பெரியார் பல்கலையிலும்... பத்திக்கிச்சு! லஞ்சத்தில் திளைப்பது அம்பலம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பெரியார் பல்கலையிலும்... பத்திக்கிச்சு! லஞ்சத்தில் திளைப்பது அம்பலம்

கோவை, பாரதியார் பல்கலையை தொடர்ந்து, சேலம், பெரியார் பல்கலையையும், லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்களின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். விரைவில், பலர் மீது நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் மீதும் புகார் எழுந்துள்ளதால், இப்பல்கலையிலும் விசாரணை துவங்கலாம் என, தெரிகிறது.

பெரியார் பல்கலையிலும்... பத்திக்கிச்சு! லஞ்சத்தில் திளைப்பது அம்பலம்


சேலம் பெரியார் பல்கலை, துவங்கப்பட்ட, 2000ல் இருந்தே, சர்ச்சைகளில் சிக்குகிறது. லஞ்ச ஒழிப்பு துறையினரின் வழக்குகள், போலி சான்றிதழ், ஊழல் என, சர்ச்சை பல்கலையாக உருவெடுத்துள்ளது.

இப்பல்கலை மீது நடவடிக்கை எடுக்க, உயர் கல்வித் துறையும், கவர்னர் அலுவலகமும், அனுமதி வழங்குவதில் இழுத்தடித்து வந்ததால், உறுதியான விசாரணை எதுவும் நடக்கவில்லை.தற்போது, கவர்னரின் வெளிப்படையான நடவடிக்கைகளும், முதல்வரின் மாவட்டத்தில் உள்ள பல்கலை என்பதாலும், லஞ்ச ஒழிப்பு போலீசாரை தீவிர நடவடிக்கை எடுக்க துாண்டி உள்ளது. இதையடுத்து, பழைய புகார்கள் முதற்கொண்டு, அனைத்தையும் துாசி தட்டி, விசாரணையை துவக்கி உள்ளனர்.

பெரியார் பல்கலையில், 37 ஆசிரியரல்லாத பணியாளர்கள் முதல், பல ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நியமனம், முறைகேடாக நடந்துள்ளதாக, தணிக்கையில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதில், பலரும் போலி சான்றிதழ்கள் கொடுத்தும், உரிய அடிப்படை கல்வித் தகுதி இல்லாமலும், பணியில் சேர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த பிரச்னையால் தான், இரு மாதங்களுக்கு முன், பல்கலை ஆசிரியர்களுக்கு வழங்க இருந்த பதவி உயர்வை நிறுத்தி வைக்க, உயர் கல்வித் துறை செயலர் உத்தரவிட்டார். இதை அடிப்படையாக வைத்து, போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்தவர்களின் விபரங்களை சேகரிப்பதோடு, அது குறித்த விசாரணையிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் களமிறங்கி உள்ளனர்.

பல்கலையில், பல ஆண்டுகளுக்கு முன் வரை, மரப்பொருட்கள், தமிழக அரசின், 'டான்சி' நிறுவனத்திலும், கணினி உள்ளிட்ட பொருட்கள், 'எல்காட்'டிலும் கொள்முதல் செய்யப்பட்டன.இந்த நடைமுறை கைவிடப்பட்டு, சில ஆண்டுகளாக, அதிக விலை கொடுத்து, குறிப்பிட்ட தனியாரிடம், பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இதனால், பல்கலை நிதி, பல கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டு உள்ளது.


அதேபோல, பெரியார் பல்கலை வளாகத்தில் நடந்த, அனைத்து கட்டுமான பணிகளையும், ஒரு தனியார் கல்லுாரி நிர்வாகமே, அதிக மதிப்பீட்டில் செய்து வந்துள்ளது. இந்த விவகாரமும், தற்போது சூடு பிடித்துள்ளது.
போலி, 'பில்' கொடுத்து, பல லட்சம் ரூபாய் வரை, பல்கலை பணத்தை மோசடி செய்த, இயற்பியல் துறை பேராசிரியர், கிருஷ்ணகுமார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார், பல ஆண்டுகளுக்கு முன், பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
முன்ஜாமின் பெற்றுள்ள இவர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, உயர் கல்வித் துறைக்கு, போலீஸ் சிபாரிசு செய்தது. ஆனால், நடவடிக்கைக்கு பதில், உயரிய பதவியான, 'டீன்' பொறுப்பு, அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய, பெரியார் பல்கலை பேராசிரியர், ஜெயகுமார், பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகுமார் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல்,கரிசனம் காட்டுவது குறித்தும், விசாரணை நடக்கிறது.

விரயம்


பெரியார் பல்கலையில்,ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும், 10 லட்சம் விடைத்தாள் கொத்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மொத்தம், 40 தாள்கள் அடங்கிய ஒரு கொத்து, 10 ரூபாய் விலை பெறாத நிலையில், சில ஆண்டுகளாக, 21க்கு ரூபாய் என, கொள்முதல் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனமே இதைத் தொடர்ந்து, 'சப்ளை' செய்கிறது. பல்கலையில், புத்தகங்கள் அச்சிடுவது; படிப்பு மையங்களுக்கு அனுமதி வழங்கியது; விதிமுறையை மீறி ஏஜன்ஸி வழங்கியது என, தொலைநிலை கல்வி குறித்தும், ஏராளமான புகார்கள் பெறப்பட்டு உள்ளன.இத்தகைய முறைகேடுகளை விசாரிக்க, கவர்னர் மற்றும் முதல்வர் தரப்பில், 'கிரீன் சிக்னல்' தரப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளதால், விதிகளை மீறி செயல்பட்ட பல பேராசிரியர்களும், உயர் பொறுப்பில் இருந்தவரும் கலக்கத்தில் உள்ளனர்.

தஞ்சை பல்கலையில்


பாரதியார், பெரியார் பல்கலைகளை தொடர்ந்து, 'தஞ்சை தமிழ் பல்கலையில், கடைநிலை ஊழியர் முதல், பேராசிரியர் பதவி வரை, துணைவேந்தர், ஐந்து லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய் வரை பெற்று, பணி நியமனம் செய்துள்ளார்' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை, துணைவேந்தர் பாஸ்கரன் மறுத்துள்ளார்.

தஞ்சை தமிழ் பல்கலையில், 2015 முதல், துணைவேந்தராக பணியாற்றி வருபவர் பாஸ்கரன்; இதற்கு முன், இதே பல்கலையில் பேராசிரியராகவும், பதிவாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெரும் தொகை செலவழித்து, முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலம், துணைவேந்தர் பதவியை பிடித்ததாக, அப்போதே புகார்கள் எழுந்தன.
இவர், துணைவேந்தராக வந்ததும், காலியாக உள்ள பேராசிரியர், இணை, உதவி பேராசிரியர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்காக, ஐந்து லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளதாக, இதே பல்கலையில் ஆய்வு உதவியாளராக இருந்த தேவகுமார், குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

அவர் கூறியதாவது: பணி நியமனங்களில் பணி மூப்பு, இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. பணத்திற்காக பல பதவிகளை உருவாக்கி, துணைவேந்தர் நியமனம் செய்துள்ளார். எழுத்தர் உள்ளிட்ட, 25 பதவிகளுக்கு, 10 லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை பெற்று, பணி நியமனம் செய்துள்ளார்.

பேராசிரியர் பணிக்கு அதிகபட்சமாக, 50 லட்சம் வாங்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் என்னை நிரந்தரம் செய்ய, 15 லட்சம் ரூபாய் கேட்டார். இது குறித்து, கவர்னிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 'துணைவேந்தர் பதவிக்கு, மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து தான் வந்துள்ளேன். யார் பணம் கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு மட்டும் தான் பணி வழங்குவேன்' என, என்னிடம் நேரடியாக கூறினார்.

திருவாரூர் மத்திய பல்கலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு, பணம் பெற்று, பணி வழங்கி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, துணைவேந்தர் பாஸ்கரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: பணி நியமனங்களில், எள் அளவும் விதிமீறல் இல்லை. வல்லுனர் குழுக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே, பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. என் மீது குற்றம் சாட்டும் தேவகுமார், இன்று வரை முனைவர் பட்டமே பெறாதவர்.

உயர் நீதிமன்றமே, 'உதவி பேராசிரியர் பணியிடத்தில் நியமிக்க, இவர் தகுதியற்றவர்' என, கூறியுள்ளது. நாகை அரசு மருத்துவமனை மூலம், கண் பார்வை குறைபாடு, 40 சதவீதம் என்பதை, 60 சதவீதமாக திருத்திக் கொடுத்தவர் தான் தேவகுமார்.மேலும் அவர், மிரட்டி பதவி பெற வேண்டும் என, பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார். பணம் கொடுத்து துணைவேந்தர் பதவிக்கு வந்தேன் என நிரூபித்தால், இந்த பதவியில் இருந்து செல்ல தயாராக இருக்கிறேன்.

பணி நியமன நேர்காணல்கள், எந்த பல்கலையிலும் இல்லாத நடைமுறையாக, 'வீடியோ'வில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. என் மீதான குற்றச்சாட்டில், 100 சதவீதம் உண்மை இல்லை. சத்தியமாக, உறுதியாகச் சொல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டரிடம் மனு


இதற்கிடையில், தஞ்சை தமிழ் பல்கலை ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என, 100க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு அளித்தனர். அதில், 'சில நாட்களாக, பல்கலையின் நல்ல பெயரை சிதைக்கும் நோக்கோடு, பல்கலை பணியாளர்கள் சிலர், வெளி நபருடன் இணைந்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். பல்கலை துணைவேந்தர் பாஸ்கரனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்கின்றனர். துணைவேந்தர் மீது அவதுாறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.

இந்த இரு பல்கலை விவகாரங்களையும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார். ஏற்கனவே, பெரியார் பல்கலை தொடர்பான விசாரணைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் தஞ்சை பல்கலையும் விசாரணை வளையத்துக்கு உட்படுத்தப்படும் என, தெரிகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
16-பிப்-201815:26:58 IST Report Abuse

Gnanasekaran Vedachalamஊழல் முகாந்திரம் உள்ள அனைத்து துணை வேந்தர்களையும் வேந்தர் அறவே நீக்கி விட்டு ஒரு சிறந்த கல்வியாளனை எந்த வித பண பயன் இல்லாமல் முதன்மை துணை வேந்தராக ஒருவரை நியமனம் செய்து அனைத்து பல்கலை கழகத்தின் நடவடிக்கையை கவனிக்க வைக்கலாம்

Rate this:
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
16-பிப்-201815:17:46 IST Report Abuse

Gnanasekaran Vedachalamநல்ல பல்கலை கழகம் ஒரு குடும்பம் அப்படி என்றால் என்ன குடும்ப தலைவர் கண்ணியம் கட்டுப்பாடு கடமை ஒழுக்கம் நேர்மை வாய்மை ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு குடும்பம் நல்ல முறையில் நடை பெற வழி வகை செய்யும் தற்போழோடு பல பல்கலை கழக துணை வேந்தர்கள் ஒழுக்க குறைவான தகாத செயல்களில் ஈடுபட்டு உள்ளதால் இவர்களால் எப்படி பல்கலை கழகத்தை வழி நடத்தி செல்ல முடியும் மாணவர்களின் எதிர்காலம் என்னாவது தான்தோன்றி தனமான பணி நியமனம் ஊழல் சம்மந்த படாத என்கெய் மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் தர்ம சங்கடமாகவும் உள்ளது என்றால் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர் கண்டும் காணாமல் ஒதுங்கி போக முடியாதே

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201804:02:48 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்.. போதக்கண்ணாடி வேண்டுமானால் அனுப்பட்டுங்களா? விரைவில் தஞ்சை பல்கலையும் விசாரணை வளையத்துக்கு உட்படுத்தப்படும் என, தெரிகிறது. - அதாவது இன்னமும் ஒண்ணும் ...ல்லைங்க.. இந்த விஷயம் வெளியே கசிந்து, இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்தும், இன்னமும் ..டும் தான்..

Rate this:
மேலும் 119 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X