இறக்குமதி மணல் விவகாரம்: அரசாணையை எதிர்த்து வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இறக்குமதி மணல் விவகாரம்: அரசாணையை எதிர்த்து வழக்கு

Added : பிப் 10, 2018
Advertisement

சென்னை: இறக்குமதி மணலை, பொதுப்பணித்துறை மட்டுமே விற்க வேண்டும் என்ற, அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. விசாரணையை, வரும், 12ம் தேதிக்கு, உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
'தினமலர்' நாளிதழின், கோவை பதிப்பின் வெளியீட்டாளர், எல்.ஆதிமூலம் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், கண்மூடித் தனமாக மணல் குவாரி நடந்ததால், இயற்கை ஆதாரங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, அரசு புறம்போக்கு நிலம், தனியார் பட்டா நிலங்களில், தனியார் மணல் குவாரி நடத்துவதை நிறுத்தி, 2003ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மணல் குவாரியை, அரசே நடத்த துவங்கியது. நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளால், மணல் குவாரி நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. இருந்தும், மணல் தேவைக்கும், 'சப்ளை'க்கும் உள்ள வேறுபாடு அதிகரித்தது. இதனால், கட்டுமான தொழில், வளர்ச்சி திட்டங்கள், பொது முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் ஸ்தம்பித்தன. சாதாரண மக்களின், வீடு கட்டும் கனவும் நிறைவேறாமல் உள்ளது.தேவை குறையும்மணல் சப்ளையில் ஏற்பட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, வெளிநாடுகள், இதர மாநிலங்களில் இருந்து, மணல் இறக்குமதி செய்ய, இறக்குமதியாளர்கள் சிலர் நடவடிக்கை எடுத்தனர். இறக்குமதி செய்வதால், மணல் தேவை குறையும்; வாங்க கூடிய விலையில், பொது மக்களுக்கும் மணல் கிடைக்கும்.மணல் இறக்குமதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மணல் இறக்குமதி செய்யவும், விற்கவும், இறக்குமதியாளர்களுக்கு தடை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருந்து, ஆற்று மணல் இறக்குமதி செய்த, ஒரு இறக்குமதியாளரை, மணலை எடுத்து செல்ல, அரசு அனுமதிக்கவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், விரிவான உத்தரவை பிறப்பித்தது.இறக்குமதி செய்த மணலை கொண்டு செல்லவும், விற்கவும் ஏதுவாக, அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இறக்குமதி மணலை, அரசு மட்டுமே தேக்கி வைத்து விற்கும்படி, நீதிமன்ற உத்தரவில், எந்த குறிப்பும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதற்கு பதில், அதற்கு முரணாக, ௨௦௧௭ டிசம்பரில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அந்த உத்தரவில், 'வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மணலை, தமிழகத்தில், பொதுப்பணித்துறை மட்டுமே விற்க வேண்டும். 'இறக்குமதி செய்யப்பட்ட மணலை, சொந்த உபயோகத்துக்கோ அல்லது விற்பனைக்கோ, தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது' என, கூறப்பட்டுள்ளது.அரசு உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள், வழிமுறைகள், சட்டத்துக்கு முரணாக உள்ளன. இறக்குமதி செய்த மணலை எடுத்து சென்று, தேக்கி வைத்து, விற்பனை செய்யும் இறக்குமதியாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. சொந்த உபயோகத்துக்கும், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிபந்தனைகள், அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானவை. அடிப்படை உரிமைகளில் குறுக்கிடுவது போலாகும்.மாநிலங்களுக்கு இடையே, மணல் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, வர்த்தக சுதந்திரத்தை, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். மத்திய அரசும், மணல் இறக்குமதி கொள்கையை வகுத்துள்ளது. இறக்குமதி மணலை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும், மத்திய அரசு தடை விதிக்கவில்லை. மாநில அரசு கட்டுப்பாடுகள் விதித்து, அரசாணை பிறப்பித்திருப்பது, மத்திய அரசின் சட்ட அதிகாரத்தை பறிப்பதாகும்.மணல் இறக்குமதி செய்து, தேக்கி வைத்து, விற்பனை செய்வதில், சுதந்தரம் இருந்தால் தான், கட்டுமானத் துறை மற்றும் உள்கட்டமைப்பு துறை எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதால், சில சக்திகள் ஆதாயம் பெறவே வழி ஏற்படும். மேலும், மணல் விற்பனையில் ஏகபோகம், பதுக்கல், கள்ளச்சந்தைக்கு தான் வழி வகுக்கும். தேவைப்படுபவர்களுக்கு, எளிதாக கிடைக்காது.ரூ.௭௦ ஆயிரம் கோடி இழப்பு
ஏற்கனவே, அரசு மேற்கொண்டுள்ள வர்த்தகம், தோல்வி அடைந்துள்ளது. ௩௦ ஆண்டுகளில், அரசு போக்குவரத்து கழகங்களில், ௭௦ ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஐந்து தனியார் பஸ் நிறுவனங்கள், நல்ல லாபத்தில் இயங்குகின்றன. ஆட்சி செய்வது தான், அரசின் தலையாய நோக்கமக இருக்க வேண்டுமே தவிர, வர்த்தகம் செய்வதாக இருக்கக் கூடாது.மணல் விற்பனையை, பொதுப்பணித்துறை மேற்கொள்ள அனுமதிப்பது, கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். அதனால், சாதாரண மக்கள் தான், மறைமுகமாக பாதிக்கப்படுவர். எனவே, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். வெளிநாடுகள், இதர மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் மணலை கொண்டு செல்லவும், தேக்கி வைக்கவும், விற்கவும், அனுமதி அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், வழக்கறிஞர், அபிதா பானு ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர், வில்சன் சிறிது நேரம் வாதாடினார். பின், விசாரணையை, வரும், ௧௨ம் தேதிக்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X