நவீன பேனாவில் 'ட்ரிப் ஷீட்' எழுதி மோசடி.. சப்--கலெக்டர் ஆய்வில் முறைகேடு அம்பலம்| Dinamalar

தமிழ்நாடு

நவீன பேனாவில் 'ட்ரிப் ஷீட்' எழுதி மோசடி.. சப்--கலெக்டர் ஆய்வில் முறைகேடு அம்பலம்

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
நவீன பேனாவில் 'ட்ரிப் ஷீட்' எழுதி மோசடி.. சப்--கலெக்டர் ஆய்வில் முறைகேடு அம்பலம்

திருப்பூர் : எழுத்து மறையும் நவீன பேனாவில் 'ட்ரிப் ஷீட்' எழுதி, பலமுறை அதை பயன்படுத்தி, மண் குவாரிகளில் மோசடி நடந்துள்ளதை, சப்--கலெக்டர் அதிரடி ஆய்வு செய்து, இதை உறுதி செய்தார்.

திருப்பூர் மாவட்டத்தில், 1,500க்கும் அதிகமான கல் குவாரிகள்; கிராவல் மண் எடுக்கும் மண் குவாரிகள் உள்ளன. மணல் தட்டுப்பாடு உள்ளதால், 'எம் சாண்ட்' மணலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.குவாரிகளில் இருந்து கல், மண் எடுக்க, கனிமவளத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதிகாரிகள், ஒரு மாதத்துக்கு எடுத்துச் செல்லும் உத்தேச அளவை கணக்கிட்டு, அதற்கேற்ப, 'ட்ரிப் ஷீட்' வழங்குகிறது.

குவாரி உரிமையாளர், ஒவ்வொரு நடைக்கும் 'ட்ரிப் ஷீட்' எழுதி, எந்த தேதியில், எந்த நேரத்தில், யாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்ற விவரத்தை குறிப்பிட்டு, லாரி டிரைவரிடம் கொடுத்து அனுப்ப வேண்டும். ஒரு'ட்ரிப் சீட்'டில் ஒருமுறை எழுதிவிட்டால், மீண்டும் பயன்படுத்த முடியாது.ஆனால், ஊத்துக்குளி அருகே உள்ள கல் மற்றும் கிராவல் மண் குவாரியில், நவீன பேனாவில் எழுதி, ஒரே 'ட்ரிப் ஷீட்'டை பலமுறை பயன்படுத்தி மண் எடுக்கப்பட்டு வந்தது.

இதையறிந்த சப் கலெக்டர் ஷ்ரவன்குமார், நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்து, கையும் களவுமாக பிடித்துள்ளார். சூடு பட்டதும் தானாக மறையும் தன்மையுள்ள, நவீன 'இங்க்' பேனாவை பயன்படுத்தி, இந்த முறைகேடு நடந்துள்ளது.

சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறியதாவது: ஊத்துக்குளி, காவுத்தம்பாளையத்தில் உள்ள பொன்னுசாமி என்பவரின் குவாரியில் ஆய்வு நடந்தது. சாதாரண பேனாவில் 'ட்ரிப் ஷீட்' எழுதினால், அதை மீண்டும் பயன்படுத்த முடியாது.

இதற்காக, எழுத்து மறைந்துவிடும் நவீன 'இங்க்' பேனாவை பயன்படுத்தி, 'ட்ரிப் ஷீட்' எழுதி, அதை பலமுறை பயன்படுத்தி, முறைகேடு செய்துள்ளனர். இந்த பேனாவில் எழுதிய 'ட்ரிப் சீட்'டின் கீழே, 'லைட்டர்' மூலம் சூடேற்றினால், உடனே அந்த 'இங்க்' பேனாவில் எழுதியவை மறைந்துவிடும். அதில், மீண்டும் மற்றொரு நேரத்தை குறிப்பிட்டு, கருங்கல், மண் ஆகியவற்றை பலமுறை எடுத்துச்சென்று, மோசடி நடந்துள்ளது.

இதையடுத்து, அந்த குவாரிக்கு 'சீல்' வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேட்டை தடுக்க, பேனாவுக்கு பதில், 'ரப்பர் ஸ்டாம்ப்' மூலம் நேரத்தை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் குவாரிகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement