பொங்கல் பொங்கட்டும்...மக்கள் மகிழட்டும்... மழை பெருகட்டும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பொங்கட்டும்...மக்கள் மகிழட்டும்... மழை பெருகட்டும்!

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பொங்கல் பொருட்கள் வாங்க, திருப்பூர் கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.உயிரினங்கள் வாழ்வாதாரமாகவும், உணவுக்கும், உழவுக்கும் உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாக, பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தைத்திருநாளான இன்று, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில், வாசலில் பொங்கல் வைத்து, படையலிட்டு, வழிபட்டு மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.
நாளை, உழவுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகள், விவசாய பணிகளுக்கு ஆதாரமாக உள்ள பட்டிகளுக்கு பொங்கலிடுவர். மூன்றாம் நாளில், உறவுகளுடன் கூடி, உற்சாகமாக பூ பறித்து, நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தி, காணும் பொங்கலை கொண்டாடுவது வழக்கம். இயற்கைக்கு நன்றி சொல்வதோடு, வரும் காலங்களிலும் உற்ற துணையாக இருக்கவும், செல்வம் பெருகவும், வேளாண் வளம், தொழில் வளம் பெருகவும், "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற நம்பிக்கையோடு, பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.புதிய பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட வேண்டும் என்பதற்காக, பொங்கல் பானைகள், அடுப்பு ஆகியவற்றை வாங்க, திருப்பூர் கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாடை வாங்கவும், பூ, பழம், கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்கவும், புதிய துணிகள் எடுக்கவும், தொழிலாளர்கள், பொதுமக்கள் கூடியதால், கடை வீதிகளில் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.
முன்னதாக, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கேற்ப, தை மகளை வரவேற்கும் வகையில், நேற்று போகி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம் பூ ஆகியவற்றை கொண்டு, காப்பு கட்டியும்; பசுஞ்சாணம் இட்டு, வாசல் தெளித்து, வண்ணங்கோலங்கள் இட்டு, பொங்கல் விழாவை மகிழ்ச்சியோடு துவக்கினர்.கடந்த காலங்களின் கசப்புகள், போகியில் கருகி, புதிய எழுச்சியோடு, புத்துயிர் பெற்று, திருப்பூர் தொழில் துறையினர் வீறு கொண்டு பயணிக்க, தை மகளை வரவேற்று மகிழ்வோம். பருவம் தவறாத மழை பெய்து, வேளாண் வளம் பெருகி, விவசாயிகள் வாழ்வு செழிக்கவும், தை பொங்கல் சிறப்பாக அமையட்டும்.பட்டி பெருக... பால் பனை பொங்க...!பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று, போகி கொண்டாடப்படுகிறது. பழையன கழிதல் புதியன புகுத்தல் என்பதன் அடையளமாக, போகி உள்ளது. பழையதாகிவிட்ட, பயன்பாடில்லாத பொருட்களை இந்நாளில் தீ வைத்து எரித்து விடுவர். பண்டைய காலத்தில், ஆயர்கள், இந்திரவிழாவை முடித்து, பொங்கல் நாளில் தான் சூரியவழிபாட்டை தொடர்ந்தனர்.உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் உயிரினங்களுக்கு நன்றி கூறும் மாட்டு பொங்கல் நாளில், பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு, மதுரை மாவட்டத்தில் உண்டு. "பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல்; பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி, மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X