சிறுத்தை தாக்கி குழந்தை பலியானதால் ஆவேசம் : வால்பாறையில் கடையடைப்பு; பொதுமக்கள் சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை தாக்கி குழந்தை பலியானதால் ஆவேசம் : வால்பாறையில் கடையடைப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

Added : பிப் 10, 2018
Advertisement

வால்பாறை: வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி, பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துஉள்ளது, நடுமலை எஸ்டேட் வடக்கு டிவிஷன். இந்த எஸ்டேட்டில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, முசரப் அலி - சுபியா தம்பதி, தொழிலாளியாக பணியாற்றுகின்றனர்.வீட்டுக்குள் புகுந்துஇவர்களது குழந்தை சைதுல், 4, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வீட்டின் சமையல் அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை, வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கவ்விச் சென்றது.இரண்டு மணி நேர தேடலுக்கு பிறகு, குழந்தையின் தலை தனியாகவும், உடல் தனியாகவும் தேயிலை காட்டில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.வால்பாறை நகரம் மற்றும் எஸ்டேட் பகுதிகளில், சிறுத்தையிடம் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சிறுத்தை தாக்கி இறந்த குழந்தையின் சடலத்தை எடுக்க விடாமல், எஸ்டேட் தொழிலாளர்கள் நள்ளிரவு, 12:00 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீஸ், வனத்துறையினர் சமரச பேச்சுக்கு பின், நள்ளிரவு, 12:30 மணிக்கு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்நிலையில், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி நடுமலை எஸ்டேட் தொழிலாளர்கள், பொதுமக்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு வால்பாறை - பொள்ளாச்சி சாலையில், தபால் அலுவலகம் முன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, 'புலிகள் காப்பத்தில் இருந்து வால்பாறைக்கு விலக்கு வழங்க வேண்டும். குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள புதர்களை அகற்ற வேண்டும். 'குடியிருப்பு பகுதியில் மின் வேலி அமைக்க வேண்டும். குழந்தையை கொன்ற சிறுத்தையை, வனத்துறையினர் கூண்டு வைத்துபிடிக்க வேண்டும்' எனக் கூறி கோஷமிட்டனர்.மாணவர்கள் ஆதரவுபோராட்டத்துக்கு, கல்லுாரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டனர். அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து, கலந்து கொண்டனர். வால்பாறை நகரில் உள்ள அனைத்துக்கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன.அதிகாரிகள், மக்களிடம் பேச்சு நடத்தினர். மக்களின் கோரிக்கையை மனுவாக பெற்ற வனத்துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்ததால், மதியம், 2:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடந்ததால், வால்பாறையிலிருந்து எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பஸ்களும், பொள்ளாச்சி, பழநி செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை.சிறுத்தை தாக்கி இறந்த குழந்தையின் குடும்பத்துக்கு, வனத்துறை சார்பில், முதல் கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.இதுவரை 9 பேர்! வால்பாறையில், 10 ஆண்டுகளில் எட்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேரை சிறுத்தை கொன்றுள்ளது. வால்பாறை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பகுதியில் ஐந்து குழந்தைகளையும், வில்லோனி எஸ்டேட் பகுதியில் இரண்டு குழந்தைகளையும் சிறுத்தை கொன்றுள்ளது. இது தவிர, சக்தி எஸ்டேட் பகுதியில் ஒரு பெண், சிறுத்தை தாக்கி இறந்துள்ளார்.கூண்டு வைப்புநடுமலை எஸ்டேட் பகுதியில் குழந்தையை கொன்ற சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் நேற்று காலை கூண்டு கொண்டு வந்தனர். மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கூண்டு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. போராட்டம் கைவிடப்பட்ட பின், நடுமலை எஸ்டேட்டில் கூண்டு வைக்கப்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X