமயத்தில், மும்பை கடல் பகுதியில், ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்திருக்க வேண்டும் என, நிபுணர்கள் கருதுகின்றனர். தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலும், போர் விமானமும், ஹெலிகாப்டரை தேடும் நடவடிக்கைகளில் இறங்கின.
தேடும் பணி
இதில், ஓ.என்.ஜி.சி., துணை பொது மேலாளர், பங்கஜ் கார்க் உட்பட நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து, பெட்ரோலியத் துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான, தர்மேந்திர பிரதான், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில், கடற்படை, கடலோர காவல் படையைச் சேர்ந்த கப்பல்களும், வீரர்களும், தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிளை மேற்பார்வையிட மும்பை செல்கிறேன்.
விபத்து தொடர்பாக, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமனுடன் பேசவுள்ளேன். அவரும், மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, கடலோர காவல் படைக்கு உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க, மும்பை துறைமுகத்தில் இருந்து மேலும் ஒரு கப்பல் புறப்பட்டு செல்கிறது' என்றார்.
முந்தைய ஹெலிகாப்டர் விபத்துகள்----1997 நவ., 14: அருணாச்சலில் தவாங்கிலிருந்து புறப்பட்ட இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஏன்.-32 விபத்திற்குள்ளானதில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் என்.வி.என்.சோமு உட்பட ஐந்து பேர் பலி.2001 மே: ஹெலிகாப்டர் விபத்தில் அருணாச்சல் கல்வி அமைச்சர் தீராநவுட்டாங் உள்ளிட்ட ஐந்து பேர் பலி.2009 செப்., 2: ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அவர் உட்பட ஐந்து பேர் பலி.2010 ஏப்., : அருணாச்சலில் தவாங் பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 19 வீரர்கள் பலி.2011 ஏப்., 19: அருணாச்சலில் கவுகாத்தி நோக்கி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உள்பட 17 பேர் பலி.2011 ஏப்., 30: அருணாச்சலில் தவாங்கிலிருந்து இடாநகர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மாநில முதல்வர் டோர்ஜி காண்டு பலி.2015 ஆக., 12: அருணாச்சலில் பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி.2017 அக்., 6: அருணாச்சலில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஏழு வீரர்கள் பலி.
கடலில் படகு கவிழ்ந்து 3 மாணவியர் பலி
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து, 100 கி.மீ., தொலைவில், தஹானு பகுதியில், பர்னகா கடற்கரை அருகே, 40 மாணவர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும், விரைந்து வந்த மீட்புப்படையினர், 32 மாணவர்களை மீட்டனர். நீரில் சிக்கி உயிரிழந்த மூன்று மாணவியரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், ஐந்து பேரை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, போலீஸ் கண்காணிப்பாளர், பல்கார், நிருபர்களிடம் கூறியதாவது:பர்னகா கடற்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 32 மாணவர்கள் மீட்கப்பட்டனர்; மூன்று மாணவியர் உயிரிழந்தனர். மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
போலீஸ் அதிகாரிகள், மற்றும் மீட்புப்படை வீரர்கள், சம்பவ இடத்தில் உள்ளனர். பிற துறைகளைச் சேர்ந்த வீரர்களும், மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த, 17 வயதுடைய மாணவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை