பூ மூட்டைகளை ஏற்றும் லாரிகளாக மாறிய 1 டூ 1 பஸ்கள்: கூடுதல் கட்டணத்துடன் பயணம் நேரமும் அதிகரிப்பால் அதிர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூ மூட்டைகளை ஏற்றும் லாரிகளாக மாறிய 1 டூ 1 பஸ்கள்: கூடுதல் கட்டணத்துடன் பயணம் நேரமும் அதிகரிப்பால் அதிர்ச்சி

Added : ஜன 14, 2018
Advertisement

சேலம்: சேலத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும், 1 டூ 1 அரசு பஸ்கள், பூ மூட்டைகளை ஏற்றும் லாரிகளாக மாறி உள்ளதால், பயண நேரம் அதிகரித்து இருப்பது, பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில் இருந்து கோவைக்கு, சேலம் கோட்டத்தின் சார்பில், பகல் நேரத்தில் எட்டு பஸ்களும், இரவு நேரத்தில், நான்கு பஸ்களும், 1 டூ 1 சேவையாக இயக்கப்படுகிறது. இதே போல், கோவை கோட்டத்தின் சார்பிலும், இதே அளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாதாரண பஸ்களுக்கு கட்டணம், 97 ரூபாயாக உள்ள நிலையில், நான்கு மணி நேரம் பயண நேரமாக உள்ளது. ஆனால், 1 டூ 1 பஸ்களில், பயண நேரம், 3:10 மணியாகவும், கட்டணம் சாதாரண பஸ்களை விட, எட்டு ரூபாய் அதிகமாக, 105 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் அதிகமாக உள்ள போதும், பயண நேரம் குறைவு என்பதால், பயணிகள், 1 டூ 1 பஸ்களை நாடுகின்றனர். தற்போது, இந்த பஸ்களில், சேலம் புது பஸ் ஸ்டாண்டு, கொண்டலாம்பட்டி பைபாஸ் ஆகிய இடங்களில், நிறுத்தப்பட்டு, 10 முதல், 30 பூ மூட்டைகள் வரை, மேல் பகுதியில் ஏற்றப்படுகிறது. பூ மூட்டைகளை ஏற்றுவதற்காக, இரண்டு இடங்களிலும், தலா, 15 நிமிடம் என மொத்தம், 30 நிமிடம் பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதே போல், கோவை மாநகருக்குள் நுழைந்த உடன் இரண்டு இடங்களில், பூ மூட்டைகளை இறக்குவதற்காக, தலா, 10 நிமிடம் என, 20 நிமிடம் நிறுத்தப்படுவதால், சாதாரண பஸ்களின் இயக்க நேரமான, நான்கு மணி நேரத்தை, 1 டூ 1 பஸ்களும் எடுத்துக் கொள்கின்றன. அது மட்டுமின்றி, பூ மூட்டைகள் காய்ந்து விடாமல், இருக்க அவற்றில், தண்ணீரை குடம் குடமாக ஊற்றுகின்றனர். பஸ்களின் மேல் பகுதியில், மூட்டைகள் ஏற்றப்பட்ட நிலையிலும், தண்ணீர் விடப்படுகிறது. இவ்வாறு விடப்படும் தண்ணீர் வழிந்தோடி, ஜன்னல் வழியாக பயணிகள் மேல் படுவதோடு, மூட்டைகளில் இருந்து வெளியேறும் சாயம் கலந்த தண்ணீர், பயணிகளின் உடைகளில் பட்டு கரையாக படிகிறது.பயண நேரம் குறைவு என்பதற்காக, அதிக கட்டணத்தை செலுத்தி பயணிக்கும் பயணிகள், கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். அதிக அளவில், மூட்டை ஏற்றுவதற்கு, அதிகாரிகளே காரணம் என டிரைவர், கண்டக்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இரவிலும் தொல்லை: பகல் நேரத்தில், சேலம் - கோவை மார்க்கத்தில், மூட்டைகள் ஏற்றப்படும் நிலையில், இரவில், சேலத்தில் இருந்து, தேனி, திருவாரூர், சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் அதிக அளவில் ஏற்றப்படுகிறது. பெங்களூருவில் இருந்து, தென் மாவட்டங்கள், மதுரை, திருச்சிக்கு, 180 விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், ஒசூர், கிருஷ்ணகிரி, சேலத்தில் இருந்து, பூ மூட்டைகள் ஏற்றப்பட்டு, தென் மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால், தென் மாவட்ட பயணிகளும் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை