ஆர்.எஸ்.எஸ்., பட்ஜெட்?| Dinamalar

ஆர்.எஸ்.எஸ்., பட்ஜெட்?

Updated : பிப் 04, 2018 | Added : பிப் 04, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
டில்லி உஷ், பட்ஜெட், ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடி, ஜெட்லி, அரவிந்த்  சுப்ரமணியன், மோகன் பாகவத், எம்.பி.,க்கள், அதிமுக, திமுக, கனிமொழி,

'நடுத்தர வர்க்க மக்களை கவரும் விதமாக, பட்ஜெட் இருக்க வேண்டும்' என, நிதியமைச்சர், அருண் ஜெட்லி ஆசைப்பட்டார். தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்பதும், இவரது விருப்பம். ஆனால், பிரதமரின் நோக்கம் வேறு மாதிரியாக இருக்க, நடுத்தர வர்க்க மக்களுக்கு, பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை.

'நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை; போதுமான வருமானம் இல்லை' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத், விஜயதசமியன்று பேசி இருந்தார். இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள், -அமைச்சர்கள் சந்திப்பு தொடர்ந்து நடந்தது.'பொருளாதார புள்ளி விபரங்கள் பின்னால் போக வேண்டாம். அதெல்லாம் வேலைக்கு ஆகாது. இப்போதைய தேவை, நம் கிராமங்களை கவனிப்பது, விவசாயிகளின் நலன் ஆகியவை தான் முக்கியம். இதை, அரசு கவனிக்க வேண்டும்' என, சொல்லப்பட்டதாம்.மோகன் பாகவத், பிரதமரிடம் இந்த விஷயங்களை நேரிடையாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. 'சிறு தொழில்கள் நலிந்து விட்டன; அவர்களையும் பாதுகாக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் சொல்லப்பட்டதாம்.

நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில், கஷ்டப்பட்டு முட்டி மோதி ஆட்சியைப் பிடித்த, பா.ஜ., நகரங்களில் வெற்றி பெற்றாலும், கிராமப்புறங்களில் தோல்வியை தழுவியது. ஆர்.எஸ்.எஸ்., கோரிக்கை மற்றும் தேர்தல் தோல்வி ஆகிய விஷயங்கள், பிரதமரை யோசிக்க வைத்தன.இதனால், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு நேர பட்ஜெட், விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி முடிவு செய்து, அதன்படியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாம்.


பிரதமரின் மனதை தொட்ட தமிழர்!

மத்திய அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு, சில நாட்களுக்கு முன், நாட்டின் பொருளாதார நிலை குறித்த அறிக்கை, -பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இந்த முறையும், ஜன., 29ல், நிதியமைச்சர், அருண் ஜெட்லி, இந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.வழக்கமாக, சாதாரண வெள்ளைத் தாளில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும் இந்த அறிக்கை, இந்த ஆண்டு, இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது, அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. 'புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும், பிரதமர் மோடியின் ஐடியா போலிருக்கிறது' என, பேசப்பட்டது.ஆனால் நடந்தது என்ன... மத்திய அரசின், தலைமை பொருளாதார ஆலோசகராக இருப்பவர், அரவிந்த் சுப்ரமணியன் என்ற தமிழர். சென்னையில் உள்ள பள்ளியில் படித்தவர். இவரது மகள், பெண்கள் பிரச்னைகள் தொடர்பாக, பல ஆய்வுகள் செய்து வருகிறார்.தன் தந்தையிடம், 'இந்த முறை, பொருளாதார அறிக்கையை, இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியிடுங்கள்; இது, மகளிரின் பிரச்னைகளுக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றைத் தீர்க்க பாடுபடுகிறது என்ற கருத்தை பிரதிபலிக்கும்' என்றார்.

டில்லி மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில்களில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகள், நடைபாதையில் வந்து நிற்கும் இடத்தில், இளஞ்சிவப்பு நிறத்தில் குறியிடப்பட்டிருக்கும்.மகள் சொன்ன விஷயத்தை, பிரதமர் மோடியிடம் கூறினார், அரவிந்த் சுப்ரமணியன். இதை கேட்டு சந்தோஷப்பட்ட மோடி, 'இந்த முறை பொருளாதார அறிக்கை, இளஞ்சிவப்பு நிறத்தில் வரட்டும். உங்கள் மகளின் ஐடியாவிற்கு என் நன்றி' என்றார்.மேலும், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த அரவிந்த், 'அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால், வாக்காளர்களைக் கவரும் பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என, பிரதமருக்கு நெருக்கடி இருந்தது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், சிறந்த பட்ஜெட்டை கொடுத்துள்ளார்' என, பாராட்டி உள்ளார். இது, பிரதமரின் மனதைத் தொட்டு விட்டதாம்.


தமிழக எம்.பி.,க்களுக்கு ஏன் விருதில்லை?

ஒவ்வொரு ஆண்டும், சிறப்பான முறையில் பணியாற்றிய, எம்.பி.,க்கு, 'சிறந்த பார்லிமென்டேரியன்' விருது வழங்கப்படுகிறது. வட மாநில, எம்.பி.,க்களுக்கு தான், இந்த விருது அதிகளவில் கிடைத்துள்ளது. தமிழகத்தில் இருந்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டையும் சேர்த்து, 50 எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால், இவர்களுக்கு இந்த விருது எட்டாக்கனியாகவே இருக்கிறது.அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், ஜெயலலிதா புகழ் பாடுவது, தி.மு.க., - எம்.பி.,க்கள் இதை எதிர்ப்பது என்பது தான், இதுவரை பார்லிமென்டில் நடந்துள்ளது. இல்லையென்றால், தமிழக அரசியல் நிலை குறித்து, இரு கட்சி, எம்.பி.,க்களும், தாக்கி விமர்சித்து கொள்வது வழக்கம். இதையெல்லாம் மீறி, சில சமயம் தமிழக, எம்.பி.,க்கள், தங்கள் தொகுதி பிரச்னைகளை பேசி வருகின்றனர். நாட்டின், முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதங்களில், அதிகளவில் யாரும் பேசுவதில்லை.'அம்மா இருந்தவரை, அவர் என்ன சொல்கிறாரோ, அதைத் தான் நாங்கள் பேச வேண்டும்; மீறி பேசினால், என்னாகும் என்பது அனைவருக்கும் தெரியும்' என்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.

காஷ்மீர் பிரச்னை பற்றி, ராஜ்யசபாவில் விவாதிக்கும் போது, 'காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்...' என, ஓர் எம்.பி., பாட்டுப் பாடி, சீரியசான விவாதத்தை கேலிக் கூத்தாக்கினார். அந்த, எம்.பி.,யை அழைத்து, கடுமையாக திட்டி அனுப்பினாராம், ஜெ.,தி.மு.க.,வை பொறுத்தவரை, அவர்களும், கட்சி மேலிடம் என்ன சொல்லுமோ, அதைத் தான் பேச வேண்டும்; தேவை இல்லாத விவாதங்களில் தலையிடுவதில்லை. தி.மு.க.,வில், மற்றொரு பிரச்னையும் உள்ளது. இவர்களுக்கு லோக்சபாவில், எம்.பி.,க்கள் கிடையாது. ராஜ்யசபாவில் மட்டுமே உள்ளனர்.'கனிமொழி இருக்கும் போது, சபையில் அதிகமாக பேசாமல், அடக்கி வாசிப்பதே நல்லது' என, சில, தி.மு.க., - எம்.பி.,க்கள் கருதுகின்றனர். இதையும் மீறி, சிலர் முக்கிய விவாதங்களில் பங்கேற்கின்றனர்.

இடதுசாரி, எம்.பி.,க்கள், ரங்கராஜன், ராஜா ஆகியோர் தான், பல விஷயங்களை விவாதிக்கின்றனர். 'அவர்களுக்கு மேலிடப் பிரச்னை இல்லை; எங்களுக்கு அப்படியா...' என, நொந்து போய் சொல்கின்றனர், தி.மு.க., - அ.தி.மு.க., உறுப்பினர்கள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X