திருநெல்வேலி:செங்கோட்டையில் குண்டாற்று பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு, கார் ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில், எட்டு பேர் காயமுற்றனர்.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் பாலயத்தோடு, நேஷனல் நகரை சேர்ந்த, சப்னா குடும்பத்தினர், நெல்லை மாவட்டம் பொட்டல்புதுாரில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்திருந்தனர். பின், கேரளா கிளம்பினர். செங்கோட்டை, குண்டாறு பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மொபட், சைக்கிள் ஓட்டி வந்தோர் மீது மோதியது.அப்போது நிலைதடுமாறி கார் குண்டாறு பாலத்தின் தடுப்புச்சுவரை தாண்டி ஆற்றுக்குள் விழுந்தது. காருக்குள் இருந்த, 9 - 35 வயதுடைய ஐந்து பேரும், சைக்கிளில் சென்ற, 58 வயதுடையவரும், ஸ்கூட்டியில் சென்ற, 56 - 60 வயது தம்பதியும் படுகாயமுற்றனர். சிகிச்சைக்காக தென்காசி மற்றும் செங்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறையில் கன்னடம்கற்கிறார் சசிகலா
பெங்களூரு, ஜன. 14-சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், அவர், தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சிறையிலுள்ள மற்ற மாநில கைதிகளுக்கும், கன்னடம் தெரியாத கைதிகளுக்கும், வயது வந்தோர் எழுத்தறிவு திட்டத்தின் கீழ், கன்னடம் கற்றுத் தரப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ், சசிகலாவும் கன்னடம் கற்று வருகிறார். சிறையில் மவுன விரதத்திலுள்ள சசிகலா, கன்னட வகுப்பில் தவறாமல் பங்கேற்கிறார்; படிக்கவும், எழுதவும் ஓரளவு கற்றுக்கொண்டுள்ளார். சிறையில், ஆண்கள் அடைக்கப்பட்டுள்ள வளாகத்தில் மட்டுமே நுாலகம் உள்ளது. தற்போது சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும் கன்னடம் கற்று வருவதால், பெண்கள் அடைக்கப்பட்டுள்ள வளாகத்திலும், புதிய நுாலகம் திறப்பதற்கு சிறைத்துறை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோசடி நடிகை வலையில் விழுந்த இளைஞர்கள்
வெளிநாட்டில் வசிப்போர் உட்பட 11 பேர் புகார்
கோவை, ஜன. 14-கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் நடிகை சுருதி. இவர் திருமணம் செய்து கொள்வதாக பல பட்டதாரி இளைஞர்களை ஏமாற்றி, கோடிக்கணக்கில் பணம் சுருட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். இவரால் ஏமாற்றப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாலமுருகன், கோவை, 'சைபர் க்ரைம்' போலீசில் புகார் அளித்தார்.புகாரின்படி, சுருதி உட்பட, நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில், வசதி படைத்த பல வாலிபர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது தெரியவந்தது.நடிகையின் வீட்டிலிருந்து தங்க, வைர நகைகள், பணம், சொகுசு கார், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'மேக்-அப்' செட்டுகள், 15 மொபைல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றிய மொபைல் போன்களை ஆய்வு செய்தபோது, நடிகை பல பெயர்களில் வாலிபர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிந்தது.இதற்கிடையே, அமெரிக்காவில் இன்ஜினியராக பணியாற்றும் நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரிடம் சுருதி, மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதேபோல், அமெரிக்காவில் பணியாற்றும் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவரிடம், 15 லட்சம், மற்றொருவரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துஉள்ளார்.இது தொடர்பாக மூன்று பேரின் உறவினர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை, 11 பேர் மோசடி தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.கோவை சைபர் க்ரைம் போலீசார் கூறியதாவது:சுருதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, 15 மொபைல்போன்களை ஆய்வு செய்து, யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 11 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். ஆனால், இவரிடம் பலர் ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.மோசடி தொடர்பாக புகார் அளித்தால், வெளியே தெரிந்தது, வேறு யாரும் பெண் தரமாட்டார்கள் என்ற அச்சத்தில் பலர் புகார் அளிக்க முன்வரவில்லை. தொடர்ந்து, பலரிடம் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
'கஸ்டடி'க்கு திட்டம்மோசடியில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுருதி மீது, கோவை போலீசில் ஏற்கனவே வழக்கு உள்ளது. இதை தவிர்த்து, பெங்களூரூ உள்பட பல்வேறு இடங்களிலும் மோசடி வழக்குகள் உள்ளன. இவருடன் தமிழக திரையுலகை சேர்ந்த சிலரும், சின்னத்திரையில் நடிக்கும் சிலரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இவரை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள போலீசார், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
௧௦ ஆண்டு சிறைவாசம் விடுதலை செய்ய கோரிக்கை
சென்னை, ஜன. ௧௪-வழக்கு நிலுவையில் இருந்தாலும், ௧௦ ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை, விடுதலை செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.மகிழ்ச்சிதமிழக முதல்வருக்கு, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர், மோகனகிருஷ்ணன் அனுப்பிய மனு:சிறையில், ௧௦ ஆண்டுகளுக்கும் மேல் இருந்தவர்களை விடுவிக்க, அரசு உத்தரவிட்டிருப்பதற்கு, நாங்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறோம். அந்த உத்தரவில், கிரிமினல் வழக்கு எதுவும் நிலுவையில் இருந்தால், அவர்களை விடுவிக்க கூடாது என, உள்ளது. இந்த தடையை, நீக்க வேண்டும்.கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு, பல காரணங்கள் உள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது, சாட்சிகள் வராதது உள்ளிட்ட, பல காரணங்கள் உள்ளன. அதற்காக, ௧௦ ஆண்டுகள் சிறையில் கழித்தவர்களை, மேலும் தண்டிக்க கூடாது. தீர்மானம்எனவே, கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இல்லையென்றாலும், ௧௦ ஆண்டுகள் சிறையில் கழித்த அனைவரையும், விடுதலை செய்ய வேண்டும்.இதுகுறித்து, எங்கள் சங்கத்தின் நிர்வாக குழு, ௨௦௧௮ ஜன., ௧௧ல், தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அந்த தீர்மானத்தை பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லுாரிக்கான இணைப்பு ரத்துபல்கலை உத்தரவுக்கு தடை
சென்னை, ஜன. ௧௪-திருப்பூர் மாவட்டத்தில், தனியார் கல்லுாரிக்கான இணைப்பை ரத்து செய்து, பாரதியார் பல்கலை பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், பிஷப் தார்ப் கல்லுாரி உள்ளது. இதன் செயலர், டாக்டர் பால் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு:குறைந்த கட்டணம்எங்கள் கல்லுாரிக்கு, அரசின் நிதி உதவி கிடையாது; சுயநிதி கல்லுாரி. பட்டப் படிப்பு மற்றும் முதுகலை படிப்பில், ௪௬௯ மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ௩௫ ஆசிரியர்களும், ௧௭ அலுவலர்களும் உள்ளனர். இவர்களுக்கான சம்பளத்தை, நிர்வாகம் வழங்குகிறது.கல்லுாரிக்கு, பாரதியார் பல்கலை வழங்கிய இணைப்பு, ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த கல்வியாண்டு முதல், மாணவர்களை சேர்க்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இணைப்பு குறித்து, மூன்று பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. அதன்பின், எங்களுக்கு, 'நோட்டீஸ்' எதுவும் தரப்படவில்லை. விளக்கம் அளிக்க, சந்தர்ப்பமும் தரவில்லை. இணைப்பு ரத்துக்கான காரணமும் கூறப்படவில்லை.எனவே, பாரதியார் பல்கலை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நோட்டீஸ்மனு, நீதிபதி, மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஐசக் மோகன்லால், வழக்கறிஞர், காட்சன் ஆஜராகினர். மனுவை விசாரித்த, நீதிபதி, மகாதேவன், ''எந்த விசாரணையும் இல்லாமல், நேரடியாக இணைப்பை ரத்து செய்யும் விதத்தில், பாரதியார் பல்கலை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு, மூன்று வாரங்களுக்கு, தடை விதிக்கப்படுகிறது,'' என, உத்தரவிட்டுள்ளார்.மனுவுக்குப் பதிலளிக்க, சிறப்பு பிளீடர் முனுசாமிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.
காவல் பதக்கங்கள் போலீசாருக்கு அறிவிப்பு
சென்னை, ஜன. 14-பொங்கல் பண்டிகையை ஒட்டி, காவல் துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை பணியாளர்கள், 1,686 பேருக்கு, 'தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்' அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், காவல், தீயணைப்பு, சிறைத்துறை பணியாளர்கள், தம் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று, முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில், காவலர் மற்றும் தலைமை காவலர் நிலைகளில், 1,500 பேருக்கு பதக்கங்கள் வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.தீயணைப்பு துறையில், முன்னணி தீயணைப்போர், டிரைவர், தீயணைப்போர் நிலைகளில் உள்ள, 120 பேருக்கும்; சிறை துறையில், முதல்நிலை ஆண் வார்டன்கள், 60 பேருக்கும், சிறப்பு பணி பதக்கங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பதக்கங்கள் பெறுவோருக்கு, மாதாந்திர பதக்கப்படி, அவர்களின் நிலைகளுக்கேற்ப, 2018 பிப்., 1 முதல் வழங்கப்படும்.இவர்கள் அனைவருக்கும், போலீஸ் டி.ஜி.பி., தீயணைப்பு துறை இயக்குனர், சிறை துறை தலைவர் ஆகியோரால், மாவட்ட தலைநகரங்களில், பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில், பதக்கங்கள் வழங்கப்படும்.மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், காவல் புகைப்படக் கலைஞர்கள் என, ஒவ்வொரு பிரிவிலும் இருவர் என, ஆறு அதிகாரிகளுக்கு, தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம் வழங்கப்படும்.இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாக, காவலர் மற்றும் தலைமை காவலர் நிலையில், 4,௦௦௦ ரூபாய்; சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில், 6,௦௦௦ ரூபாய்; டி.எஸ்.பி., நிலையில், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.